Shadow

தி வாரியர் விமர்சனம்

தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது.

மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் சத்யா. குரு, சத்யாவை நையப்புடைத்துத் தொங்க விட்டுவிடுகிறார். உயிர் பிழைக்கும் சத்யா, ஐபிஎஸ் அதிகாரியாக மதுரை வருகிறார். குருவின் சாம்ராஜ்ஜியம் நிர்மூலமாகிறது.

கமர்ஷியல் ஃப்ளேவர்கள் இல்லாமல் படம், புஜ பல பராக்கிரமசாலியான குருவிற்கும் நாயகனுக்கு இடையேயான மோதலாகச் சுருங்கி விடுகிறது. யாராலும் தன்னை அடித்து வீழ்த்த முடியாதெனும் வில்லனாக ஆதி நடித்துள்ளார். எஃப்.எம்.மில் பணி புரியும் விசில் மகாலட்சுமியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவருக்கும் தமிழில் இதுவே முதற்படம்.

கதையா முக்கியம்? அதைச் சுவாரசியமாகச் சொல்லும் திரைக்கதை தானே முக்கியம்! கதையைப் போலவே திரைக்கதையும் ஏற்ற இறக்கங்களின்றி நேர்க்கோட்டில் செல்கிறது. தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான நவீன் நூலியாவது சுவாரசியத்தைக் கூட்ட, கட்டிங் ஒட்டிங்கில் ஏதாவது ஜிம்மிக்ஸ் வேலைகள் செய்திருக்கலாம்.

ஒரே ஆறுதல், தெலுங்கு படமென்பதால், ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் கைவண்ணத்தில், மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், ‘புல்லட் பாடல்’ அதிரி புதிரி ஹிட்டாகியுள்ளது. தெலுங்கு படங்களின் ரசிகர் என்றால், இப்படத்தினைப் பார்ப்பதில் சிக்கல் எழாது.