
இது ரசிகர்களின் பேட்ட
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா 'உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்' எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், "பேட்ட பேட்ட" என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட.
படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்ற முதல் வசனத்தில் இருந்து, 'இந்த ஆட்டம் போதுமா கொழந்த?' என...








