Shadow

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

Independence-day---Krishnan-Nambi

“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.”

“என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன்.

ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது.

“இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன.

இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண்களைக் கிறுக்கிவிட்டு, பென்சிலைக் காதில் மாட்டிக் கொண்டபடி திரும்புகிறான். “ஆத்தாகிட்டே கேட்டுக் கொஞ்சம் மோர்த்தண்ணி வாங்கிட்டு வா” என்று தன் தம்பிக்கு உத்தரவிடுகிறான். சில நிமிஷங்களுக்கு முன்புதான் வயற்காட்டிலிருந்து திரும்பி வந்திருக்கிறான் பாண்டியன்.

சமையற்கட்டுக்கு ஓடிப்போய் ஈயச்செம்பு ஒன்றில் வழிய வழிய நீர்மோருடன், தூக்க முடியாததைத் தூக்கிக் கொண்டு வரும் சிரமத்துடன் வருகிறான் கருப்பையா. அவன் கையிலிருந்து செம்பைச் சிரித்தபடி வாங்கி மடமடவென்று, அண்ணாந்து, ஒரே மூச்சில் குடித்துவிட்டுச் செம்பைக் கீழே வைக்கிறான் பாண்டியன்.

“எப்போ செஞ்சு கொடுப்பே அண்ணாச்சி?”

“நீ வெளையாடப் போ; ராத்திரி செஞ்சுவெக்கிறேன். காலையில் எந்திரிச்சுப் பாரு. ஒம் பக்கத்திலே கொடி இருக்கும்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டுக் கொல்லைப்பக்கத்தை நோக்கிப் போகிறான், பாண்டியன். எவ்வளவோ வேலை அவனுக்கு. ஆனாலும் தன் தம்பிக்குக் கொடி செய்து கொடுக்காமலிருக்க மாட்டான். அந்த அண்ணன்க்கும் தம்பிக்கும் தாய் தந்தையர் இல்லை என்றாலும், அந்தத் தம்பிக்குத் தாயும் தந்தையுமாக இருக்கிறான் அந்த அண்ணன். அந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் சோறு பொங்கிப் போட அந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காள் ஓர் ஆத்தாள். தூரத்து உறவினளான அவள் மிகுந்த சலுகையுடன் இருக்கும் ஒரு சமையற்காரி என்பதற்கு மேலாக எதுவுமில்லை.

கொடிக்கு வர்ணக் காகிதம் எந்தக் கடையில் கிடைக்கும் என்று யோசித்தபடி மாடுகளுக்கு வைக்கோல் பிடுங்கி வைக்கிறான் பாண்டியன்.

விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் கருப்பையா ஆத்தாளிடம் போய், “அண்ணாச்சி எங்கே?” என்று கேட்கிறான். கடைத்தெருவுக்குப் போயிருப்பதாகத் தெரிவிக்கிறாள் அவள். சோறு சாப்பிட்டுவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் படுக்கப் போகிறான் கருப்பையா.

பாண்டியன் கடைத்தெருவுக்குப் போய்விட்டுத் திரும்பி வருகையில் மணி ஒன்பது அடிக்கிறது. அவன் கையில் வர்ணக் காகிதங்களின் ஒரு சுருள். “பய தூங்கிட்டான் போல் இருக்கு” என்று முணுமுனூத்தபடி தன் தம்பியின் அருகே செல்லுகிறான் அவன். குறுநகை இதழில் விளையாட, நித்திராதேவியின் அரவணைப்பில் ஆழ்ந்து கிடக்கும் தன் தம்பியின் பட்டுப் போன்ற அழகிய கிராப்புக் கேசத்தை மிகுந்த கனிவுடன் வருடுகிறான்.பிறகு எழுந்து சாப்பிடப் போகிறான். ஆத்தாளிடம் கோந்து காய்ச்சிக் கொண்டுவரச் சொல்லிவிட்டு நடுக்கூடத்தில் வந்து அமர்கிறான்.

வர்ணக் காகிதங்கள் விரிந்து சலசலக்கின்றன. கத்திரிக்கோல் கிர்ரிடுகிறது. கோந்து பசபசக்கிறது. வெகு நாட்களாகத் துணி உலர்த்தும் கொடியாகத் தொங்கிக் கிடக்கும் மெல்லிய, பலமமான ஒரு மூங்கிற்கழி இரண்டு துண்டாக, இரண்டில் ஒன்றின் கூர்ந்த நுனிப்பாகத்தைப் பாரததேவியின் வெற்றிச்சின்னமான மூவர்ணக்கொடி தழுவி அலங்கரிக்கிறது. கொடிக்கம்பெங்கும் வர்ணக் காகிதங்களைச் சுற்றிச் சுற்றி ஒட்டி எழிலூட்டுகிறான் பாண்டியன். எல்லையற்ற பக்தி சிரத்தையுடன், இறைவனுக்கு மலர் தூவும் அடியவரின் வினயத்துடன் கொடி செய்து முடிக்கிறான் அவன். செய்து முடித்த கொடியைக் கருப்பையாவின் படுக்கையருகில் சுவரில் சாய்த்து வைத்துவிட்டு அவன் நித்திரைக்குச் செல்லுகையில் மணி ஒன்றோ ஒன்றரையோ!

கருப்பையா காலையில் கண் விழிக்கும்போது அருகில், சுவரில் சாய்ந்து ஓய்வுகொண்டிருக்கும் அந்த அழகிய மூவர்ணக் கொடியைப் பார்க்கிறான். அவன் மனசு துள்ளிக் கிளுகிளுக்கிறது. “அண்ணாச்சி அளகாக் கொடி செஞ்சிட்டாரு. பொத்தகத்திலே கொடி நல்லால்லே. இது ரொம்ப நல்லா, அளகா இருக்கு. பச்சை, வெள்ளை, சேப்பு சொப்பனத்திலே வந்தாப்ல தங்கச் சக்கரம், கொடி ஜோராயிருக்குடோய்!”

விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்திருக்கிறான் கருப்பையா. அவசர அவசரமாகப் படுக்கையைச் சுற்றி வைக்கிறான். கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு பின்கட்டுக்குப் போகிறான். கிணற்றில் நீர் மொண்டுகொண்டிருக்கும் ஆத்தாளிடம் பெருமையாகக் கொடியைக் காட்டி, “அண்ணாச்சி செஞ்சி கொடுத்தாரு!” என்கிறான்.

“எதுக்குடா இது?”

“எதுக்கா? என்ன ஆத்தா நீ! இஸ்கூலுக்கு இன்னைக்கு மத்தியானம் கொடி கொண்டுக்கிட்டுப் போகணும், எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்றான் அவன்.

“எதுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும்?”

“சொதந்திர தினமில்லா? அதுக்கு!” என்று சொல்லிவிட்டுக் கொல்லைப் பக்கத்தைப் பார்த்து நடக்கிறான் அவன். ஆத்தாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘சொதந்திர தெனமாமே; அது என்ன தெனமோ?” என்று முணுமுணுக்கிறாள் அவள்.

கொடியை வலக்கையில் சற்றுத் தோள்மீது சாய்த்தபடி பிடித்துக் கொண்டு கம்பீரமாக, பட்டாளத்துச் சிப்பாயைப் போல் நடக்கிறான் அவன். அவனுக்கு ஒரே உற்சாகமாக இருக்கிறது.

மத்தியானம் இரண்டு மணிக்கு எல்லா மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு வந்துசேர வேண்டும். எல்லாரும் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக்கொண்டு வரவேண்டும். தவறாமல் எல்லாரும் கொடி பிடித்துக் கொண்டு வரவேண்டும். அந்தக் கிராமத்துக்கு, அந்தச் சின்னப்பள்ளிக்கூடத்துக்குக் கலெக்டர் வருகிறார். அவர் கொடியேற்றி வைப்பார். கலெக்டர் வரும்போது எல்லா மாணவர்களும் ஒழுங்காக அணி வகுத்து நிற்கவேண்டும். எல்லாருக்கும் டீ பார்ட்டி. எல்லா மாணவர்களும் தலைக்கு நாலணாக் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தின் கதவு இல்லாத ‘கேட்டில்’ வாழைக்குலைகள் இரண்டு, கொண்டை ஆட்டுகின்றன. எங்கும் தோரணங்கள். சின்னக் ‘காம்பவுண்டி’ன் மத்தியில் ஓங்கி வளர்ந்த ஓர் கம்பம். அந்தக் கம்பத்தின் உச்சி மிகப் பெரிய தேசக்கொடியை ஏற்றிவைக்க கலெக்டர் வருகிறார். அவர் அழகான காரில் வருவார். அந்த அழகான காரை எல்லாரும் பார்க்கலாம்.

பள்ளிக்கூடத்துச் சுவரெல்லாம் புதிதாக வெள்ளையடித்திருக்கிறார்கள். அசிங்கம் பிடித்த ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுக்குப் புத்தாடை உடுத்தி விட்டது போல காட்சியளிக்கிறது, அந்தப் பழைய கிராமப் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்துப் பெஞ்சுகள், மேசை நாற்காலிகள் எல்லாம் கழுவித் துடைத்துச் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. வாத்தியார்களின் பெரிய கரும்பலகைகளில் புதிதாகக் கறுப்பு வர்ணம் பூசியிருக்கிறது. தேசப்படங்கள் தூசி தட்டப்பட்டுப் பளபளவென்று இருக்கின்றன. ஹெட்மாஸ்டரின் அறையிலுள்ள காந்தி மகாத்மா திருவுருவப் படத்துக்கு அன்று பெரிய ரோஜாமாலையும் கதர் மாலையும் அணிவித்திருக்கிறார்கள். சேவகன் அருணாசலம் எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறான். டீ பார்ட்டிக்குச் சிற்றுண்டிகள் தயாரிக்க ஒரு கெட்டிக்காரச் சமையற்காரரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது. சமையற்காரர் ஜிலேபி செய்து முடித்துவிட்டார். பள்ளிக்கூடத்தின் பின்பக்கம் ஒரு சிறிய கீற்றுக் கொட்டகை போட்டிருக்கிறார்கள். அதில்தான் எல்லாம் செய்கிறார்கள். சமையற்காரருக்கு உதவியாக அருணாசலம் ஓடியாடி வேலை செய்கிறான். வடைகள் கொதிக்கும் எண்ணெயில் முங்கி முங்கி எழுந்து நீந்துவதை சில மாணவர்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொஞ்ச்சம் முன்னாலேயே பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டார்கள். புது வடையின் மணத்தை அவர்கள் சுகமாக உள்ளே இழுத்து ரசிக்கிறார்கள். ‘போங்க, போங்க’ என்று சமையற்காரர் அவர்களை விரட்டுகிறார். போவது மாதிரி போய்விட்டு மீண்டும் மீண்டும் வந்து அவர்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.

கருப்பையா பள்ளிக்கூடத்துக்குப் புறப்படத் தயாராகிறான். அண்ணன் பாண்டியன் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயற்காட்டிலிருந்து வீடு திரும்பிவிடுகிறான்.

காக்கி நிஜாரும், நீலச்சட்டையும் அணிந்துகொண்டு புறப்படுகிறான் கருப்பையா. அந்த டிரஸ் அவனுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! கிராப்புச் சரியாக இல்லை என்று மீண்டும் வகிடு எடுத்து வாரி விடுகிறான் அண்ணன்.

மணி ஒன்றடிக்க ஐந்து நிமிஷம் இருக்கிறது. கருப்பையாவையும் அழைத்துக் கொண்டு போவதற்காக அடுத்த தெருவிலிருக்கும் அவனுடைய சிநிகேதன் முத்தையா வருகிறான். அவனும் நன்றாக உடை அணிந்துகொண்டிருக்கிறான். அவன் கையிலும் ஒரு மூவர்ணக் கொடி. “வாறியா கருப்பையா, நேரமாச்சு” என்ற் அவசரப்படுத்திக் கொண்டே வருகிறான் அவன்.

“வா தம்பி” என்று தன் தம்பியின் சிநிகேதனுக்கு அன்பாக முகமன் கூறுகிறான் பாண்டியன். அந்தப் பையன் சற்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டு வாசலிலேயே நிற்கிறான்.

“உள்ளே வாடா, தம்பி” என்று கனிவாக அழைக்கிறான் பாண்டியன். முத்தையா கொடியும் கையுமாக உள்ளே வருகிறான். “கொடி யாரு செஞ்சு கொடுத்தது” என்று வினவுகிறான் பாண்டியன்.

“எங்க அக்கா செஞ்சு கொடுத்தா.”

“ஒங்க அக்காளா? தங்கமா? நல்லா செஞ்சிருக்காளே!” என்று புன்னகை செய்கிறான் பாண்டியன்.

உடனே கருப்பையா ஓடிப்போய்த் தன் கொடியை எடுத்து வந்து சினேகிதனிடம் காட்டுகிறான். இரண்டு கொடியும் ஏறக்குறைய ஒன்று போலவே இருக்கின்றன.

“எது நல்லாருக்கு, அண்ணாச்சி?” என்று கேட்கிறான் கருப்பையா.

