Shadow

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

தென் மெட்ராஸ் கலாச்சார சங்கத்தின் (SMCA – South Madras Cultural Association) 46 ஆவது ஆண்டு இலையுதிர்கால விழாவான “ஷரதோத்சவ்”, அக்டோபர் 9 முதல் 13 வரை கொண்டாடப்படுகிறது. இதுவே சென்னையில் நிகழும் மிகப் பெரிய துர்கா பூஜை கொண்டாட்டமாகும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்.

SMCA இன் தலைவர் திரு. சுதீப் மித்ரா, “நாங்கள் துர்கா பூஜையை 46 ஆண்டுகளாகச் சென்னையில் கொண்டாடி வருகிறோம். இப்போது இரண்டாவது ஆண்டாக, இந்த இடத்தில் (கைலாஷ் கன்வென்ஷன்ஸ், ECR), மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாட பிரத்தியேகமான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். நிகழ்த்துகிறோம். நாங்கள் விஷயங்களைச் செய்துள்ளோம். எங்கள் பூஜையின் பிரமாண்டம், எங்கள் நிர்வாக அறங்காவலர் எங்களின் தொலைநோக்கு மற்றும் பணி பற்றி விளக்குவார். SMCA, தனது அறக்கட்டளையின் மூலமாக நிறைய நற்பணிகளைச் செய்து வருகிறது. இத்தகைய நற்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதே எங்கள் நோக்கமும் திட்டமும் ஆகும்” என்றார்.

SMCA இன் நிர்வாக அறங்காவலர் திருமதி லூனா போஸ், “SMCA அறக்கட்டளை, 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்த 41 ஆண்டுகளில், கல்வியை மேம்படுத்துவதிலும், சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் முதலிய துறையில் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதிலும் அர்ப்பணிப்புடன் நாங்கள் நீண்ட தூரம் பயணித்துள்ளோம். கலாச்சாரமும், அறப்பணியும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்துகிறோம். தேவையுள்ளவர்களுக்கு உதவி கிடைக்கப் பெறவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். சென்னைக்குள் மட்டுமல்ல, சென்னைக்கு வெளியே மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு அப்பாலும் எங்கள் உதவிக்கரங்களை நீட்டி வருகிறோம். இந்த உலகிற்கு மனிதாபிமானமும், இரக்கமும் கனிவும் மென்மையும் தேவை என்றார் சார்லி சாப்ளின். நாம் மற்றவர்களின் மகிழ்ச்சியில் வாழ வேண்டும்; மற்றவர்களின் துன்பத்தில் அல்ல என்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் அறப்பயணத்தைத் தொடர்வோம், சமுதாயத்திற்கு எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்றார்.

தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ஆர்.என்.ரவி, “காளராத்திரி மாதாவின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். சென்னையில் சின்ன வங்காளத்தைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதுதான் நம் நாட்டின் அழகு. அப்படி நம்மை இணைக்கும் சக்திகளில் ஒன்றாக அன்னை துர்கா இருக்கிறார். அவளுக்குப் பல ரூபங்கள், பல நாமங்கள். மகாராஷ்டிராவில் அவள் மா பவானி, தமிழகத்தில் அன்னைக்குப் பெயர் பத்ரகாளி. நம் நாட்டிற்கு ஏதேனும் இன்னலோ சிக்கலோ எழும்போது, துர்கா மாதா நம்மை ஒற்றுமைப்படுத்தி, தீமையை அழிக்கும் வலிமையை நமக்கு அருளுகிறாள். பாரத மாதாவும் அன்னை துர்கையின் ஒரு வடிவமே! துர்கா பூஜை என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல, அது நம் உள்ளார்ந்த சக்தியைப் புதுப்பிக்கும் செயலாகும்” என்றார்.

SMCA செயலாளர் மருத்துவர் நீலா கங்குலி நன்றியுரை வழங்கியதும், கலை நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. SMCA-வின் செயற்குழு உறுப்பினரும், புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணருமான மருத்துவர் அனிதா ரமேஷ், “இலையுதிர்கால திருவிழாவான ஷரதோத்சவ், அனைத்துத் தரப்பு மக்களையும், கலாச்சாரங்களையும், சமூகங்களையும் ஒன்றிணைத்து, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் பிணைப்பிற்குள் கொண்டுவருகிறது. இதன் மூலம் நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் தூண்டுகிறது. சுவாமி விவேகானந்தர், ‘மதத்தின் ரகசியம் கோட்பாடுகளில் இல்லை. அதைப் பின்பற்றும் நடைமுறையில் உள்ளது. நல்லவனாக இருப்பதும், நல்லது செய்வதுமே, மதத்தின் உண்மையான நோக்கம்’ என்றார். அவரது மேற்கோளை உண்மையாக உள்வாங்குவதன் மூலம், SMCA ஆனது, இடையிடையே கொண்டாடும் விழாக்களைத் தவிர்த்து, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்து நற்பணிகளைச் செய்து வருகிறது. எங்களின் தொண்டு நிறுவனமான SMCA அறக்கட்டளை, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, சமூக – பொருளாதார கஷ்டங்களைப் போக்குவதற்கும், சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினரிடையே வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது” என்றார்.