ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.
‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள விஜயா ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இயக்குநர் சார்லஸ், ”படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதனைப் படம் பார்க்கும் போது தெரியும். நான் இயக்கிய முதல் படமான ‘லாக்கப்’ த்ரில்லர் திரைப்படமாக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கினேன். இந்தத் திரைப்படமும் குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்தத் திரைப்படத்தின் கதை, நம்முடைய வீட்டின் பக்கத்து வீடுகளில் நடைபெறும் கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்தத் திரைப்படத்தில் ‘சொப்பன சுந்தரி’யாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்வதன் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமல்ல, லக்ஷ்மி பிரியா மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் தங்களின் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.
இந்தத் திரைப்படம் திருக்குறள் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தைத் தெரிந்து கொள்வார்கள்” என்றார்.
‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அஜ்மல் தஹ்ஸீன், இரண்டு பாடல்களை மேடையில் நேரலையாகப் பாடிப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.