கேம் ஓவர் விமர்சனம்
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே, விளையாட்டு முடிந்துவிடும். அதன் பின்னான வாழ்க்கை உயிரிருந்தும், இருளுக்குள் சிக்கிய நரகமாகவே இருக்கும். ஸ்வப்னாவின் வாழ்க்கை அத்தகைய இருளில் மூழ்கிவிடுகிறது. 2018 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் செல்லும் ஸ்வப்னா, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு தன் தைரியத்தை இழந்து தனக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். கேம் ஓவர் என்ற நிலையில் இருந்து, எப்படி அவள் மீண்டும் வாழ்க்கைக்குள் புகுகிறாள் என்பதுததான் படத்தின் கதை.
நயன்தாரா நடித்த மாயா (2015) படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படம். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவான இறவாக்காலம் இன்னும் வெளியாகாதது துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். முதற்படத்தில், அவர் எப்படி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டாரோ, அதே போலவே, இப்படத்திலும் கட்டிப் போட்டுள்ளார். ...