Shadow

கேம் ஓவர் விமர்சனம்

game-over-movie-review

வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே, விளையாட்டு முடிந்துவிடும். அதன் பின்னான வாழ்க்கை உயிரிருந்தும், இருளுக்குள் சிக்கிய நரகமாகவே இருக்கும். ஸ்வப்னாவின் வாழ்க்கை அத்தகைய இருளில் மூழ்கிவிடுகிறது. 2018 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் செல்லும் ஸ்வப்னா, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு தன் தைரியத்தை இழந்து தனக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். கேம் ஓவர் என்ற நிலையில் இருந்து, எப்படி அவள் மீண்டும் வாழ்க்கைக்குள் புகுகிறாள் என்பதுததான் படத்தின் கதை.

நயன்தாரா நடித்த மாயா (2015) படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படம். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவான இறவாக்காலம் இன்னும் வெளியாகாதது துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். முதற்படத்தில், அவர் எப்படி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டாரோ, அதே போலவே, இப்படத்திலும் கட்டிப் போட்டுள்ளார். ‘ரேப்’ வழக்கை ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம், அது சம்பந்தப்பட்டவருக்கு எத்தகைய உணர்வதிர்ச்சியைத் (trauma) தருமென்பதைப் படம் பேசுகிறது. மருத்துவரான காவ்யா ராம்குமார், இப்படத்தின் திரைக்கதைக்கு உதவியுள்ளார். பெண்ணையும், பெண் உணர்வையும் பிரதானப்படுத்தும் கதைக்கு, ஒரு பெண் மருத்துவர் திரைக்கதையில் உதவியிருப்பது திரையுலகத்தில் நிகழும் நல்ல ஆரோக்கியமான முன்னெடுப்பு. படம் பார்க்கும் அனைவரும் இந்த அழகான வித்தியாசத்தை உணர்வார்கள். மேலும், இது போன்ற நேர்த்தியான காவ்யா ராம்குமாருக்கு வாழ்த்துகள்.

அமுதா எனும் இளம்பெண்ணின் மிகக் கொடூரமான கொலையில் படம் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில், அமுதாவின் அம்மா ரீனா தற்கொலைக்கு முயன்ற ஸ்வப்னாவைச் சந்திக்கிறார். அமுதா வாழ்க்கையை எப்படித் துணிவுடன் எதிர்கொண்டார் என்று கூறி ஆறுதலளிக்கிறார். விளையாட்டின் போக்கு மாறும் அந்தக் கிளைக்கதை மிக அழகாக வந்துள்ளது. படத்தின் ஆன்மா (soul) அந்த அத்தியாயம்தான். அமுதாவாக நடித்துள்ள சஞ்சனா நடராஜனும், அவரது அம்மாவாக நடித்துள்ள மலையாள நடிகை T.பார்வதியும் மிக நிறைவான பங்களிப்பினை அளித்துள்ளனர்.

ஸ்வப்னாவாக டாப்சி நடித்துள்ளார். அவரது கதை தேர்ந்தெடுக்கும் திறமை மீது மரியாதை கூடுகிறது. பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. கலை இயக்குநர் சிவசங்கரின் உழைப்பைப் பன்மடங்கு கோரியுள்ள படம். பார்வையாளர்களை இழுத்துப் பிடிக்கும் காரணிகளில் கலை இயக்குநரின் பங்கு மிக முக்கியம். இருட்டுக் காட்சிகளுக்கான கச்சிதமான ஒளி சேர்க்கை மூலம் ஒளிப்பதிவாளர் A.வசந்த்தும், த்ரில்லர் படத்திற்கான மூடை இசையமைப்பாளர் ரான் இதான் யோஹானும் படம் பார்க்கும் அனுபவத்தைத் தரமான சம்பவமாக உயர்த்தியுள்ளனர்.

மாயா போல் எக்கணமும் இது பேய்ப்படமாக மாறிவிடுமோ என்ற எதிர்பார்ப்பையும் ஆவலையும் திரைக்கதையின் போக்கு எழுப்புகிறது. ஆனால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், பார்வையாளர்களின் புரிதலுக்குச் சாமர்த்தியமாக விட்டு அசத்திவிடுகிறார் இயக்குநர் அஷ்வின் சரவணன். டாப்சிக்கு ஏற்படும் டேஜா வூ (Deja-Vu) மூலம், பார்வையாளர்களின் முதிர்ச்சியை நம்பி, க்ளைமேக்ஸை அவர் கட்டமைத்திருக்கும் விதம் மிக அற்புதம்.

Y NOT ஸ்டூடியோஸ் சசிகாந்தின் சோதனை முயற்சி மிக நன்றான விளைவை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சர்டு கெவினி படத்தொகுப்பில், 105 நிமிட கால ஓட்டம் உடைய இப்படத்தை, வித்தியாசமான சினிமா அனுபவத்தைக் கோரும் ரசிகர்கள் தவறாமல் கண்டு ரசிக்கலாம்.