தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை.
நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், ‘அழியாத கோலங்கள் 2’ படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும்.
‘மோகனப் புன்னகை’ எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவின் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வருகிறார். அங்கே எதிர்பாராமல் நிகழும் அசாம்பாவிதத்தால், சமூகமே விழித்துக் கொண்டு கெளரிசங்கர் – மோகனாவின் உறவை விவாதத்திற்கு உள்ளாக்கி நையப்புடைக்கிறது.
40 வருடங்களுக்கு முன், மேல்நிலை பள்ளி மாணவர்களின் விடலத்தனமான நட்பை மையமாக வைத்துப் படத்தை உருவாக்கியிருந்தார் பாலு மகேந்திரா. அறிமுக இயக்குநர் எம்.ஆர்.பாரதியோ, நாற்பதைத் தொட்டு விட்ட முதுமகன் பருவத்திலுள்ள ஓர் ஆண், பேரிளம் பெண்ணாகிவிடும் தன் சம வயது தோழியிடம் நட்பு பேணுவதிலுள்ள சிக்கலைப் பற்றிப் பேசியுள்ளார்.
எழுத்தாளர் கெளரிசங்கராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். கெளரிசங்கரின் தோழி மோகனாவாக அர்ச்சனா நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் ரேவதியோடு இயல்பாய்ப் பேசுபவர், பிரகாஷ்ராஜைப் பார்த்ததும் குரலில் தருவிக்கும் குழைவைத் தவிர்த்திருக்கலாம். அசிஸ்டென்ட் கமிஷ்னராக வரும் நாசரின் பொடி தூவும் வக்கிரமான கேள்விக்கணைகள், கவுண்சிலருக்கு நெருக்கமானவன் என விஜய் கிருஷ்ணராஜ் செய்யும் அலப்பறை என படத்தின் இரண்டாம் பாதி ரசிக்க வைக்கின்றன.
படத்தின் முதற்பாதியில் லேசாகச் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது. 1995 ஆம் வருடம் கல்லூரி படித்தவர்களான பிரகாஷ்ராஜும் அர்ச்சனாவும் சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் இயல்பாய் நடந்திருக்க வேண்டிய உணர்வெழுச்சிகளுக்கும் சம்பாஷனைகளுக்கும் பதிலாக, இருவரும் தங்கள் பேச்சின் மூலம் பார்வையாளர்களுக்கு ஃப்ளாஷ்பேக்கை வசனங்களில் கடத்துகின்றனர். ராஜேஷ் கே.நாயரின் ஒளிப்பதிவில் படத்தின் பட்ஜெட் தெரிவதையும் படக்குழு தவிர்த்திருக்கவேண்டும். ஆதலால் படத்தின் முதற்பாதி சற்றே பொறுமையைச் சோதிக்கிறது.
படத்திற்கு வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது, சீதா பாத்திரத்தில் நடித்துள்ள ரேவதியின் கதாபாத்திர வார்ப்பு. எழுத்தாளரின் மனைவியாக வரும் ரேவதி க்ளைமேக்ஸை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகிறார். அவரது அறிமுகத்திலும் இயக்குநரின் அமெச்சூர்த்தனம் எட்டிப் பார்க்கவே செய்கிறது. அழியாத கோலங்களின் (1979) பலம் அதன் ஃப்ரெஷான ஒளிப்பதிவும், சீன் கம்போசிஷனும்தான். பசங்களைக் கடந்து செல்லும் ஷோபா, அதற்கும் அடுத்த காட்சியில் தலைமை ஆசிரியர் செய்து வைக்கும் அறிமுகத்துக்குப் பின்பே வாயைத் திறப்பார். ஆனால் விநாயகரிடம் நன்றி சொல்லும் கெளரவ வேடத்தில் வரும் ரேவதி முதற்கொண்டு அனைவரும் பேசிப் பேசியே இந்தப் படத்தில் கதையை நகர்த்துகின்றனர். படம் ஒரு சிறுகதை வாசிக்கும் திருப்தியைத் தந்தாலும், அதற்கான நுட்பங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், அழியாத கோலமாய் ரசிகர்கள் மனதில் என்றும் தங்கியிருக்கும்.
ஆண் – பெண் நட்பை, இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற கருவை இயக்குநர் எம்.ஆர்.பாரதி தொட்டுள்ளது சிறப்பு. ஆண் – பெண் உறவை, ஒற்றைப் பரிமாணத்திலே பார்க்கப் பழகிவிட்ட சமூகத்தில் இப்படியான படங்களின் தேவை அவசியமாகிறது. அவ்வகையில் பாலு மகேந்திரா போல், தனது முதல் படத்திலேயே பரீட்சார்த்த முயற்சி செய்து பார்த்துள்ள இயக்குநருக்குப் பாராட்டுகள்.
எந்த வயதானால் என்ன, எந்த பாலினமாக இருந்தால் என்ன, நட்பு என்பது அழியாத கோலமாய் மனதில் நிலைத்திருக்கும் என்பதைத்தான் இரண்டு படங்களுமே உணர்த்துகின்றன.