“ரெண்டுமே நல்லாருக்கு!” என்று சிரிக்கிறான் பாண்டியன்.

முத்தையாவின் கொடியை ஒரு முறை கூர்ந்து நோக்கி விட்டு கருப்பையா சட்டென்று சொல்லுகிறான், “அந்தக் கொடீல சக்கரம் இல்லேண்ணாச்சி!”

கண்களை அகல விரித்தபடி ‘என்ன?’ என்று பார்க்கிறான். ஆம், முத்தையாவின் கொடியில் சக்கரம் இல்லை. அவனுடைய அக்காள் சக்கரம் வைக்க மறந்துவிட்டாள் போல் இருக்கிறது.

முத்தையாவின் முகத்தில் ஓர் அசட்டுச் சிரிப்பு.

“ஏண்டா?” என ஆச்சரியப்படுவதுபோல் கேட்கிறான் பாண்டியன்.

“எங்கக்காக இப்படித்தான் செஞ்சு கொடுத்தா” என்கிறான் அந்தச் சிறுவன்.

உடன் தானே எழுந்து போய் அலமாரியைத் திறந்து, பொன்வர்ணக் காகிதம் ஒன்றையும் கத்திரிக்கோலையும் எடுத்து வந்து பரபரப்பாக ஒரு சக்கரம் கத்தரித்து, ஆத்தாளிடம் கொஞ்சம் சோற்றுப்பசை வாங்கிவந்து முத்தையாவின் கொடியின் மத்தியில் சக்கரத்தைப் பதிக்கிறான் பாண்டியன்.

இதனால் தனக்கு ஏதோ தோல்வி ஏற்பட்டதுபோல் நினைக்கிறான் கருப்பையா. “நேரமாச்சு அண்ணாச்சி; இப்பப் போய் இதை ஒட்டிக்கிட்டுருக்கிறியே” என்று முகத்தில் கடுகடுப்பைக் காட்டுகிறான் தம்பி.

“சரி சரி, பொறப்படுங்க; மணி ஒண்ணுதானே களிஞ்சிருக்கு; நேரமிருக்குல்லா? போங்க” என்று இருவரையும் வீட்டு வாசல்வரை கொண்டுபோய் விட்டு உள்ளே திரும்புகிறான் பாண்டியன். கருப்பையா வாசலில் நின்றபடியே, “ஆத்தோவ், இஸ்கூலுக்குப் போறேன்” என்று கத்துகிறான்.

முடிந்தவரையில் குரலை உயர்த்தி, “சரி, போயிட்டு வா” என்கிறாள் கிழவி; பிறகு, “போறேன்னு சொல்லப்படாது. போயிட்டு வாறேன்னு சொல்லணும்” என்று கருப்பையாவுக்குச் சொல்லுவதுபோல் தனக்குள்தானே சொல்லிக் கொள்கிறாள்.

கும்பல் கும்பலாக மாணவர்களும் மாணவிகளும் பள்ளிக்கூடத்தை வந்தடைகிறார்கள். விதவிதமான அளவுகளில், விதவிதமான வர்ணங்களில், விதவிதமான காகிதங்களில் கொடிகள் தாங்கி விதவிதமாக வருகிறார்கள். சில கொடிகள் மூன்றாம் பாடப்புத்தகத்துக் கொடியைப் போல்வே இருக்கின்றன – கறுப்பும் வெள்ளையுமாக. வேறுசில கொடிகளில் கொடி என்று பெரிதாக எழுதியிருக்கிறது. இன்னும் சில கொடிகள் நியூஸ் பேப்பர் கொடிகள், அட்டைக்கொடிகள், பழைய நினைவில் பிறந்த ராட்டை போட்ட கொடிகள் – எல்லாம் வருகின்றன.

ஓ! எத்தனை எத்தனை கொடிகள்; எத்தனை குதூகலம், எத்தனை அட்டகாசம்! எத்தனை விதமான குழந்தைகள்! ஓ! எத்தனை உற்சாகம்!

அன்று இயற்கையும் வெகு உல்லாசமாக, மாமனார் வீட்டுக்கு வந்திருக்கும் புது மாப்பிள்ளை மாதிரி இருக்கிறது; தண்மை நிறைந்த மாருதம் சிலுசிலுத்துக் குழைகிறது. மழை முகில்கள் பொதிபொதியாக வானில் கவிந்து நீந்தி மிதக்கின்ற்ன. இடையிடையே, சூரியன் சோதிமயமான வெண்பற்களைக் காட்டிச் சிரிக்கிறான். காற்றை முத்தமிட இதழ் குவிப்பதே போன்று மரக்கிளைகள் காற்றின் திசையில் குவிந்து நீளுகின்றன.

பள்ளிக்கூடத்துக் காம்பவுண்டுக்குள் அநேகமாக எல்லா மாணவர்களும் வந்துசேர்ந்துவிட்டார்கள். ஐயரின் கீற்றுக் கொட்டகையைச் சுற்றி முன்னை விடவும் கும்பல் இப்போது அதிகமாக இருக்கிறது. மிக்ஸ்சருக்காகச் சமையற்காரர் வறுக்கும் வேர்க்கடலையின் அற்புதமான மணம் கமகமவென்று சுற்றிலும் குறைந்து சூழ்கிறது. டீ பார்ட்டியைச் சமாளிப்பதற்காக மத்தியானச் சாப்பாடு சாப்பிடாமல் வந்திருக்கும் பையன்களை இப்போது பசி அரிக்கத் தொடங்குகிறது.

கருப்பையாவும் சாப்பிடாமல்தான் வந்திருக்கிறான். ஆத்தாளிடம் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டான்; முத்தையாவை நெருங்கி, “நல்லா பசிக்கிடா” என்கிறான் அவன். “எனக்குப் பசிக்கல்லே; வூட்லே சோறு திண்ணுட்டுத்தான் வந்தேன்” என்று திருப்தியோடு கூறுகிறான் முத்தையா. தீனியைப் பொறுத்த வரையில் மிகுந்த முன்னெச்சரிக்கையுள்ள பையன் அவன்.

‘காம்பவுண்டி’ன் ஒரு மூலையில் அளிசமரம் ஒன்று நிற்கிறது. சில பையன்கள் அதன் கிளைகளில் தவழ்ந்தபடி அளிசம் பழம் பறித்துத் தின்று கொட்டைகளைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். கருப்பையாவும் அளிசமரத்தை நோக்கி நடக்கிறான்.

