Search

வஞ்சகர் உலகம் விமர்சனம்

Vanjagar-Ulagam-movie-review

வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக!

படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து இயக்கும் துரைராஜைப் பிடிப்பது, இளம்பெண் மைதிலியைக் கொன்றது யாரென விசாரிப்பது என்று கதை இரண்டு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் சவாரி செய்கிறது. மைதிலியின் கொலையில் இருந்து படம் தொடங்குவதால், அந்த ஒன்றின் மீதே இயக்குநர் மனோஜ் பீதாவும், கதாசிரியர் V.விநாயக்கும் சவாரி செய்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

ஒரு பத்திரிகை அலுவகத்தில் நெட்வொர்க் இன்ஜினியராகப் பணி புரிகிறான் சண்முகம். அவன் எதிர்வீட்டுப் பெண் மைதில் கொலை செய்யப்படுகிறாள். சண்முகத்திற்கு ஆதரவாக, அவனது அலுவலகத்திலுள்ள நிருபர்கள் விசாகனும் சம்யுக்தாவும் கொலையாளியைத் துப்புத் துலக்க இறங்குகின்றனர். மைதிலியினுடைய கணவனின் நண்பன், என்கவுன்ட்டரில் இறந்துவிட்டதாகக் கருதப்படும் சம்பத் திடீரெனத் தோன்றி, அவனும் நண்பனுக்காகக் கொலையாளியைத் தேடுகிறான். விசாகனும் சம்யுக்தாவும், சம்பத்தின் பழைய முதலாளி துரைராஜையும் பிடிக்க நினைக்கிறார்கள். துரைராஜும் கொலையாளியும் சிக்கினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுவதும் நாயகன் போல் வலம் வந்தாலும், நிருபராய் நடித்திருக்கும் விசாகன் சூலூர் வணங்காமுடி பாத்திரத்தில் வலுவான அழுத்தம் இல்லாததால் மனதில் நிற்க மாட்டேன் என்கிறார். அவர் எங்கும் இயங்காமல் அனைத்திற்கும் சாட்சியாக மட்டுமே வலம் வருவது காரணமாக இருக்கலாம். ‘சம்யுக்தாவை தான் ஷாம் என்றழைக்க முடியும், சண்முகம் என்ற பெயரை ஷாம்னு சுருக்கிக் கூப்பிட முடியாது’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க மட்டும் வருகிறார் அனீஷா அம்ப்ரோஸ். சம்யுக்தாவிற்கும் சண்முகத்திற்குமான எலி – பூனை மோதல் ஏனென்ற தெளிவில்லாததால், அது பலமுறை வார்த்தைப் போராக மட்டும் ரிப்பீட் ஆவதை ரசிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் விசாகன், காவல்துறை அதிகாரி வாசு விக்ரமுக்கும் இடையிலான புகைச்சலும் அப்படியே!

சண்முகமாகச் சிபி புவன சந்திரன் நடித்துள்ளார். நானியை ஞாபகப்படுத்தும் சாயலில் இருக்கிறார். ரொமான்டிக் காமெடி வகைமை படங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய முகமும் நடிப்பும் அவருக்கு வாய்த்துள்ளது. படம் இவரிடமிருந்து சம்பத்திடம் போனதும், படத்தின் த்ரில்லர் அம்சம் கனமான இருளைப் போல் பரவுகிறது. மனக்குழப்பங்களும் சிக்கலுமுள்ள தாதா போன்ற சம்பத் பாத்திரத்தை மிக அழகாகத் தன் நடிப்பில் கொண்டுவந்துள்ளார் குரு சோமசுந்தரம். சில வசனங்களை மிக நுணக்கமாய்க் கவனித்தால் மட்டுமே ரசித்துச் சிரிக்க முடிகிறது. மிகவும் இளைத்து, மீசையை மழித்து 17 வயதுக்காரராகவும் வருகிறார் குரு சோமசுந்தரம். ‘என்ன இவர் போய் இவ்ளோ சின்ன பையனா வர்றார்!’ என்ற எண்ணவோட்டம் மிக லேசாய் எட்டிப் பார்த்தாலும், காட்சியோடு பார்க்கும்பொழுது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரசிக்கமுடிகிறது. சாம் C.S.-இன் பின்னணி இசையே அதற்குக் காரணம். படத்தின் டோனைச் செட் செய்வதில், ஒளிப்பதிவாளர்கள் ரோட்ரிகோ டெல் ரியோ ஹெரரா மற்றும் சரவணன் ராமசாமியுடன் இணைந்து, சாம் C.S.-உம் முக்கிய பங்கு வகித்துள்ளார். பாடல்களும், மான்டேஜ் காட்சிகளும் செமயாக உள்ளன.

மைதிலியாகச் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். அதிக வசனங்கள் இல்லாத பாத்திரம். இன்னும் அழுத்தமாக அவரது கையறுநிலையைக் காட்டியிருக்கலாம். அது புரிய வரும்பொழுது படம் முடிந்து விடுகிறது. இரண்டு கதைகள், பல கதாபாத்திரங்கள் என்பதால், எந்த இழையில் யார் மீது கவனம் செலுத்துவது என்ற புரியாததால் படம் கொஞ்சம் அலைக்கழிப்பது போலுள்ளது.