32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வடம் – Rural sports entertainer

Dinesh R சேலம் Published: 28/02/2026 5 நிமிட வாசிப்பு Updated: 05/03/2026 சினிமா
எழுத்து அளவு:

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் கேந்திரன், ”கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன். அப்போது அவர், ‘நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா?’ என்றார். ‘நான் நிச்சயமாக எடுக்கிறேன்’ என்று சொன்னவுடன் அவரும், அவரும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.

இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களைத் தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரைத் தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாகப் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார்.

இந்தப் படத்தில் விமலுடன் நடித்த ‘பாண்டி முனி’ எனும் காளை மாட்டிற்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது ‘ஆக்ஷன்’ என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்” என்றார்

நடிகை சனஸ்கா ஸ்ரீ, ”நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌

புது ஹீரோயினுக்குச் சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னைக் கலாய்த்து கொண்டே இருப்பார்.

நான் சின்ன வயதில் ஸ்கூலுக்குச் செல்லும் போது இமானின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதைக் கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருஷத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான், “இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு பற்றிய படம். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்குப் பின்னணி பாடி இருக்கிறேன்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழுப் பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலைக் கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ், “விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும். அது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும், அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு கிராமத்தின் கதை. அதைச் சுற்றியுள்ள மக்களின் மனநிலை, அவர்களின் உறவுமுறை, இதை இந்தப் படம் பேசி இருக்கிறது” என்றார்.

நடிகர் விமல், ”இமான் சார் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ‘பாண்டி முனி’ பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.

எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பிப் பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.

படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது,அவர் ‘எதைப் பற்றியும் கவலைப்படாதே! அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு’ என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்தக் காட்சி அற்புதமாக வந்தது.

இயக்குநர் கேந்திரன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்ஷியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்ஷியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லிச் சொல்லி க்ளைமேக்ஸில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளைப் படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. படம் பார்த்த பிறகு தான் எனக்குத் திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையைக் கச்சிதமாகப் படமாக்கி இருந்தார்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.