Shadow

நிலை மறந்தவன் விமர்சனம்

Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை.

ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் குரூரக் கிளர்ச்சியை மட்டுமே அளிக்கிறது. ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில், இயக்குநர் அன்வர் ரஷீத் நிகழ்த்திய மேஜிக் இப்படத்தில் சுத்தமாக இல்லை. ஆனால், ஒரு சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் பணியை நிறைவாகச் செய்துள்ளார்.

மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான்ஸ் படம் முன்னதைப் பற்றிப் பேசுகிறது.

உண்மையிலேயே, மிகச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். தமிழாக்கம் செய்திருப்பவர் சர்வம் கிருஷ்ணார்ப்பணம். அவர், ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ எனும் நூலின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது (சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்பது தனி நபர் இல்லை – ஒரு குழுவாக இருக்குமோ என்ற ஐயமும் உள்ளது). மோகன் சி. மோசஸ் என்ற பெயரை சில இடத்தில் மியூட் செய்துள்ளனர்.

பஹத் பாசில் தன் நடிப்பால் செய்யும் மிராக்கிள் அற்புதமாக உள்ளது. நடிப்பு பேரரக்கன் என அவரை மனதார உச்சி முகரலாம். சத்தம் வராமல் வேகவேகமாகக் கையைத் தட்டுவது, ஒரு மந்தகாசப் புன்னகை, தன் வயமிழுந்து அவர் வில்லன்களை ஆட்டுவிப்பது என பஹத் பாசில் சுற்றியே படம் நகர்கிறது. மிராக்கிள் ஹீலர் எனும் பாத்திரத்திற்குக் கன கச்சிதமாய்ப் பொருந்துகிறார்.

நேரடி தமிழ்ப்படமாக இருந்திருந்தால், வெளிவந்திருக்குமா என்பது ஐயமே! மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்திற்குத் தடை கோரினால், தேவையற்ற சிக்கலாகிவிடுமோ என்று மெளனம் காப்பவர்களுக்கு ஆழ்ந்த வாழ்த்துகள்.