Shadow

என்று நிற்கும் இந்த அடாச்செயல்?

Say no t corporal punishment

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பது பழமொழி. சில தசாப்தங்களுக்கு முன், ஆசிரியர்களின் கையில் இருந்த பிரம்பு, பல மாணவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலாக இருந்தது. காலத்தின் வேகமான மாற்றத்தில், சேவையாய்ப் பார்க்கப்பட்ட கல்வி, வியாபாரமாய்ப் பரிணாமம் அடைந்து சொல்லொண்ணா சிக்கல்களைச் சமூகத்தில் கொண்டு வந்ததிலிருந்து, மாணவர்களின் மாற்றத்திற்கு உதவிய மந்திரக்கோல் மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது.

இதை அவதானித்த அரசாங்கமும், மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்களுக்குத் தடை விதித்துள்ளது. அறிவை வளர்க்க என்றிருந்த கல்வி, எப்பொழுது மதிப்பெண் வேட்டையாக மட்டும் மாறியதோ, அன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கண்ணியாக மாணவர்கள் மீது மன அழுத்தம் படர ஆரம்பித்துவிட்டது. சமீபமாக வேலூரில் நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதையும், சத்யபாமாவில் ஒரு கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை கொண்டதையும் நாம் எளிதில் மறந்து விட முடியாது. ஒவ்வொரு முறையும் இப்படியான சங்கதிகள் கேள்விப்படும் பொழுதெல்லாம் இனம் புரியாத பயம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் சூழ்ந்து கொள்கிறது. நம் காலத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வருடமும், பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வரும் பொழுது, எந்த மாணவரும் தற்கொலை புரிந்து கொள்ளக் கூடாது என்பது சமூகத்தின் பொதுவான கவலையாக எழுகிறது.

அரசாங்கம் கடுமையாக எச்சரித்தும், சென்னைப் புரசைவாக்கத்திலுள்ள முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சக்திவேல் பாண்டியன் எனும் ஆசிரியர், கணினி லேபில் 11 மாணவர்களைக் குச்சியால் விளாசியுள்ளார். சிசிடிவி-இல் பதிவான இச்சம்பவத்தைக் கண்ட பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ரவி சங்கர், “அரசாங்கம் தடை விதித்திருந்தும், மாணவர்களை இப்படி அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இவ்விஷயத்தில் நாங்கள் மிகக் கவனமாக இருப்போம். கடுமையாகத் தண்டிக்கக்கூடாது, குறிப்பாக அடிக்கவே கூடாதென ஆசிரியர்களிடமும் சொல்லி இருந்தோம்” எனச் சொல்லியுள்ளார்.

மாணவர்களை அடித்தாலோ, கோபமாக அவர்களைத் திட்டினாலோ, அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள், மாணவர்களை எப்படிக் கையாள்வதென அப்பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்குக் கவுண்சிலிங்கும் கொடுத்துள்ளது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது பாராட்டத்தக்க விஷயம். இனி இது போல் அப்பள்ளியில் நிகழாமல் இருக்க, இந்தச் சஸ்பென்ஷன் ஒரு முன்மாதிரியாகவும் இருக்கும்.

ஆசிரியருக்குக் கண்டணங்கள்; பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.