Shadow

“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’ ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கே.ராஜன், “இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப் பெரிய படமான துருவ நட்சத்திரத்திற்குக் கூட ரிலீசாக முடியாத அளவிற்குப் பொருளாதார பிரச்சனை. அதற்குக் காரணம் படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இருக்கும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கடன்.

வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 பெரிய படங்கள் வரை தான் ரிலீஸ் ஆகின்றன. மற்ற நேரங்களில் தியேட்டர்கள் சின்ன படங்களின் ரிலீஸுக்கும் இடம் கொடுக்கிறார்கள். படம் எடுக்க வருபவர்கள் யாரையும் நம்பாமல் படம் எடுத்து தங்களுக்கு ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாருங்கள். இதுவரை கிட்டத்தட்ட 30 சின்ன படத் தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுத்து விட்டுத் திரும்பி வாங்க முடியாமல் தவித்து வருகிறேன். அவர்கள் கையில் படம் இருக்கிறது. சென்சாரும் வாங்கி விட்டார்கள். ஆனால் படங்களை ரிலீஸ் பண்ண முடியவில்லை. இன்று பெரிய படங்கள் 800 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்துக் கொண்டு விடுவதால் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்காரர்களும் பெரிய படங்களுக்கே ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு வருடம் முழுவதும் ஏற்படும் இழப்பை அதை வைத்து தான் சரி கேட்டுகிறார்கள். சினிமாவிற்கு இன்று சிரமம் தலைக்கு மேல் இருக்கிறது” என்று கூறினார்

தயாரிப்பாளர் கிருஷ்ணமணி, “நான் சிங்கப்பூரில் பல தொழில்கள் செய்து வருகிறேன். தஞ்சாவூரில் பிறந்து சென்னையில் பணியாற்றியதால் சினிமாவில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். அப்போதுதான் இயக்குநர் கிஷன்ராஜைச் சந்தித்தபோது, இந்தப் படத்தின் கதையைக் கூறினார். குறைந்த நாட்களிலேயே இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்தார். இது போன்ற நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவருவதற்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்

இயக்குனர் கிஷன்ராஜ், “படத்தின் தயாரிப்பாளருக்கு முழுக் கதையும் தெரியாது. ஒரு அவுட்லைன் மட்டும்தான் கூறினேன். என்னையும், எனது குழுவையும் நம்பி முதலீடு செய்து இப்போது இசை வெளியீட்டு விழா வரை கொண்டு வந்துள்ளார். மதுரை பக்கத்தில் உள்ள தென்னமநல்லூர் என்கிற ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஊர் மக்கள் எங்களைத் தங்கள் குடும்பத்தினராகவே நடத்தினார்கள். அவர்களுக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படத்தின் பின்னணி இசை உருவாக்கத்தின் போதே இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவிடம் இதைப் பார்த்துவிட்டு உங்களுக்குப் படம் வெளிவருவதற்கு உள்ளாகவே புதிய வாய்ப்பு தேடி வரும் என்றேன். அதேபோல அவருக்கு ஒரு பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ZEE MUSIC CO நிறுவனம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி உள்ளது.

நடிகர்கள்:

கார்த்திக்
மனோஜ்
ரஷ்மிகா திவாரி
வட்டகரா சதீஷ்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இயக்குநர் – கிஷன்ராஜ்
இசையமைப்பாளர் – விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு – LD
படத்தொகுப்பு – ராம்நாத்
பாடலாசிரியர் – ஹரிஹர சுப்பிரமணியம், வி ஜே விஜய்
கலை – பழனிக்குமார் M
மக்கள் தொடர்பு – கேப்டன் MP ஆனந்த்