
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா ‘உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்’ எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், “பேட்ட பேட்ட” என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட.
படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!’ என்ற முதல் வசனத்தில் இருந்து, ‘இந்த ஆட்டம் போதுமா கொழந்த?’ என தன் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கும் வரையிலும் ரஜினி, ரஜினியாக நடித்திருக்கிறார், ரஜினியாக வாழ்ந்திருக்கிறார் அவர் முழு ரஜினியாகவே மாறியிருக்கிறார். ஒரு ரசிகனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பும் அதுதான் உச்சபட்ச வேட்கையும் அதுவே!!
‘வாவ்! எவ்ளோ எனர்ஜி!!’ என தன் ஒவ்வொரு அசைவிலும், ‘ரஜினி ரஜினி ரஜினி’ என கூச்சலிடச் செய்கிறார். காதல், பாசம், நக்கல், சண்டைக் காட்சிகளில் காட்டும் அதே பாட்ஷா முகம் என கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போலவே முழுக்க முழுக்க ரஜினியிசம்தான். ரஜினிக்கு எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கும் ஆடை வடிவமைப்பு செய் நேர்த்தி.
ரஜினி படத்தில் கதை என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டால் தான் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கச் சொல்லும். ரஜினிக்கு கதை என்ற மெனக்கெடல் எப்போதுமே தேவையில்லை. எந்த ஒரு வெற்றி பெற்ற மசாலா படத்தின் ஒற்றை வரிக்கும் ரஜினியைப் பொருத்திவிடலாம். ரஜினி கொண்டாட்டத்தின் அடையாளம். அந்தக் கொண்டாட்டம் முழுமையாகக் கிடைத்தால் போதும் அதன் வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆக கதை என்றளவில் வழக்காமான மசாலாதான். அதை விரவிக் கொடுத்த வரையில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். மேடையில் என்ன சொன்னாரோ அதையே தான் செய்திருக்கிறார். ரஜினி என்ன செய்தால் ரசிகன் கொண்டாடுவானோ அதனை இம்மி பிசகாமல் வாங்கி இருக்கிறார். 2.0-இல் வசனம் பேசக் கஷ்டப்பட்டவரா இவ்வளவு அருமையாகப் பேசியிருக்கிறார்? “உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா” ஒருபாடல் போதும் இந்தப்படம் மொத்தமும் ரஜினி எவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார் இருந்திருக்கிறார் என்று சொல்ல.
பல ரஜினிப் படங்களின் பிணைப்புகளின் கலவையாகவே பேட்டையைப் பார்க்க முடியும். லாரியில் வரும் காட்சி, உள்ளே போ எனக்கூறும் காட்சி, சண்டைக் காட்சியில் காணும் உக்கிர முகம், ‘நீங்க சொல்லுங்க கலெக்டர் சார்’, ‘பாம்பு பாம்பு பாம்பு’ என இது அக்மார்க் ரஜினி மேக்கில் இருந்து உருவான ரீமேக். அதில் இந்த ஒட்டுமொத்தக் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம். மிகப்பெரும் நடிகப் பட்டாளத்திற்கு மத்தியிலும் ஒரு ஜீவனால் தொலைந்து போக முடியாமல் ஜீவனோடு ஒன்றவைக்க முடியுமென்றால் அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்.
கார்த்திக் சுப்பராஜ் பற்றி பிறகு பேசுவோம். இது ஒரு ரஜினி ரசிகனால் ரஜினி ரசிகர்களுக்காக ரஜினியைக் கொண்டே எடுக்கபட்ட படம். மற்றதை வெள்ளித்திரையில் காணுங்கள். சில திரைப்படங்கள் சில சமயங்களில் மிகவும் கொண்டாட்டமாக அமைந்து போவது உண்டு. அந்த வகையில் பேட்ட,
ரிப்பறிரப்பாரே
ரிப்பரே ரிப்பறிரப்பாரே
ரிப்பறிரப்பாரே
ரிப்பரே ரிப்பறிரப்பாரே
ரிப்பறிரப்பாரே
ரிப்பப்ப ரபபப்பா
இது ரசிகர்களுக்கான பேட்ட.
– நாடோடி சீனு