அழியாத கோலங்கள் 2 விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை.
நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும்.
'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவின்...