காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை.
படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான்.
ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில் அதிகமாக ஈர்ப்பது ஹரிஷ் தான். ஹை-ஃபை ஆன பொண்ணைக் காதலிக்கும் பசங்க அடையும் கலாச்சார அதிர்ச்சியை அழகாகத் தன் நடிப்பில் காட்டியுள்ளார் ஹரிஷ். அதற்காக லாஸ் ஏஞ்சல்ஸை, லோஸ் ஏஞ்சல்ஸ் என ஐ.டி. ஊழியரான அரும்பாக்கத்துப் பையன் படிப்பதாகக் காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
வெளிநாட்டினர்க்கு டிஸ்கோ சொல்லிக் கொடுத்தாலும், ரெய்சாவிற்குத் தந்தையாகவோ, மார்டன் ஆளாகவோ ஆனந்த் பாபுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், நைஸ் தோசை போடும் நாயகனின் அப்பாவாக ராஜா ராணி பாண்டியனை ஏற்றுக் கொள்ள முடிகிறது. சில காட்சிகளில் படத்தின் கனத்தைக் கூட்டவும் செய்கிறார். நாயகனின் அம்மாவாக நடிக்கும் ரேகாவிற்குப் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.
டெய்லர்மேன் தங்கராஜாக முனீஸ்காந்த் ரசிக்க வைக்கிறார். அவரை விடவும், நாயகனின் நண்பன் சதீஷாக வரும் தீப்ஸ் செம்மையாகக் கலக்கியுள்ளார். யூத்ஃபுல்லான, கலர்ஃபுல்லானதொரு படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் இளன்.
[…] இளன், பியார் பிரேம காதல் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி […]