ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ஆவலை ஆறாம் பாக முடிவிலேயே ஏற்படுத்தி இருந்தனர். நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, வின் டீசலின் குழுவை ஒற்றை ஆளாக இருந்து அலைக்கழிக்கிறார் ஜேஸன். படத்தின் நாயகனே இவர் தானோ என சந்தேகிக்கும்படி ஜேஸன் ஏற்ற கதாபாத்திரமான டெக்கார்ட் ஷாவை வடிவமைத்துள்ளார் திரைக்கதை எழுதிய க்றிஸ் மார்கன். ராக்காக ரசிகர்களுக்கு பரீச்சயமான வ்ரெட்ஸ்லிங் புகழ் ட்வெயின் ஜான்சனுடன் ஜேஸன் ஸ்டாத்தம் மோதுவதில் இருந்து படத்தின் வேகம் காட்சிக்குக் காட்சி கூடிய வண்ணமுள்ளது. ஆறாம் பாகத்தை விட இப்படம் மிகச் சுவாரசியமாக இருப்பதுடன், சீட் நுனியில் அமர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் ரசிக்க வைக்கிறது.
பால் வாக்கரின் மறைவால், கதையை அதற்குத் தகுந்தவாறு மாற்றம் செய்ததோடு அல்லாமல் இந்தப் பாகத்தோடு அவர் வின் டீசலின் குழுவிலிருந்து ரிட்டையராவது போலும் முடித்துள்ளனர். படத்தை அவருக்கு டெடிகேட் செய்து முறைப்படியான மரியாதையைச் செய்துள்ளனர் படக்குழுவினர். பால் வாக்கரின் அறிமுகத்துக்கு தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி மரியாதை செய்யும் ஆரோக்கியமான போக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது. உருவ ஒற்றுமைக்காக பால் வாக்கரின் சகோதரர்களான கலேப் & கோடி வாக்கர்களை நடிக்க வைத்து, பாலின் முகத்துடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலை முகட்டில் கவிழ உள்ள பேருந்தின் மீதிருந்து பால் வாக்கர் ஓடி வரும் காட்சியில் திரையரங்கில் கரவொலி எழுகிறது.
ஆக்ஷன் விரும்பிகள் தவற விடக்கூடாத படம்.