

BM ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.
விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வரத் தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இந்தக் கால சூழலில் சமூகப் பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதைப் பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வணிக நோக்கில் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்தக் குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்தக் குழுவினரைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


