Search

இறுதியாகச் சிலர்

மாயலோகத்தில் தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச் சிறிய குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சாண்டில்யன்

Chandilyanபாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதோ கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.

நெற்றியில் எப்போதும் துலங்கும் நாமம், பஞ்சகச்சத்துடன் கூடிய உடை, வீர வைஷ்ணவத் தோற்றம் பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.

ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிருபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952இல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார். திக்குரிச்சி சுகுமாரன் நாயர், பி.எஸ். சரோஜா நடித்த இப்படம் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது.

இதற்கு முன் 1949இல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு.

1953இல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என் வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் ஓர் அருமையான படம். நல்ல பெயரையும் வாங்கிய படம்.

1955இல் ‘போர்ட்டர் கந்தன்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. மிகவும் சோகமான படம். எம்.கே.ராதா மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் வேறு இரு எழுத்தாளர்களுடன் இவர் கூட்டாக வசனம் எழுதியிருக்கிறார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.

இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது.

பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள் கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.

அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.

இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திரப் புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவரது தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேஷன் மிக அதிகமாக இருக்குமாம்.

முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வர்ணனைகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.

இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். ஏராளமாகக் குப்பை கொட்டியிருக்கிறார். இவர் எழுதிய சில முக்கிய நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.

இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதிப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சகர்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

மணியன்

‘இதயம் பேசுகிறது’ மணியன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனந்த விகடனில் துணை ஆசிரியராக ஆரம்பத்தில் பணிபுரிந்து அதிபர் எஸ் எஸ் வாசன் அவர்களின் நன்மதிப்புக்கு ஆளானவர். முதலில் பல புதிய தொடர் புதினங்களைத் தொடர்ந்து விகடனில் எழுதி வெகு ஜன வாசகர்களிடையே மிகுந்த பாராட்டுதல்களுக்கு உள்ளானார். அதோடு விகடனில் இவர் எழுதிய பயணக் கட்டுரைகளும் இவருக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தன. பல காலம் விகடனில் பணியாற்றிய மணியன், வாசனின் ஆசியுடன் அதிலிருந்து விலகி, தனியாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அப்பத்திரிகைதான் ‘இதயம் பேசுகிறது’ வாரப்பத்திரிகை. இப்பத்திரிகையை மிகவும் சிறப்பாக நடத்தி, மக்களிடையே மிகவும் பிரபலப்படுத்தினார்.

இவர் எழுதிய ‘இதயவீணை’ நாவல், உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, 1972இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர்-மஞ்சுளா ஜோடி நடித்திருந்த இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மணியனும், எம்ஜிஆரின் விசுவாசியுமான வித்வான் வே.லட்சுமணனும் ஆவார்கள். இவர்கள் இருவருமே உதயம் புரொடக்ஷன்சின் உரிமையாளர்கள். இசையமைப்பாளர்கள் சங்கர் – கணேஷ் ஜோடி இப்படத்தின் வாயிலாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்கள்.

இதற்கிடையில், மணியனின் இன்னுமொரு புதினமான இலவு காத்த கிளியோ, நடிகை சந்திரகாந்தாவின் சிவகாமி கலை மன்றத்தாரால் நாடகமாக நடிக்கப்பட்டு, மிகவும் பிரபலமடைந்தது.

இதனைத் தங்களது இரண்டாவது தயாரிப்பாக உதயம் புரொடக்ஷன் தயாரிக்கத் தொடங்கினர். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இளம் கமலஹாசன், சிவகுமார், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றியை அடைந்தது.

1976இல் ‘இதயமலர்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. தயாரிப்பாளர்கள் ஜெயேந்திரா மூவிஸ். இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் மணியனின் மாமனார் ஜி.எம். குளத்து ஐயர், இதுவும் உதயம் தயாரிப்புதான். ‘நினைவு நிலைக்கட்டும்’ என்னும் மணியனின் புதினம்தான் ‘இதயமலர்’ திரைப்படம். இப்படத்தை நடிகர் ஜெமினி கணேசனும் எழுத்தாளர் தாமரை மணாளனும் கூட்டாக இயக்கியிருந்தார்கள்.

இதே ஆண்டில் மணியனின் ‘மோகம் முப்பது வருஷம்’ நாவல் சொர்ணாம்பிகா தயாரிப்பில் வெளிவந்தது. மணியனின் கதைக்கு மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

உதயம் புரொக்ஷன்கள் 1974இல் சிரித்து வாழ வேண்டும் (எம்ஜிஆர்- லதா), 1975இல் பல்லாண்டு வாழ்க’ (எம்ஜிஆர் – லதா) ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்கள். இந்த பல்லாண்டு வாழ்க திரைப்படம் சாந்தாராமின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ எனும் இந்திப்படக்கதை.

