சன்னி லியோனை யாரென அறியாதவரும் உண்டோ? சமீபமாக அவரது வரவால் கேரளாவின் கொச்சி நகரம் ஸ்தம்பித்தது எல்லாம் வரலாறு. அவ்வளவு புகழ் மிக்க சன்னி லியோன், நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதைத் தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்தியக் கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். போராளிகள் தோளை உயர்த்தி டென்ஷன் ஆக வேண்டாம். ஏனெனில், சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு சிறப்பம்சம் என்னெவென்றால், இது ஒரு சரித்திரப் படமும் கூட! இப்படத்திற்காகக் கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்புப் பயிற்சியாளர் மும்பைக்குப் போய் சன்னி லியோனுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்தப் பிரம்மாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் தேவைப்படுகிறதாம். பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் தலைப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
“இந்தப் படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்குச் சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காகத் தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு நேரடி தென்னிந்தியப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்” என்றார் நடிகை சன்னி லியோன்.
பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது படத்தின பூர்வாங்க வேலைகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நாசர், நவ்தீப் ஆகியோருடன் பிரபல நடிகர் ஒருவரும் கதாநாயகன் ஆக நடிப்பார் எனத் தெரிகிறது.