Shadow

“சொப்பன சுந்தரி – என் முதல் கமர்ஷியல் படம்” – லக்ஷ்மி பிரியா

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.

‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள விஜயா ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு, விவேக் ரவிச்சந்திரன், ”இயக்குநர் சார்லஸிடம் கதை கேட்டோம். கதை பிடித்திருந்தது. காமெடி எண்டர்டெய்னராக இருந்தது. பத்து நாட்களில் படத்தின் பணிகளைத் தொடங்கினோம். சொன்ன கதையை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். டார்க் காமெடி, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, இசை, எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி, தீபா சங்கர் என மூன்று நாயகிகள், திரையரங்கத்திற்குக் குடும்பத்துடன் வந்து ரசிப்பதற்கான நிறைய நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் இருப்பதால், ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றனர்.

நடிகை லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி, ”இந்தத் திரைப்படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நான் பின்னணி பேசவில்லை. முதல்முறையாக இந்தப் படத்தில் நடனமாடி இருக்கிறேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதல் முறையாக கமர்ஷியல் படங்களில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. நகைச்சுவைக் காட்சிகள் திரையில் மட்டுமல்லாமல் திரையின் பின்னணியிலும் நடைபெற்றது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் உற்சாகமாகப் பணியாற்றினோம்” என்றார்.

‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அஜ்மல் தஹ்ஸீன், இரண்டு பாடல்களை மேடையில் நேரலையாகப் பாடிப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.