

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர், ”நான் இந்தத் துறைக்குப் புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னைச் சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டைப் பற்றிச் சொன்னார். அது எங்களுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாகச் சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையைச் சொன்னாரோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ, காபி, பால், தயிர் என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டைப் பற்றிப் படம் எடுப்பது பாக்கியம் எனக் கருதுகிறோம்.
நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதைத் தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும் மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ், “தயாரிப்பாளரின் விருந்தோம்பலைப் பற்றி அனைவரும் சொன்னார்கள். எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது. நான் இப்படத்தின் முழுத் திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதைக் காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள் எனக் கேட்டேன். ‘நம்முடைய தேசத்தில் தான் ‘ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்’ என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதைச் சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்’ “ என்றார்.
விமல், “தயாரிப்பாளரைப் பற்றி ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் ‘வடம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்தப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்குத் தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்குச் சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆயிரம் துணை நடிகர்கள், மக்கள், மாடு பிடி வீரர்கள், சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தன. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம், ‘நீ சென்று ஆறுதல் கூறு’ என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்குக் கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளைத் தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதைப் பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதைக் கவர்ந்து விட்டார். அதற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதையை அவர் கவனமாகத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.


