Shadow

ஸ்பைடர் விமர்சனம்

Spyder Tamil review

தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம்.

பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன்.

இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்குப் பிறகு, உதட்டசைவும் குரலும் பொருந்திப் போகிறது. சத்தமில்லாமல் மென்மையாக, அதே சமயம் தீர்க்கமான குரலில் ஒலிக்கும் மகேஷ் பாபுவின் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது. மொட்டை மாடியில் நிற்கும் லிஃப்டில் இருந்து வெளிவரும் மகேஷ் பாபு, முறைக்கும் நாயகியைப் பார்த்துக் கொடுக்கும் ரியாக்ஷன் ரொம்பவே க்யூட். ஆனால் இக்கதை, மகேஷ் பாபு போன்ற சூப்பர் ஸ்டாருக்கானது இல்லை. தன் படத்தின் நாயகனாக மகேஷ் பாபுவை முருகதாஸ் மாற்றியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

படம் அதகளமாவது வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவால்தான். மிரட்டியுள்ளார். கீழ் உதட்டின் துடிப்பைக் குரூரமான புன்னகையாக மாற்றுவது, கண்ணில் வழியும் ஒற்றை துளி கண்ணீரை ஊதித் தள்ளுவது, “அப்போ ஒன்’ஓ கிளாக் நீ வரலையா?” என எள்ளலாகக் கேட்பது, க்ளைமேக்ஸில் துள்ளிக் குதித்து ஓடுவது என எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் ரசிக்க வைக்கிறது. ‘டார்க் நைட்’ ஜோக்கரது பாத்திரத்தை நினைவுப்படுத்தும் அவரது கதாபாத்திரத்திற்கு ஃப்ளாஷ்-பேக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். “சுடலை” என்ற பெயருடன் அறிமுகமாகும் அந்தச் சிறுவனின் மனநிலையை அவ்வாறாகச் சித்தரிக்க, மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அவநம்பிக்கை கொண்டாலே மட்டும் இயலும்.

நாயகியின் அறிமுகம் நன்றாக உள்ளது. டாக்டர் சார்லி பாத்திரத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் பொருந்துகிறார் எனினும் அவரை லூசுப் பெண்ணாக முடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. மகேஷ் பாபு ரகுலை ட்ராக் செய்து, ஒரு மேம்பாலத்தில் இருந்து, சாலையின் கீழே சென்று கொண்டிருக்கும் ஆட்டோவைத் துரத்திப் பிடித்து ரகுலிடம் பேசுவது, மிகச் சீரியசான காட்சி என்றாலும், ஷ்ஷ்ப்பாஆஆ என்றிருக்கிறது. 1000 டன் பாறை சாலையில் உருண்டோடி வரும் காட்சியும் தேமோவெனப் படத்தோடு ஒன்றாமல் வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மனதில் ஒட்டாமல் ஒலித்து மறைகிறது. பாடல் காட்சிகளிலும், தெலுங்குப் படங்களுக்கே உரிய நிறமும் தரமும் உடைகளும் இல்லை. 

மகேஷ் பாபு, எஸ்.ஜே.சூர்யாவைப் பிடிப்பதோடு படம் நிறைவாய் முடிந்து விடுகிறது. அதன் பின்னரான 25 நிமிடங்கள், க்ளைமேக்ஸ் உட்பட, படத்தின் முந்தைய விறுவிறுப்பை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது. மிகச் சுமாரான தொடக்கமும், ஹீரோ அறிமுக பாடலும் முடிந்து கதை தொடங்கியதும் தொடங்கும் சுவாரசியம், எஸ்.ஜே.சூர்யா பிடிபடும் வரை குறையாமல் உள்ளது. குறிப்பாக, தெருவிலுள்ள சீரியல் பார்க்கும் சாமானிய பெண்களை உபயோகித்து எஸ்.ஜே.சூர்யாவைப் பிடிக்கும் காட்சி அருமையாக உள்ளது. அந்தக் காட்சியில், ஒரு பெண்மணி, “நான் கள்ளக்குறிச்சி பெண்” என வீராவேசம் கொள்வது சீரியஸ் காட்சியில் சட்டெனப் புன்னகையை வர வைக்கிறது. கதைக்களமோ ஹைதராபாத். எல்லாத்துக்கும், மதுரைக்காரங்களாக தமிழ் சினிமாவில் தோன்றிய/தோன்றும் கதாபாத்திரங்களைச் சொல்லணும்! படத்தின் இன்னொரு நகைச்சுவை, “ரமணா” படத்து காவல்துறை உயரதிகாரிகள் போல் இப்படத்துக் காவலர்களும் எதுவுமே கண்டுபிடிக்காமல், புலனாய்வுத் துறையில் பணி புரியும் நாயகன் சொல்வதை மட்டுமே வேதவாக்காக ஏற்பதுதான்.

‘அறிமுகம் இல்லாத மனிதனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் உதவிதான் மனிதாபிமானம்’. நெருக்கடிகளில் மட்டுமல்லாமல், எப்பொழுதுமே மனிதாபிமானம் மிகுந்து, ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதே ஸ்பைடர் படத்தின் சிறப்பு.