இதற்குப் பிறகு உதயம் தயாரிப்பில் திரைப்படங்கள் எதுவும் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

லட்சுமி

திரிபுரசுந்தரி என்பது இவரது இயற்பெயர். இவர் ஒரு டாக்டர். கல்லூரி நாட்களிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். இவரது ‘பெண்மனம்’, ‘காஞ்சனையின் கனவு’, ‘நாயக்கர் மக்கள்’ போன்ற தொடர் புதினங்கள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவர் தனது பணி நிமித்தம், சில காலம் தென் ஆஃப்ரிக்காவில் வசிக்க வேண்டியதாயிற்று.

இவர் எழுதிய காஞ்சனையின் கனவு எனும் நாவல் ‘காஞ்சனா’ என்கிற பெயரில் பட்சிராஜா பிக்சர் தயாரிப்பில் 1953இல் வெளிவந்தது. கே.ஆர். ராமசாமி – லலிதா இணைந்து நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை.

‘பெண்மனம்’ நாவலை ‘இருவர் உள்ளம்’ என்கிற பெயரில் படமாகத் தயாரித்து அப்படம் 1963இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன் – சரோஜா தேவி ஜோடி. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கலைஞர் கருணாநிதியின் ஆரவாரமில்லாத அழகான வசனங்கள், ஜாம்பவான் எல்.வி. பிரசாத் அவர்களின் பண்பட்ட இயக்கம், சிவாஜிகணேசனின் மிகைப்படாத இயல்பான நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு வழிகோலின.

இந்த இரண்டு கதைகள் தவிர லட்சுமியின் வேறு கதைகள் எதுவும் திரைப்படமாகத் தயாரிக்கப்படவில்லை.

சுரதா

Surathaபாவேந்தர் பாரதிதாசன் பாசறையிலிருந்து உருவானவர் கவிஞர் சுரதா. உவமைக் கவிஞர் சுரதா என்பார்கள். சுப்புரத்தினம் என்பது பாரதிதாசனின் பெயர். அவரது தாசனான சுப்புரத்தின தாசனின் சுருக்கம் சுரதா. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய கவிஞர்களில் ஒருவர்.

கடற்கரையில், கப்பலில், வான்வெளி எனப் பல்வேறு இடங்களில் கவியரங்கம் நடத்தும் உத்தியைக் கையாண்டவர். இலக்கியத் தரத்தில் ஏராளமான கவிதைகள் இயற்றியுள்ளார்.

இவருக்கு 1949இலிருந்தே திரைப்படத்துடன் தொடர்பிருந்திருக்கிறது. பி.யு. சின்னப்பா, அஞ்சலிதேவி, கண்ணாம்பா நடித்த மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு வசனமெழுதியுள்ளார்.

மேலும் 1952இல் எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த அமரகவி 1953இல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த ‘ஜெனோவா’ பேன்ற படங்களுக்கும் வசனமெழுதியிருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களுக்கும் இவர் எழுதிய பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்த வரிசையில் அம்மையப்பன் (1954), புதுவாழ்வு (1957) திருமணம் (1958), தை பிறந்தால் வழி பிறக்கும் (1958) நாடோடிமன்னன் (1958), அபலை அஞ்சுகம்(1959) நல்ல தீர்ப்பு (1959) போன்ற படங்கள் முக்கியமானவை.

தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இவர் இயற்றி சீர்காழி கோவிந்த ராஜனால் பாடப்பட்ட,

அமுதும் தேனும் எதற்கு – நீ
அருகினில் இருக்கையிலே

என்கிற பாடல் தமிழ்த்திரையுலகில் சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று.

ஆரோக்கியமான நீண்டகாலம் வாழ்ந்த சுரதா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார். இவரது தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் தமிழக அரசு, சென்னை அசோக் நகரில் இவருக்கு ஓர் அழகான சிலையை வடித்திருக்கிறது.

கவியரசு கண்ணதாசன்

பாரதிக்குப் பிறகு தோன்றிய தமிழ்க்கவிஞன் கண்ணதாசன் ஒருவன் தான் என்பதற்கு மேலாக இவரைப் பற்றி வேறொன்றும் எழுத வேண்டியதில்லை. கண்ணதாசனின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி அனைவரும் அறிவர்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்