Shadow

விஸ்வரூபம்.. II விமர்சனம்

Vishwaroopam-2-movie-review

2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும்

அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன?

ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர்.

அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. ‘சீசியம் பாம்’-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்லன் ஓமர் கடத்திவிடுகிறார். வெடிகுண்டில் இருந்து டெல்லியையும், ஓமரிடம் இருந்து பூஜாவையும் கமல் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதோடு படம் முடிகிறது. ஆனால், முதல் பாகத்தில் சொல்லப்படாக் கேள்விகளுக்கும் சேர்த்துப் பதில் சொல்ல கமல் முனைந்துள்ளதால், திரைக்கதை நீண்டு படம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணிக்கிறது. இதில், மக்கள் நீதி மய்யத்தின் 3 நிமிட விளம்பரமும் அடக்கம்!

முதல் பாகத்தின் பலம் அதன் துல்லியமான நறுக் வசனங்கள். இப்பாகத்திலோ, பேசிப் பேசியே மாய்கின்றனர். முதற்பாகத்தின் எனர்ஜி கமலிடம் இல்லையென்றே சொல்லவேண்டும். முன்னும் பின்னும் ஃப்ளாஷ்-பேக்கிற்குள் செல்லும் திரைக்கதை, இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டது போல் தொக்கி நிற்கிறது. அஸ்மிதாவான ஆண்ட்ரியாவும், விசாமும் எப்படி ஒன்றாகப் பணியில் இணைந்தனர் என்ற ஃப்ளாஷ்-பேக் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு சிதைந்துவிடாது. ஆனால், இரண்டு ஹீரோயின்களுக்கு நடுவில் அமர்ந்தே பயணிக்கும் கமல், அக்காட்சிகளை எல்லாம் சுவாரசியப்படுத்தத் தவறிவிடுகிறார். அதே போல், கமல் தன் தாயைத் தேடிப் போகும் காட்சி இல்லாவிட்டாலும், படத்தின் கதைக்கு, அதாவது ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த படத்துக்கு எந்தக் குறையும் நேராது. ஆனால், படத்திலுள்ள உருப்படியான காட்சிகளில் அதுவும் ஒன்று. விசாமின் தாயாக வஹீதா ரெஹ்மான் நன்றாக நடித்துள்ளார். என்றாலும், அல்ஜீமர்ஸ் உள்ளதாலோ என்னவோ ஒ காதல் கண்மணி லீலா சாம்சனை ஞாபகப்படுத்துவதாக உள்ளது அவரது பாத்திரம். படத்தின் இன்னொரு உருப்படியான காட்சி, இங்கிலாந்தில் அனந்த் மகாதேவனுடன் நடக்கும் உரையாடல்.

எல்லாம் முடிந்து பின் தமிழ்ப்படங்களில் போலீஸ் வருவது போல், முதற்பாகத்தின் சூப்பர் வில்லன் ராகுல் போஸ் வருகிறார். ஃப்ளாஷ்-பேக்கில் ஆங்காங்கே ஓமர் வந்தாலும் அவையெல்லாம் சுவாரசியமற்ற பழங்கதையாக உள்ளது. மிரட்டும் வில்லனாக அவர் திரையில் தோன்றும் பொழுது, படம் முடியும் தருவாயிற்குச் சென்று விடுகிறது. ஆனால், அந்த நேரத்திலும், ‘ஒன் நிமிட். அங்க மேல பாரு’ என ஃப்ளாஷ்-பேக்கிற்குப் போகிறார் கமல். கொலைவெறியில் இருக்கும் ஓமர், விசாமின் கதையை நம்ப மறுத்து, கழுத்தில் டைம் பாமைச் சுற்றி 40 நொடியில் வெடிக்குமாறு வைத்துவிடுகிறார். க்ளைமேக்ஸில் மீண்டும், வெறும் 36 நொடியில் எப்படி டைம்பாமைக் கழற்றி ஓமரிடம் தப்பினேன் என ஒரு சின்ன ஃப்ளாஷ்-பேக் ஓட்டுகிறார். படத்தில் காட்சிகளைச் சுவாரசியமாக அடுக்க, இயக்குநரின் ‘ஃப்ளாஷ்-பேக் மேனியா’ பெரிய தடையாக உள்ளதென்றே சொல்லவேண்டும். விஸ்வரூபம் எடுக்கும் முன் வாமனராய் இருந்த கதையை இரண்டாம் பாகத்தில் சொல்லியுள்ளார் கமல்.

முதற்பாகத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். முகமது ஜிப்ரானின் இசை, ஷங்கர்-எக்ஸான்-லாயுடைய பின்னணி இசை அளவிற்குச் சோபிக்கவில்லை. முதற்பாகத்தில் பாடல்கள் செய்த மேஜிக்கும் இப்படத்தில் மிஸ்ஸிங்.

விசாம் அகமது காஷ்மீரி எனும் நாட்டுப்பற்றுடைய முஸ்லீமிடம் கையும் களவுமாகச் சிக்கும் தேசத்துரோகியான ஈஸ்வர ஐயர் தற்கொலை செய்து கொள்ளும்பொழுது தெறிக்கும் ரத்தம் இந்தியாவாக மாறும் விஷுவல் அருமை. இது போன்று மிகச் சில காட்சிகளில் மட்டுமே கமல் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.