Shadow

மெர்க்குரி விமர்சனம்

Mercury Tamil movie review

‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது.

வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்துஜா, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், ஷஷாங் புருஷோத்தமன் ஆகியோர் நிறைவாக நடித்துள்ளனர். சனந்த்க்கும் இந்துஜாக்குமான காதலும், அதை அவர்கள் வெளிபடுத்திக் கொள்ளும் விதமும் மிக அற்புதமாய் உள்ளது. இக்குழு எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தான் படத்தின் கதை.

இடைவேளையின் பொழுது நச்சென்ற ஒரு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வேட்டியில் வரும் கால் விக்கி நடக்கும் பிரபுதேவா ‘அட’ போடவைக்கிறார். அவரது கேரியரில் குறிப்பிடத்தக்க படமாக இது அமையும். ஆனால் கைவிடப்பட்ட ஒரு ஃபேக்டரியில் எதெது எங்கெங்கு இருக்கிறது என பிரபுதேவாவிற்கு எப்படித் தெரிகிறது என்பதற்கான தெளிவு படத்தில் இல்லை. விபத்தை ஏற்படுத்தியது யாரென பிரபுதேவா எப்படிக் கண்டுகொண்டார் என்றும் புரியவில்லை. எனினும், படம் பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொள்வதால் லாஜிக் தொந்தரவுகளின்றி படத்தை ரசிக்க முடிகிறது. ஒரு த்ரில்லர் படத்திற்கான அனுபவத்தை கார்த்திக் சுப்புராஜ் சட்டென ப்ரீ-க்ளைமேக்ஸில் பறித்துக் கொண்டாலும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசும் அதை கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர்.