என்று நிற்கும் இந்த அடாச்செயல்?
‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பது பழமொழி. சில தசாப்தங்களுக்கு முன், ஆசிரியர்களின் கையில் இருந்த பிரம்பு, பல மாணவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலாக இருந்தது. காலத்தின் வேகமான மாற்றத்தில், சேவையாய்ப் பார்க்கப்பட்ட கல்வி, வியாபாரமாய்ப் பரிணாமம் அடைந்து சொல்லொண்ணா சிக்கல்களைச் சமூகத்தில் கொண்டு வந்ததிலிருந்து, மாணவர்களின் மாற்றத்திற்கு உதவிய மந்திரக்கோல் மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது.
இதை அவதானித்த அரசாங்கமும், மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்களுக்குத் தடை விதித்துள்ளது. அறிவை வளர்க்க என்றிருந்த கல்வி, எப்பொழுது மதிப்பெண் வேட்டையாக மட்டும் மாறியதோ, அன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கண்ணியாக மாணவர்கள் மீது மன அழுத்தம் படர ஆரம்பித்துவிட்டது. சமீபமாக வேலூரில் நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதையும், சத்யபாமாவில் ஒரு கல்லூரி மாணவி...