மாணவர்களும் மாணவிகளும் அங்கங்கே நின்று பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கிறார்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் கம்பத்தைச் சில மாணவர்கள் சுற்றிச் சுற்றி அண்ணாந்து பார்க்கிறார்கள். கொடிக்கம்பத்தில் வர்ணக் காகிதங்கள் நெளிந்து நெளிந்து உயரே ஏறுகின்றன. கீழேயிருந்து ஒரு கெட்டியான நீண்ட நூல் கயிறு மேலே நோக்கி வளைந்து குழைந்து போயிருக்கிறது.

கருப்பையா அளிச மரத்தை நெருங்குகையில் மணி இரண்டு அடிக்கிறது. அதாவது பியூன் அருணாசலம் ஒரு ரெயில் தண்டவாளத் துண்டில் ஒரு சம்மட்டியால் இரண்டு தரம் ஓங்கி அடிக்கிறான். அன்றும் மணியடிக்கும் என்று எதிர்பாராத குழந்தைகள் வெலவெலக்கிறார்கள்.

மணி அடித்ததும், அந்த மணியோசைக்கு மணி இரண்டு என்பது தவிர, அன்று வேறு எதுவும் பொருள் இருக்காது என்று அந்தக் குழந்தைகள் நினைக்கையில், ஹெட்மாஸ்டர் திடீரென்று வராந்தாவுக்கு வருகிறார்.

ஹெட்மாஸ்டர் அன்று வெகு அழகாக உடை உடுத்திருக்கிறார். புதிய கோட்டு, புதிய பஞ்சகச்சம், புதிய உத்தரீயம், புதிய கடுகடுப்பு இவற்றுடன் ஹெட்மாஸ்டர் பிரசன்னமாகிறார்.

“எல்லாரையும் அவரவர் வகுப்புக்குப் போய்ப் பெசாமலிருக்கச் சொல்லு” என்று பியூன் அருணாசலத்திடம் கூறுகிறார்.

அந்த உத்தரவை உடனே எல்லா மாணவர்களுக்கும் அஞ்சல் செய்கிறான் அருணாசலம்.

குழந்தைகள் திடுமென்று வந்து கவிந்த ஒரு திகிலுடன் வகுப்புகளுக்கு வந்து உட்காருகிறார்கள். சளசளவென்ற பேச்சரவமும், காகிதக் கொடிகள் இளங்காற்றில் ‘பிர்ர்ர்’ரிடும் மெல்லரவமும், வகுப்பறைகளில் நிறைகின்றன. மிக நீளமான ஒரு சத்திர மாடல் ஹாலலை ஏழெட்டுப் பிரிவுகளாக ஓலைத்தட்டிகளால் பிரித்து வகுப்பறைகள் பண்ணியிருக்கிறார்கள். ஐந்து அறைகள் ஐந்து வகுப்புகளுக்கு. மற்றவை ஆசிரியர்களுக்கும் ஹெட்மாஸ்டருக்கும். பள்ளிக்கூடமே அவ்வளவுதான்.

சுப்பையாவுக்குப் பசி தாங்க முடியவில்லை. எப்போது டீ பார்ட்டி என்பது அவனுக்கோ, முத்தையாவுக்கோ, மற்ற மாணவர்களுக்கோ தெரியவில்லை. “கலெக்டர் எப்ப வருவாரு?” என்று முத்தையாவிடம் கேட்கிறான் கருப்பையா. கலெக்டர் வருவதற்கும் டீ பார்ட்டி கிடைப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அவன் உணர்கிறான். “எனக்கும் பசிக்கிடா!” என்று முத்தையாவுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்திருக்கும் வேறொரு பையன் துணைக்கு வருகிறான். மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். கலெக்டர் இன்னும் வரக்காணவில்லை. கலெக்டர் வரவுக்குக் காத்திராமலே உண்ட பதார்த்தங்கள் ஜீரணமாகின்றன. உண்ணாத வயிறுகள் உணவை அழைக்கின்றன.

அளிசம் பழம் பறித்துத் தின்றாலாவது தேவலையே என்று எண்ணுகிறான் கருப்பையா. ஆனால், அவன் இப்போது, வெளியே போக முடியாது. முன்பே அவன் பறித்துத் தின்றிருக்கவேண்டும். இப்போது என்ன செய்வது? எல்லாரும் அவரவர் வகுப்பில் இருக்கவேண்டும். அது ஹெட்மாஸ்டர் உத்தரவு.

வாசலில் ஏதோ மோட்டார் வருகிறாற்போல் சப்தம் கேட்கிறது. “வந்தாச்சு, வந்தாச்சு”, மாணவர்கள் கூச்சல் போட்டுக் குதிக்கிறார்கள். உள்ளும் வெளியுமாக உலாத்திக் கொண்டிருக்கும் ஹெட்மாஸ்டர் பரபரவென்று வாசலுக்குப் போகிறார். வேறு ஏதோ ஒரு கார், வேறு யாரையோ தாங்கிக் கொண்டு, வேறொரு பக்கமாகப் போகிறது. ஏமாற்றத்தில் முகத்தில் அசடு வழிவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார் ஹெட்மாஸ்டர். அந்த வேகத்தில், “பையன்களைச் சத்தம் போடாமல் இருக்கச் சொல்லும்” என்று முதல் வகுப்பு ஆசிரியரைப் பார்த்துச் சிடுசிடுக்கிறார் அவர். முதல் வகுப்பு வாஹ்தியார் சரசரவென்று பிரம்பும் கையுமாக, சூறாவளி வேகத்தில் ஐந்து வகுப்புகளையும் ஊடுருவுகிறார். பளீர் பளீர் எனும் ஒலி வகௌப்பறைகளைப் பிளந்துகொண்டு எழ, ராட்ச சத்தனமான அமைதி திடுமென்று குடிகொள்ள, திக்விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்குத் திரும்புகிறார் அந்த ஆசிரியர். அவர் முகம் என்னவோ போல இருக்கிறது. அவருக்கும் பசிக்கிறதோ என்னவோ? யாராவது, காதும் காதும் வைத்தாற்போல், அளிசம் பழம் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தால் அவரும் சாப்பிடுவாரோ என்னவோ?

அழுதுகொண்டிருக்கிற அந்தப் பையனைப் பரிதாபமாகவும் ஒருவிதப் பீதியுடனும் மற்ற மாணவர்கள் பார்க்கிறார்கள். மூன்றாம் வகுப்பு வாத்தியாரின் அடியில் மூன்றாம் வகுப்புப் பையன் அழுவதை மூன்றாம் வகுப்புப் பையன்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், முதல் வகுப்பு வாத்தியாரின் அடியில் மூன்றாம் வகுப்புப் பையன் விசித்து விசித்து அழுவதை அன்றுதான் மூன்றாம் வகுப்புப் பையன்கள் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு என்னவோ போல இருக்கிறது.

