Shadow

வெல்வெட் நகரம் விமர்சனம்

velvet-nagaram-movie-review

கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை.

படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி.

பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனிட்டோ ராயன் நடித்துள்ளார். இவர்களது வீட்டுக்கு, மைக்கேலாக நடித்துள்ள அர்ஜெயின் குழு வந்த பின், படம் வேறு ட்ராக்கிற்கு மாறுகிறது. டில்லியாக ரமேஷ் திலக், செல்வமாக சந்தோஷ் கிருஷ்ணா, சித்தப்பாவாக கண்ணன் பொன்னையா, ராக்கெட்டாக குமார் என மைக்கேலோடு சேர்த்து ஐவர் கொண்ட குழு அது. மேக்கப் போடுறேன் என கையில் எச்சில் துப்பி, பிரகாஷ் ராகவனின் முகத்தில் தடவுவதெல்லாம் அருவருப்பின் உச்சம். எஸ்.ஐ. குருவாக மதன் குமார் அந்த வீட்டிற்குள் வந்து ஏற்படுத்தும் குழப்பம் படத்தின் பதைபதைப்பிற்கு உதவியுள்ளது. நடிகை கெளரியாகக் கெளரவ வேடத்தில் கஸ்தூரி நடித்துள்ளார்.

இது கதாநாயகியை பிரதிநிதிப்படுத்தியுள்ள படம் என்றார் இயக்குநர் மனோஜ் குமார் நடராஜன். படத்தில் தெரிந்த முகம் என்றும், பிரதான பாத்திரம் என்று வேண்டுமானால் உஷாவாக நடித்திருக்கும் வரலட்சுமியின் பாத்திரத்தைச் சொல்லலாமே தவிர, வுமன்- சென்ட்ரிக் படம் எனச் சொல்ல இயலாது. வரலட்சுமி கதாபாத்திரத்தில், ஓர் ஆண் நடிகர் நடித்திருந்தாலும் கதையிலோ, படத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. நேம் டிராப்பிங்காக மட்டுமல்லாமல், கொடைக்கானல் காடு எரிந்ததென்ற விஷயத்தில் இன்னும் டீட்டெயிலிங்கைக் கூட்டி, ட்ராக் மாறாமல் சுவாரசியப்படுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.