Search

பிரஜினாகிய நான்

Actor Prajin

‘2003இல் டிவிக்கு வந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007இல் வெளியே வந்து விட்டேன். நான் டிவியிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.

இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள்தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை. சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு.

டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத் தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது என்பார்கள். இதற்கிடையே நான் 2007இல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.

என் முதல் படம் ‘சாபு த்ரீ’. அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து ‘தீ குளிக்கும் பச்சைமரம்’. அது மது அம்பாட் இயக்கிய படம். 2012இல் வெளியானது மார்ச்சுவரி, பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை. அந்தப் படம் பரவலான பாராட்டைப் பெற்றது. ஆனந்தவிகடன் 43 மார்க் கொடுத்தது. படத்துக்குப் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் விருதுகள் நிறைய வந்தன. அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சீனு ராமசாமி, சமுத்திரக்கனி, அறிவழகன் போன்ற இயக்குநர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றுத் தந்த படம்.

நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை.இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம். சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஈகோ தடுக்கும் என்ன செய்வது?

ஆனால், இதற்கெல்லாம் முன்னாடி 2010இல் ஒப்பந்தமான படம்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது.

5 ஆண்டுகள் விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும். அதனால் என் எடை 73 கிலோவை 6 ஆண்டுகளாகப் பராமரித்தேன். தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது. இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு முடித்த படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’.

படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருந்தாலும் வாங்கத் தயங்கினார்கள். அதனால் தயாரிப்பாளர் எம். பிரகாஷ் சிரமப்பட்டார். எங்களை நம்பி அனாமிகா பிக்சர்ஸ் வாங்கினார்கள். அது இளவரசன், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் விநியோக நிறுவனம். நம்பி வெளியிட்டார்கள். சென்னை நகரில் சத்யம் சினிமாஸ் வெளியிட்டார்கள். அது எங்களுக்கு நம்பிக்கையாகவும் பெருமையாகவும் இருந்தது.

இப்பொழுது, ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இதை தயானந்தன் இயக்கியிருக்கிறார். இவர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநராக இருந்தவர். இன்னொரு படம் ‘மிரண்டவன்’ .அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத் தயாராக இருக்கிறது.

தாமிரா இயக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் 2வது நாயகனாக நடிக்கிறேன். சமுத்திரக்கனி சார்தான் நாயகன். அவர்தான் என்னை டிவியில் அறிமுகப்படுத்தியவர். அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. பேசும் போதே நம்பிக்கை தருபவர் அவர்.

அடுத்து இன்னொரு புதிய படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கனவுகளோடு பிரஜின் பேசினாலும், தொலைக்காட்சியிலிருந்து சினிமாவில் இந்தளவு வருவதற்கு அவர் பட்ட சிரமங்கள் ஏராளம். ஆனாலும், போராடியே தனக்கான இடத்தைப் பிடிக்க முடியும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் பிரஜின்.