“அந்தப் பிரம்பு ரொம்பப் பெரிசு, நம்முடைய ஸாரின் பெரம்பைவிட பெரிசாம்” என்கிறான் முத்தையா, கருப்பையாவின் காதில், மிக மெல்லிய குரலில்.

“நம்முடைய ஸாரின் பெரம்பைவிட மூணு பங்கு நீளமல்ல இது? ஏண்டா, அந்தப் பெரம்பிலே கொடி செஞ்சா நல்லா இருக்குமல்ல?” என்றான் கருப்பையா.

சிறிது நேரம் வாயை அடைத்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் சளசளக்கத் தொடங்குகிறார்கள் பையன்கள். பேச்சரவம் ‘ஙொய்’ என்று வகுப்பறைகளில் நிறைகிறது.

இந்தச் சமயத்தி நாலாம் வகுப்பில் பெரிசாக ஏதோ சந்தடி. இரண்டு பையன்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது மூன்றாம் வகுப்புப் பையன்களுக்குக் கேட்கிறது. சண்டையை வேடிக்கை பார்க்க அவர்களுடைய மனதில் ஏகமாய்த் துடிப்பு. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘நாலாம் வகுப்பில் சண்டை’ என்று ஹெட்மாஸ்டரிடம் ‘ரிப்போர்ட்’ செய்வதற்காக ஒரு பையன் கிளம்ப ஆயத்தமாகிறான். அதற்குள் கணீரென்று கேட்கிறது. அதைத் தொடர்ந்து பிரம்பின் பளீர் பளீர் விளாசல் வகுப்பறைகளிலெல்லாம் எதிரொலித்து எதிரொலித்து மடங்குகிறது.

மறுபடியும் பேய்த்தனமான அமைதி குடி கொள்ளுகிறது. அளிச மரத்திலிருந்து அப்போது கிளம்பிய ஓர் ஒற்றைக் காகிதத்தின் ‘காகா’ சப்தம் இனம் தெரியாமல் ஒரு பயத்தை அங்கே சிருஷ்டிக்கிறது.

திடுதிப்பென்று அருணாசலம் ஒவ்வொரு வகுப்பாக வந்து அறிவிக்கிறான்; “எல்லோஉம் கீழே வரிசையா உக்காருங்க. இப்போ டீ பார்ட்டி!”

சமையற்காரர் வருகிறார். அவரும் அருணாசலமுமாகப் பெஞ்சுகளைத் தூக்கி வராந்தாவில் கொண்டுபோய் அடுக்குகிறார்கள். பையன்கள் எழுந்து ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறார்கள். “அந்தப் பக்கம் போங்க. இந்தப் பக்கம் போங்க” என்று சொன்னபடி பெஞ்சுகளை மளமளவென்று கிளப்புகிறான் அருணாசலம்.ஏதோ முணுமுணுத்தபடி சமையற்காரரும் அவனோடு ஒத்துழைக்கிறார்.

அடுத்ததாற்போல வகுப்பறைகளைப் பிரிக்கும் ஓலைத்தட்டிகள் ஒவ்வொன்றாக அகற்றப்படுகின்றன. அந்த வேலையையும் அருணாசலமே செய்கிறான். அவனுக்கு உதவியாக யாரோ ஒரு கிழவன் இப்போது வந்திருக்கிறான். கொள் கொள் என்று அவன் வாய் ஓயாமல் இருமுகிறான். அவன் யார் என்று பையன்கள் யோசிக்கிறார்கள்.

அருணாசலத்தின் உடம்பு வேர்த்து ஊற்றுகிறது. சிறிது நேரத்துக்கெல்லாம் வகுப்பறைகள், வாத்தியார், ஹெட்மாஸ்டர் அறைகள் எல்லாம் மறைகின்றன. பெரிசாக ஒரு ஹால்! மாணவர்களுக்கு இது மிக மிக வேடிக்கையாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்ளுகிறார்கள். ஐந்து வகுப்புப் பையன்களும் இப்போது ஐந்து வகுப்புப் பையன்களுடன் கலந்துவிடுகிறார்கள்.

“எல்லாரும் உட்காருங்க” என்று கோடியிலிருந்து கத்துகிறான் அருணாசலம். ஹெட்மாஸ்டரும் கையமர்த்துகிறார். ஆசிரியர்களும் அப்படிச் செய்கிறார்கள்.

ஹெட்மாஸ்டர் அறையிலிருக்கும் சுவர்க் கடிகாரம் எல்லோருக்கும் இப்போது தெரிகிறது. அந்தக் கடிகாரத்தைச் சில மாணவர்கள்தாம் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டக்கார மாணவர்கள் ஹெட்மாஸ்டரின் அறையிலேயே, அவருடைய அடிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடிகாரம் மூன்று அடிக்கிறது.

எல்லா மாணவர்களும் தங்கள் தங்கள் கொடிகளை முதுகுப்பக்கம் சுவரில் சாய்த்து வைத்துவிட்டுத் தரையில் வரிசையாக அமர்கிறார்கள். அருணாசலம் சரசரவென்று சிறுசிறு வாழையிலைகளை ஒழுங்காகத் துரிதமாகப் போட்டுக் கொண்டே போகிறான். மாணவர்களின் முகங்கள் களிப்பில் பூத்து மலர்கின்றன. முத்தையா கருப்பையாவைப் பார்த்துச் சந்தோஷத்துடன் சிரிக்கிறான் கருப்பையாவுக்கும் சந்தோஷந்தான். பரபரவென்று ஒவ்வோர் இலையிலும் ஜிலேபி வைக்கிறார் சமையற்காரர். தலைக்கு இரண்டிரண்டு பூவன் பழமாக வீசிக்கொண்டு ஓடுகிறான் அருணாசலம். பிறகு வடை வருகிறது. மிக்ஸ்சர் வருகிறது. ஆளுக்கு இரண்டு வடை. பேஷ்! மிக அருமையான டீ பார்ட்டி. எல்லாக் குழந்தைகளும் நாக்கைத் தீட்டிச் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.

ஆசிரியர்கள் குறுக்குநெடுக்குமாக நடந்து மேற்பார்வை செய்கிறார்கள்.

ஹெட்மாஸ்டர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார், “சீக்கிரம் ஆகட்டும்” என்று உரக்கச் சொல்லுகிறார்.

“மடமடன்னு சாப்பிடணும்” என்று பையன்களை லேசாக முடுக்குகிறார் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்.

“சட்னு, சட்னு” என்று விரலைச் சொடுக்கிக் கொண்டு போகிறார் ஐந்தாம் வகுப்பு வாத்தியார். குழந்தைகள் நிமிர்ந்து நிமிர்ந்து ஆசிரியர்களின் முகங்களைப் பார்க்கிறார்கள். ஒன்றும் ஓடமாட்டேன் என்கிறது அவர்களுக்கு.

