Shadow

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

இரண்டு திருடர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் மற்றொரு திருடன், காதலைச் சொல்லி ஏமாற்றி திருடும் மற்றொரு திருடி, வட்டிக்கு பணம் கொடுத்து, பணத்தை திரும்ப கொடுக்காதவர்களிடம் அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்துவிடுவேன் என்று மிரட்டும் வில்லன், இவர்களுக்கு மத்தியில் தன் குடும்பத் தேவைக்காக டாக்ஸி ஓட்டிக் கொண்டே பெரும் தொகை கடன் கேட்டு அலையும் அப்பாவி இளைஞி. இந்தக் கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை தான் வல்லவன் வகுத்ததடா திரைப்படத்தின் கதை.

படத்தில் ஹைலைட்டாக இருக்கும் கதாபாத்திரம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தான். தன்னிடம் வழக்கு கொடுக்க வருபவர்களிடம் நாசுக்காக உண்டியல் வைத்து வசூல் வேட்டை நடத்துவதும், விஷமத்தனமாக சிரிப்பதும், கலையாத கேசத்தை மீண்டும் மீண்டும் சரி செய்தபடி ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கா..? என்று கேட்பதுமென ஒட்டுமொத்த படத்தையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர் இந்த இன்ஸ்பெக்டர் தான்.

திருடர்களாக வரும் சிரஞ்சீவியும் சக்ரவர்த்தியும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்கள். அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. சிரஞ்சீவியின் பெயர் விளக்கம் கேட்கும் இடத்திலேயே இதனைக் கொண்டு ஏதோ நடக்கப் போவதாக தோன்றுகிறது. அது கடைசியில் நடந்தும்விடுகிறது.

காதலைச் சொல்லி ஏமாற்றும் அந்த பெண் கதாபாத்திரத்தின் ஆரம்பக் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் படைக்கப்படவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் அணுகும் போதே, ஏனோ அந்த கதாபாத்திரம் மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுகிறது.

ஆனால் அந்தப் பெண் கதாபாத்திரம், வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆசாமியை ஏமாற்ற முயல்வதும், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக் கொள்ளும் இடங்களும் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவியிருக்கின்றன.

ஒட்டு மொத்த திரைப்படத்தில் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கும் பெண் டாக்ஸி ஓட்டுநர் கதாபாத்திரமும், அப்பெண்ணின் குடும்பத்தில் நிலவும் செயற்கைத்தனமான அசெளகரிய சூழலும் பெரிய கழிவிரக்கத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கவில்லை என்றாலும், கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில் அது பார்வையாளர்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பிற கதாபாத்திரங்களை சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை படத்தில் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிரியாகி நிற்கும் பொழுது, முதலில் யார் யாரை அழிக்கப் போகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பும், அதற்கான சுவாரஸ்யமும் படத்தினை காப்பாற்றி இருக்கின்றன.

சகிஷ்னா சேவியரின் இசை ப்ளாக் காமெடி ஏரியாக்கள் வரும் போது பழக்கப்பட்ட மலினமான பின்னணி இசைக் கோர்வைக்கும் மாட்டிக் கொள்ளுகிறது. குறிப்பாக பெரும்பாலான இன்ஸ்பெக்டர் காட்சிகளுக்கு என்று சொல்லலாம். சீரியஸான தருணங்களில் சற்று ஆறுதலாக ஒலித்திருக்கிறது பின்னணி இசை.

கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு கதைக்கும் கதை கூறலுக்கும் பக்க பலமாக இருந்திருக்கிறது என்றே கூறலாம்.

இதில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ், விக்ரமாதித்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விநாயகத் துரை எழுதி, இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். முதல் படத்திலேயே ஹைபர் லிங்க் வகைமை கொண்ட கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்த அளவிற்கு சுவாரஸ்யத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார். அதில் பாதி ஜெயித்தும் இருக்கிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இருந்து மத்திம காட்சிகள் வரை படத்தைப் பார்க்கும் நாம் எந்தெந்த கதாபாத்திரங்கள் மீது மனச்சாய்வு கொண்டு, யாருக்கு என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அது கண்டிப்பாக அப்படியே நடப்பதும், யார் யாரைக் கொல்லப் போகிறார்கள் என்பதான மோதல் சுவாரஸ்யமாக இருந்தாலும் அது உணர்வுபூர்வமாக இல்லாமல் தவறியதும், சில கதாபாத்திரங்களின் செயற்கைத்தனமான டிபிக்கலான நாடகத்தனமான நடிப்பும் படத்தின் சிறு சிறு குறைகள்.

கீதா உபச்சாரத்தைக் கொண்டு பட்த்தின் ஒவ்வொரு Chapterம் துவங்கினாலும், தலைப்பிற்கும் நடக்கின்ற கதைக்கும் பெரிய தொடர்பு இருப்பது போல் தோன்றவில்லை. கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் வரிகளான ‘வல்லவன் வகுத்ததடா” தலைப்பை எடுத்து கையாண்டிருப்பதும், அது தொடர்பான உபந்நியாசத்தை இறுதிக் காட்சியில் சேர்த்திருப்பதும் சிறப்பு.

மொத்தத்தில் ‘வல்லவன் வகுத்ததடா’ ஒரு நல்ல வரவேற்கத்தக்க முயற்சி.