TENET is a palindrome. முன்னிருந்து பின்னோக்கிப் படித்தாலும் சரி, பின்னிருந்து முன்னோக்கிப் படித்தாலும் சரி ஒரே வரிசையில் எழுத்துகளைத் தரும் சொல். அச்சொல்லை Ambigram ஆகவும் மாற்றித் தலைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது தலைப்பை 360° திருப்பினாலும், மீண்டும் அதே வரும்.
நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தின் தலைப்பில் இருக்கக்கூடிய இந்த பாலிண்டிரோமிற்கும் ஆம்பிகிராமிற்கும், திரைக்கதையுடன் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
இப்போது வரை இந்தத் திரைப்படத்தின் கதை என்னவென்று மிகச் சில நபர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நோலனின் திரைப்படங்களில் தொடர்ந்து பங்காற்றிவரும் நடிகரான மைக்கேல் கெய்னிற்கே கதை என்ன என்று தெரியாது. அத்தனை ரகசியமாக அதனை வைத்திருக்கிறார்.
நோலனைப் பொறுத்தவரையில் அவர் எழுதி இயக்கும் ஒவ்வொரு திரைப்படமுமே கனவுத் திரைப்படம்தான் என்ற போதிலும், ‘இந்தத் திரைப்படத்தின் உழைப்பில் மாபெரும் கனவு ஒளிந்திருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார்.
இதுவரை அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களின் தயாரிப்புச் செலவுகளையும் மிஞ்சியிருக்கிறது என்பதும் மிக முக்கியமான தகவல்.
கதைப்படி இந்தியாவும் ஒரு களம் என்பதால், டிம்பிள் கபாடியா இந்தத் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
நோலனின் பெரும்பாலான திரைக்கதைகள் காலத்தை (டைம்) மையமாகக் கொண்டவை, TENETஇன் மைய இழையும் டைமை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது.
வழக்கமாக நிகழும் டைம் டிராவல், கருந்துளை, ஆழ்மன துயிலின் மூலமாக அடுத்த பரிமாணத்தினுள் நுழைவது என்று சுத்தவிட்டதைத் தாண்டி, இப்போது வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறார்.
இதனை இதுவரைக்கும் வெளியாகி இருக்கும் இரண்டு டிரைலர்களையும் கூர்ந்து கவனித்தாலே ஓரளவிற்குக் கண்டுபிடித்துவிடலாம்.
அதாவது காலம் என்பது நம்மைப் பொறுத்தவரையில் முன்னோக்கி நகரும் ஒன்று. நம்முடைய இயல் உலகில் பின்னோக்கி நகரும் காலம் என்ற ஒன்று இல்லை. ஒருவேளை நான் முன்னோக்கி நகரும் காலத்திலும், நீங்கள் பின்னோக்கி நகரும் காலத்திலும் இருந்து, நாம் இருவருமே அருகருகில் இருந்தால்?
சுத்த விடுகிறதா? இந்த ஒற்றை வரியே சுத்த விடுகிறதே, இதை வைத்து எப்ப்டி அவர் ஒரு முழுநீள திரைகதையை எழுதியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது. அதனால்தானோ என்னவோ இப்போது வரைக்கும் அவர் அடைந்த உயரங்களை அவரால் மட்டுமே கடக்க முடிகிறது.
இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை படத்தின் தலைப்பைப் போலவே முன்னோக்கிச் சென்று, பின் பின்னிருந்து முன்னோக்கி நகர்ந்து எப்படியோ எதையோ ஒன்றை நம்முள் நிகழ்த்த இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.
ட்ரைலர் படி நமக்குக் கிடைத்த கதை என்பது,
மிகக்கடுமையான மூன்றாம் உலக யுத்ததின் மூலமாக உலகம் பேரழிவைச் சந்திக்க இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்த எதிர்காலத்தில் இருந்து ஒரு மனிதனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்து அவன் மூலமாக உலகைக் காப்பாற்றியாக வேண்டும்.
ஆக, நிகழ்கால மனிதர்களுக்கு காலம் முன்னோக்கியும், எதிர்கால மனிதனுக்குக் காலம் பின்னோக்கியும் நகரலாம் என்று கணிக்கிறேன்.
அப்படி அழைத்து வரப்படும் மனிதன் நாம் எதிர்கொள்ள இருப்பது அணுகதிர்வீச்சா அல்லது மிகப்பெரிய விண்கல்லா என்று கேட்கிறான். இவை இரண்டுமே இல்லை என்று கூறுகிறாள் நாயகி(?). அப்படியென்றால்? இதைவிடவும் பெரிதானது என்றால்? நிச்சயமாக நோலனால் அப்படியொன்றைக் கற்பனை செய்து பார்க்க முடியும். அதனைப் பார்ப்பதற்காத்தானே உலகமே காத்திருக்கிறது.
இந்த ட்ரைலரில் வரும் ஒரு காட்சியில் கடலில் செல்லும் அத்தனை மிதவைகளும் பின்னோக்கிச் செல்ல, நாயகன் மிதக்கும் மிதவையும் பின்னோக்கிச் செல்லும், ஆனால் நாயகனைப் பொறுத்தவரை அது முன்னோக்கிச் செல்வதை போல் காட்டப்பட்டிருக்கும். இதேபோல் பல காட்சிகளை உதாரணமாகக் கூற முடியும்.
இதே ட்ரைலரில் மற்றொரு வசனம் வருகிறது.
‘You are not shooting the bullet. You are catching it!’
எத்தனை அட்டகாசமாக நம்மை மீண்டும் மீண்டும் சுற்ற விடுகிறார்.
நோலனின் திரைப்படங்களில் காட்சி மொழி எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் வசனங்கள். காட்சிமொழியில் சுற்றவிடும் கதையை வசனமொழியின் மூலம் ஓரளவுக்குப் புரிய வைத்துவிடுவார்.
மேலே சொன்ன மையக் கருத்தை நமக்குப் புரியவைக்கும் பொருட்டு ட்ரைலரின் ஆரம்பத்திலேயே அவர் நமக்குச் சொல்வது, பற்றியெரியும் கூடத்தின் நெருப்பின் தன்மையை உணர முடியாத வரைக்கும் அது எப்படி இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. So if we want to feel it, we should wait for it.
ஆக எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்திருக்கும், எதிர்காலத்தோடு தொடர்புகொள்ள முடிந்த அந்த நாயகன் எதிர்கொள்ள இருக்கும் மூன்றாம் உலக யுத்தம் எப்படியானது என்பதைவிட, எப்படியான திரைக்கதையின் மூலம் அவன் நம்மையெல்லாம் காப்பாற்ற இருக்கிறான் என்பதே இப்போதைக்கு நமக்குத் தெரிந்தாக வேண்டிய விஷயம்.
நோலன் மிக எளிதாகக் கூறிவிட்டார்.
Don’t try to understand it, feel it. 😊
– நாடோடி சீனு