ஜிலேபியைச் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழத்தைச் சாப்பிடத் தொடங்குகிறான் கருப்பையா. முத்தையா பழத்தை விழுங்கிவிட்டு, பழத்தோலின் சுவையான பிரதேசத்தைப் பல்லால் பிடுங்கிக் கொண்டிருக்கிறான்.

“சீக்கிரம், சீக்கிரம்” என்று வேகமாக ஓடி ஓடி நடக்கிறார் மூன்றாம் வகுப்பு வாத்தியார்.

சமையற்காரர் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து மற்றொரு பெரிய பாத்திரத்திற்கு அருவியாகக் காபி ஆற்றுகிறார்.

வாசலில் ‘ஹார்ன்’ சத்தம் கேட்கிறது. ஓ! கலெக்டர் வந்துவிட்டார்!

“சீக்கிரம் ஆகட்டும்” என்று கத்திவிட்டுக் ‘கிடுகிடு’வென்று வாசலுக்கு ஓடுகிறார் ஹெட்மாஸ்டர்.

“வேகமாகச் சாப்பிடுங்க” என்று அருணாசலம் கூச்சலிடுகிறான். வடையைக் கையில் எடுக்கிறான் கருப்பையா. அவனுக்கு வடை பிடிக்கும்; ஆனால் கை உதறலெடுக்கிறது. கையிலிருந்து வடையை அருணாசலம் பிடுங்கிக்கொண்டு போய்விடுவானோ என்று தோன்றுகிறது அவனுக்கு. முத்தையாவின் இலையில் மிக்ஸ்சர் மட்டுந்தான் மீந்திருந்தது. பறந்து உள்ளே அள்ளித் திணிக்கிறான் அவன். ‘ஹக்’ என்று தொண்டையில் விக்கல் குறுக்கிடுகிறது. தண்ணீர் வேண்டும் என்று அருணாசலத்தைப் பார்த்துக் கையைக் காட்டுகிறான். “தண்ணி இப்போ கொண்டு வர முடியாது; கலெக்டர் வந்தாச்சு, எந்திரிங்கோ” என்கிறான் அருணாசலம். அவனும் கலவரம் அடைந்திருக்கிறான். பசி அவன் முகத்திலும் பிடுங்கியிருக்கிறது. இனிமேல் எப்போது சாப்பிடுவது? ஒரு மணி நேரம் ஆகிறதோ, இரண்டு மணி நேரம் ஆகிறதோ?

ஆசிரியர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. குழந்தைகள் கலவரத்துடன், பயந்து போய், போட்டது போட்டபடி எழுந்திருக்கிறார்கள். இரண்டொரு மாணவர்கள் தங்கள் நிஜார்ப் பைகளில் வடைகளையும் ஜிலேபிகளையையும் திணித்துக் கொள்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பு வாத்தியார் வெளியே இருந்து உள்ளே வருகிறார்: “எல்லோரும் எந்திரிங்க; போரும் போரும்” என்று விரட்டுகிறார்.

கருப்பையா பாதி வடையையும், மிக்ஸ்சரையும் அப்படியே போட்டுவிட்டு விக்கிக்கொண்டே எழுந்திருக்கிறான். பின்புறம் திரும்பி அவன் தன் கொடியைக் கையில் எடுக்கையில் வேறொரு சிறுவன் ஊடே பாய்ந்து ஓடுகிறான். அவன் கால்கள் கருப்பையாவின் கொடியில் தட்டி மறைகின்றன.

“கொடி கிளிஞ்சி போச்சுடா!” என்று தொண்டை அடைக்கக் கூறுகிறான் கருப்பையா.

அம்புபோல் பாய்ந்து வரும் இரண்டாம் வகுப்பு வாத்தியார் இதைப் பார்க்கிறார். “பயல் கொடியைக் கிழித்துக் கொண்டு நிற்கிறானே! ஏண்டா முட்டாக் களுதே! ஒளுங்கா வெச்சிக்கிறதுக்கென்ன? மூளைகீளை இருக்காலே ஒனக்கு?” என்று உணர்ச்சிவசப்பட்டவராய் அந்தக் கொடி இழந்த கழியைப் பிடுங்கி, கருப்பையாவின் துடையில் பளீரென்று விளாசிவிட்டுக் கழியைக் கீழே வீசிவிட்டு ஓடுகிறார். ஓ! அவசரம்; அவசரம்.

கருப்பையா அழுது கொண்டே அந்தக் கழியைக் கையில் எடுக்கிறான். அது கொடி இல்லாமலே அழகாக இருப்பது அவனுக்குத் தெரிகிறது. அவனுடைய அண்ணன் வெட்டி ஒட்டியிருக்கும் காகிதங்களில்தான் என்ன கவர்ச்சி. என்ன வசீகரம்!

எல்லாப் பையன்களும் கையைக் கழுவிவிட்டுக் கொட்யும் கையுமாக வெளியே ஓடிவருகிறார்கள். ஹெட்மாஸ்டரும் ஆசிரியர்களும் கலெக்டருக்குப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காட்டுவதற்கு அங்கே எதுவுமில்லை; ஆனாலும் எதையோ காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பஞ்சாயத்துப் போர்டுத் தலைவர் கைகளைக் கட்டிக் கொண்டு கலெக்டர் பின்னால் பவ்யமாகப் போகிறார். வேறு சிலரும் போகிறார்கள்.

அருணாசலமும் அந்தக் கிழவனும் பள்ளிக்கூடத்தை அதிவேகமாகச் சுத்தம் பண்ணுகிறார்கள். கிழவன் இலைகளில் கிடைக்கும் பதார்த்தங்களையெல்லாம் சுறுசுறுப்புடன் ஒரு பாத்திரத்தில் சேகரிக்கிறான். அவனுக்கு அசாத்தியமான உற்சாகம். எத்தனை ஜிலேபிகள், வடைகள், எவ்வளவு மிக்ஸ்சர்! வாழைப்பழங்களும் குறைவில்லை.

சமையற்காரர் ர் எவர்சில்வர்த் தட்டைத் துண்டால் துடைத்துக் கொண்டு, அதில் ஒரு வெள்ளி தம்பளர் பாலும், இரண்டு பூவன்பழமும் வைத்து எடுத்துக் கொண்டு ஓடுகிறார் கலெக்டர் நிற்கும் இடத்தை நோக்கி.

