Shadow

அம்பிகாபதி விமர்சனம்

ranjana

அம்பிகாபதி – தனுஷ் நடித்த ராஞ்சனா ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங். 1937இலும் 1957இலும் வெளிவந்த ‘அம்பிகாபதி’ படத்தில், நாயகனுக்கு ஏற்படும் முடிவு தான் இப்படத்தின் நாயகனுக்கும் ஏற்படுகிறது. அதனால் தான் இந்தத் தலைப்பை நீதிமன்றம் வரை சென்று சமரசம் பேசி பெற்றனர் போலும்.

காசி வாழ் தமிழ் அர்ச்சகரின் மகன் குந்தன் ஷங்கர். அவனுக்கு முஸ்லீம் பெண்ணான ஜோயா மீது காதல். ஜோயாக்கோ ஜஸ்ஜீத் சிங் மீது காதல். இந்த முக்கோணக் காதல் கதை தான் படத்தின் கதை.

குந்தன் ஷங்கராக தனுஷ். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட தனுஷ். சோனம் கபூர் தனுஷின் கன்னத்தில் அறைந்தால், கிடைத்தற்கரிய ஏதோ பெற்றதாய் அழகாக பதினைந்து முறையும் இளிக்கிறார். ‘என்னைப் பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்’ என வம்படியாகச் சுற்றி காதலிக்க வைப்பதிலிருந்து, கையை அறுத்து அச்சுறுத்தி காதலிக்க வைப்பதற்கு முன்னேறியிருக்கார். குழப்பமும், சுயநலமும் மிக்க இளைய சமுதாயத்தை அழகாகப் பிரதிபலிக்கிறார். தன்னை தேடி வரும் தலைமை பதவியை விட, தனது ஒரு தலைக் காதலின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருக்கும் பொறுப்பற்ற இளைஞன் பாத்திரத்திற்கு தனுஷை விட பொருத்தமானவர் வேறு யாராக இருக்க முடியும்?

ஜோயா ஹைடராக சோனம் கபூர். கல்லூரியில் படித்ததால், தனக்கு குந்தன் ஷங்கரை விட அறிவு முதிர்ச்சி அதிகம் என நம்பும் பாத்திரம். குந்தன் ஷங்கர் கையை அறுத்துக் கொள்ளும் பொழுது, அவனை சாடும் படித்த ஜோயா, தனது திருமணம் நின்ற பொழுது அதையே செய்கிறாள். இந்தியச் சமுதாயத்தின் அறிவு மட்டம், படித்தவன் படிக்காதவன் என்ற பாரபட்சமற்று அனைவரிடமுமே தட்டையாகவே உள்ளது என்பதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கடைசி வரை அழுத்தமாக வலியுறுத்துகிறார். சுயநலமும், புத்திசாலித்தனமும் (!?) உள்ள பாத்திரத்தில் சோனம் கபூர் நன்றாகவே நடித்துள்ளார். ஜஸ்ஜீதைக் காதலிக்கிறேன் என சோனம் சொன்னதும், தனுஷ் ஸ்கூட்டருடன் கங்கையில் போய் சோனமுடன் விழுகிறார். ஆனால் தனுஷின் அந்த மூர்க்கத்தைக் கொண்டே, ஜஸ்ஜீதை மணக்க திட்டமிடுகிறார் சோனம்.

ஜஸ்ஜீத் சிங்காக அபய் தியோல். சின்னி ஜெயந்தை ஞாபகப்படுத்துகிறார். 37 வயதில் கல்லூரி மாணவனாக தேமோவென நடிக்கிறார். படிக்காத தனுஷ் தன் தவறுக்கு தானே பொறுப்பேற்கிறார். ஆனால் லட்சியம் அது இது எனப் பேசும் சோனமும் அபயும், பழியை மற்றவர்கள் மீது போடுகின்றனர். தான் சொன்ன பொய் தான் ஜஸ்ஜீத்தின் நிலைமைக்கு காரணமென்ற குற்றவுணர்ச்சி இல்லாமல், சோனம் தனுஷை வெறுக்குகிறார். லட்சிய தலைவனான ஜஸ்ஜீத்தும், பெண்ணை நம்பி ஏமாந்துட்டேன் என சுய கழிவிரக்கம் கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார். அனைத்திலும் சமத்துவம்  என்பது லட்சியமாம், ஆனால் தேர்வில் ‘பிட்’ அடிப்பது பற்றி சின்ன குற்றவுணர்வு கூட ஏற்படாதாம். தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டுமென்பதற்காக, அதை சுட்டி காட்டும் நாயகியின் மீது காதல் வந்து விடுகிறது. என்னா வில்லத்தனம்!?

பட்டா பார்சால் கிராமத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் கிளர்ச்சி, இந்தியா கேட்டில் நடந்த மாணவர்களின் அணிவகுப்பைப் பற்றி எல்லாம் படம், ஊறுகாயைத் தொட்டு செல்வது போல் பதிகிறது. ஹிமான்ஷு ஷர்மாவின் கதை குழப்பமாக இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் குழப்பமான மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. 

தனுஷை காதலிக்கும் பிந்தியாவாக ஸ்வர பாஸ்கர் கலக்கியுள்ளார். பாரம்பரியமான தமிழ் நாயகி போல் நாயகனைக் காதலிப்பது மட்டுமே பிறவி நோக்கம் என வாழ்பவர். தனுஷின் ஆத்ம நண்பன் முராரியாக முகமது ஜீசன் அயூப் நடித்துள்ளார். இவ்விருவர் மட்டுமே திரையில் நமக்கு பழக்கப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாக வருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் எதார்த்த எண்ணப் போக்கினால் பீடிக்கப்பட்டு பார்வையாளர்களின் பொறுமையை ரொம்பவும் சோதிக்கின்றனர்.

மாணவர்கள் அரசியலுக்குள் இறங்குவதை அனைத்துப் படமும் தட்டையாகவே சித்தரிக்கின்றன. சாலைகளை சீர் செய்வது, பள்ளம் தோண்டுவது என அரசியலுக்குள் இறங்க கடினமாகப் போராடுகின்றனர். ஆனால் தொடங்கும் முன்பாகவே.. ஈகோ குறிக்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, அதிகாரம் யாருக்கு என அதகளமாகத் தொடங்குகின்றனர். 

படத்தின் கதையை விட நம்மை அதிகம் ஈர்ப்பது காசி தெருக்களே. தனுஷ் வெவ்வேறு மனநிலைகளில் சிவலிங்கம் முன் உடுக்கை அடிக்கிறார். கோபுரங்கள், கங்கை கரையோரங்கள், சாதுக்கள் போன்றவை முதல் பாதியின் நீளத்தை சகிக்க உதவுகிறது. இதை சாத்தியப்படுத்த உதவியவர் ஒரு தமிழர். நடராஜன் சுப்பிரமணியன் என்ற ஒளிப்பதிவாளர். நட்டி என்றழைக்கப்படும் அவர்… நாளை, மிளகா, முத்துக்கு முத்தாக போன்ற சில தமிழ்ப் படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்திருக்கும் தனுஷின் முதற்படம் இது. ஏமாற்றாத இசை என்ற போதிலும் புதிது எனக் கொள்ள ஏதுமில்லை.

Leave a Reply