கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்
கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை.
வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) வசித்து வந்த அழகியபாண்டிபுரம் எனும் கிராமத்திலிருந்து ஒரு நபர் வந்து எங்கள் பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பாவை உடனேயே அழைத்து வரவேண்டும் என்கிற என் சித்தப்பாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார்.
அப்பா பதறியடித்துக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அதோடு இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. தவறவிட்டால் மறுநாள்த...