எல்லா மாணவர்களும் தூரத்தில் நின்றபடியே கலெக்டரைப் பார்க்கிறார்கள். அவர் சிரித்துச் சிரித்துப் பேசுகிறார். வெள்ளை வெளெரேன்று சட்டையும் வேட்டியும் அணிந்திருக்கிறார். உயரமாகக் கருகருவென்று, கம்பீரமாக இருக்கிறார். சிரிக்கையில் அவருடைய பற்கள் வெளீரென்று பிரகாசிக்கின்றன.

அழகிய நீலநிறக் கார் ஒன்று காம்பவுண்டின் ஓரத்தில் ‘கேட்’டை ஒட்டினாற் போல் நிற்கிறது. பக்கத்தில் ஒருவன் தன் தலையிலிருக்கும் சப்பைத் தொப்பியை நிமிஷத்துக்கு ஒரு தரம் சரி செய்தபடி காரில் முதுகைச் சாய்த்தபடி, முன்னால் வளைந்து நிற்கிறான். வெள்ளை நிஜாரும், பெரிய பித்தளைப் பொத்தான்கள் பளபளவென்று பிரகாசிக்கும் கோட்டும் அணிந்துகொண்டு நிற்கும் அவன் மோட்டார் ஓட்டியாகத்தான் இருக்கவேண்டும். அவனைச் சில மாணவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

கருப்பையா இப்போது அழவில்லை. அவனும் கலெக்டரைக் கவனிக்கிறான். “வூட்டுக்கு எப்போ போகலாம்?” என்று விசனத்துடன் கேட்கிறான் முத்தையா. அவனைப் பசி பிடுங்கித் தின்கிறது. கருப்பையாவுக்கும் நல்ல பசிதான்; துடை வேற வலிக்கிறது. ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து கலெக்டரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான் அவன்.

ஹெட்மாஸ்டர் ஐந்தாம் வகுப்பு வாத்தியார் காதில் ஏதோ ரகசியம் பேசுகிறார். அவர், உடனே ஓடோடியும் வருகிறார்.

“எல்லோரும் ‘லைனா’ வரிசையா நில்லுங்க. ம்” என்கிறார் அவர். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு டிரில் வாத்தியாரும் அவர்தாம். உயரவாரியாக மாணவர்களை வரிசைப்படுத்தி, அணிவகுத்து நிறுத்த முனைகிறார் அவர். பையன்கள் ஒழுங்காக நிற்கிறார்கள். வரிசை ஒரு பக்கமாகக் கோணுகிறது. டிரில் வாத்தியார் தட்டிச் சரிப்படுத்துகிறார். கொடியைத் தோளில் லேசாகச் சாய்த்து மாணவர்கள் ஜோராக நிற்கிறாற்கள். கருப்பையா இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரு கண்ணோட்டம் விடுகிறான். மிகவும் ஜோராக இருக்கிறது. முத்தையா சற்றுக் குட்டையாதலால் கோடிக்கு அவன் தள்ளப்பட்டிருக்கிறான். அமைதியாக அவர்கள் நிற்கிறார்கள்.

டிரில் வாத்தியார் அந்த அணிவகுப்பிலிருந்து பதினைந்து பேர்களைப் பொறுக்கி எடுக்கிறார். இடக்கைச் சுட்டுவிரலை நீட்டி நீட்டிச் சுட்டிப் பொறுக்கி எடுக்கிறார். அந்தப் பதினைந்து பேரையும் கொடிக் கம்பத்தைச் சுற்றி வட்டமாக, அழகாக, போலீஸ்காரன் மாதிரி விறைப்பாக நிறுத்துகிறார் வாத்தியார். அவர் அண்ணாந்து மேலே பார்த்துக் கம்பீரமாக ‘ஸல்யூட்’ பண்ணுகிறார். அவரைப் போல் அந்தப் பதினைந்து பேரும் ‘ஸல்யூட்’ பண்ணுகிறார்கள். அது பார்க்க வெகு அழகாக இருக்கிறது. அந்தப் பதினைந்து பேரில் தானும் ஒருவனாக இல்லையே என கருப்பையா வருந்துகிறான். தன்னை ஏன் டிரில் வாத்தியார் அழைக்கவில்லை என்பது அவனுக்குப் புரியமாட்டேன் என்கிறது. அவனும் நல்ல உயரம் அல்லவா? அவனும் கட்டுமஸ்தாக ஜோராகத்தானே இருக்கிறான்? அவனை விடவும் ஒருபிடி குட்டையான பையன்கள்கூட இரண்டு மூன்று பேர் அந்த வட்டத்தில் நிற்கிறார்களே! அது ஏன் என்று துக்கத்துடன் யோசிக்கிறான் கருப்பையா. தன்னை விடவும் அவர்கள் எப்படி உயர்ந்தவர்கள் என்பது அவனுக்குப் புலப்படவில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் அவன் லேசாக உணர்கிறான். அந்தப் பதினைந்து மாணவர்களும் அவனைப் போல் கறுப்பாக இல்லாமல் சிவப்பாக இருக்கிறார்கள். தான் கறுப்பபாக இருப்பதால்தான் டிரில் வாத்தியார் தன்னைத் தெரிந்தெடுக்கவில்லை என்று கருப்பையாவின் மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும் அந்த எண்ணம் பீறிப்பீறிக் குதிக்கிறது. கொடிக்கம்பத்தின் அருகில் நின்று அவர்களோடு சேர்ந்து ‘ஸல்யூட்’ பண்ணினால் எவ்வளவு நன்றாக இருக்கும். கருப்பையாவுக்கு அழுகையாக வருகிறது; துடை வலிக்கிறது.

எல்லாரையும் அப்படி அப்படியே நிறுத்திவிட்டு டிரில் வாத்தியார் மீண்டும் கலெக்டர் நிற்கும் இடத்துக்கு ஓடுகிறார். மாணவிகளை ஒரு தனி வரிசையாகக் கொடிக்கம்பத்துக்குச் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்கிறார்.

அடுத்தாற்போல என்னவென்று குழந்தைகளுக்குத் தெரியவில்லை. அங்கும் இங்கும் பார்த்தபடி சளசளவென்று பேசிக் கொண்டு நிற்கிறார்கள். எல்லோருக்கும் அதிக கால்வலியெடுக்கிறது.

பொழுது ஏறி, லேசாகக் காய்கிற வெயில் இன்னும் லேசாகிறது. காற்று இன்னும் தண்மை ஏறிச் சிலிர்க்கிறது. அந்தக் காற்று விருட்சங்களைக் கவ்விக் குடைந்து ‘உய்ய் என்று இலைகளினூடு சீறிப் பாய்கிறது. மழை மேகங்கள் பெரியப் பெரிய பொதிகளாக எங்கிருந்தோ மோதிக் குமைந்து கொண்டு இறங்கிச் சாய்கின்றன.

குழந்தைகள் மேலே பார்க்கிறார்கள். மழை வருமா? அவர்கள் பரபரப்படைகிறார்கள். கால்கடுத்து, கால் மாற்றிக் கால் மாற்றி நின்று கால்வலி எடுக்கிறது.

வேகமாக டிரில் வாத்தியார் வருகிறார். மீண்டும் அவர்களைத் தட்டி ஒழுங்குபடுத்துகிறார். சிறு கும்பல் ஒன்று புடைசூழக் கலெக்டர் கம்பீரமாகத் தங்கள் பக்கமாக வருவதை எல்லாக் குழந்தைகளும் கண்கொட்டாமல் பார்க்கிறார்கள். கலெக்டருடைய புன்னகையில்தான் எத்தனை வசீகரம்! கருப்பையாவுக்கு அவரை மிகவும் பிடித்துவிடுகிறது. அவனைப்போல் அவரும் நல்ல கறுப்பு; இன்னும் அதிகமான கறுப்பு. ஆனாலும் அவர் அழகாகவே இருக்கிறார். மிகவும் அழகு.

அணிவகுத்து நிற்கும் மாணவர்களைத் தாண்டிச் சிரிப்பும் முகமுமாய்க் கொடிக் கம்பத்தின் அருகே அவர் வருகிறார். அவர் கொடியேற்றப் போகிறார்.

பாரத மணிக்கொடி வெகு கம்பீரமாக மேலே மேலே ஏறுகிறது. கம்பத்தின் உச்சியைச் சென்று தழுவி ஒளி வீசிப் பறக்கிறது, அந்தக் காட்சியை வைத்த விழி வாங்கமுடியாமல் எல்லாருடைய கண்களும் நோக்கிச் சிலிர்க்கின்றன. கருப்பையா உணர்ச்சி வசப்படுகிறான். பாடப் புத்தகத்தில் தேசக்கொடியைப் பற்றிப் படித்ததெல்லாம் அவன் நினைவில் வந்துகுவிகின்றன.

கலெக்டர் மிகுந்த கம்பீரத்துடன் நின்று பாரத மணிக் கொடிக்கு ‘ஸல்யூட்’ செய்கிறார். மாணவிகள் ஜனகணமன கீதம் பாடுகிறார்கள். அந்தப் பதினைந்து மானவர்களும் விரைப்பாக நின்று, ஜோராக ‘ஸல்யூட்’ செய்கிறார்கள். கருப்பையாவும் தன் இடத்திலேயே விறைப்பாகச் சிப்பாய் போல் நின்றபடி கொடிக்கு ஒரு ‘ஸல்யூட்’ பண்ணுகிறான்.

திடுதிப்பென்று மழை தூறத் தொடங்கிவிடுகிறது. கலெக்டர் அவசர அவசரமாகத் தம் காரை நோக்கி விரைகிறார். மற்றவர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். குழந்தைகளை நோக்கிப் புன்னகை பூத்தபடி கையை அசைக்கிறார் கலெக்டர். பிறகு ஹெட்மாஸ்டரிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறுகிறார். அந்த ஜோரான டிரைவர் ஸ்டைலாகத் தன் ஸீட்டில் ஏறி உட்காருகிறான். மறு நிமிஷம் விர்ரென்று அந்த அழகிய நீலக்கார் பறக்கிறது. குழந்தைகள் அந்தக் காட்சியை ஆனந்தமாகப் பார்த்து மகிழ்கிறார்கள். அந்தக் காரின் எண்ணைச் சில பையன்கள் மனசில் இருத்திக் கொள்ளுகிறார்கள். கருப்பையாவும் அந்த எண்ணை நினைவில் பதித்துக் கொள்ளுகிறான். கலெக்டருடைய காரை அந்தக் கிராமத்துப் பள்ளி மாணவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அந்தக் காரின் எண் என்ன என்பது தெரியும். கருப்பையா தன் அண்ணனிடம் அந்த எண்ணைச் சொல்லுவான்.

ஹெட்மாஸ்டர் கலெக்டரை அனுப்பிவிட்டு வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பு தவழ்வதை அன்றுதான் அந்தப் பள்ளி மாணவர்கள் பார்க்கிறார்கள்.

எல்லா மாணவர்களையும் வீட்டுக்குப் போகச் சொல்லும் படி ஹெட்மாஸ்டர் அருணாசலத்தினிடம் கூறுகிறார்.

“எல்லாரும் போங்க. மளை வருது; ஓடுங்க!” என்று கத்துகிறான் அருணாசலம். அவன் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி.

மானவர்கள் ‘ஊஊ’ என்று ஊளையிட்டபடி தங்கள் வீடுகளை நோக்கிக் குருவிகளைப்போல் பறக்கிறார்கள். மழை ‘சோ’வென்று பெய்யத் தொடங்குகிறது. ஆனாலும் வெயில் ஊடே பளிச்சிடுகிறது. மழைக்கோடுகளில் பரிதியின் ஒளி வெள்ளம் கொட்டிப் பளபளக்கிறது. குழந்தைகள் தெப்பமாய் நனைந்தபடி ஓடுகிறார்கள். அவர்களின் காகிதக் கொடிகள் நனைந்து குளிக்கின்றன.

முத்தையாவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ‘சர்க் சர்க்’ என்று நீர் தெறிக்க ஓட்டமாய் ஓடுகிறான் கருப்பையா.

சுதந்திர தினத்தன்று, அந்தத் தினத்தின் பொருளே போன்று, ‘இதோ, இதுதான் அது’ என்று சுட்டிக்காட்ட முடிவதே போன்று, ஒரு சுவையான கரும்பின் அடிக் கரும்பு போல் ஏதோ ஒன்றைப் பெற முடியும் என்று எதிர்பார்த்திருந்தான் கருப்பையா. அன்று அதுவரை கிட்டாத அந்த ஏதோ ஒன்று அந்த மழையில் நனைந்துகொண்டு ஓடுகையில் கிட்டிவிட்டது போல் உணர்கிறான் அந்தச் சிறுவன்.

மழை நிற்கவில்லை; அன்னை பாரத தேவியின் ஆனந்த பாஷ்பமே போன்று, மழை அந்தக் குழந்தைகள் மீது சொரிகிறது. அவளுடைய அன்புமயமான, மோகனப் புன்னகையே உருக்கொண்டு மலர்வதுபோன்று கீழ்வானில் வர்ணக் களஞ்சியமாக ஒரு வானவில் அப்போது தோன்றுகிறது.

ஆகஸ்ட் 1951

– கிருஷ்ணன் நம்பி