Shadow

வேட்டையன் விமர்சனம்

“மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்.”

– அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி

விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன்.

ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது ‘பேட்டரி’ பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். ‘அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்’ என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரமாகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனாலும், எஸ்.பி. மீதான அவருடைய சாஃப்ட் கார்னருக்கான காரணம்தான் மர்மமாக உள்ளது. ‘உங்க கைகளில் பாவக்கறை’ என அதியனுக்கு வலித்து விடக்கூடாதென குணமாகவும் தன்மையாகவும் புரிய வைக்கிறார். அதியன், பெரிய மனிதராகக் குற்றத்தைப் பொதுவெளியிலேயே ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கிறார். ஆனால், ‘இங்கே சிஸ்டம் சரியில்லை’ என ரஜினிகாந்த் சொன்னதற்கு ஒப்ப, குற்றவாளி அதியன் NPA-வில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். நீதிபதி சத்யதேவோ புளகாங்கிதமடைகிறார்.

அதியனைக் கொல்ல உலகத்தின் மிகச் சிறந்த கொலைகாரனை அழைத்து வருகின்றனர். அவனோ ஒருமுறை சுட்ட பின், மறுமுறை சுடுவதற்கு அரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் மண்ணாந்தை அசாஸினாக இருக்கிறான். நாயகனுடன் இருக்கும் யாரேனும் ஒருவர் கொல்லப்படவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு ஒரு காட்சி வைத்துள்ளனர். ஒரு கொலையை எப்படிக் காட்சிப்படுத்தவேண்டும் என்ற பொறுப்புணர்வோ, கலாப்பூர்வ பிரக்ஞையோ இன்றி, அக்காட்சியை மறுபடியும் மறுபடியும் உபயோகித்துள்ளனர். ஒரு காட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், குழந்தைகளுடன் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் நிலை முதலியவற்றை மனதில் கொள்ளாத இயக்குநருக்கும் படத்தொகுப்பாளருக்கும் கண்டனங்கள்.

வழக்கமான கமர்ஷியல் தமிழ் சினிமா நாயகிகளைப் போன்றே ஞானவேலும் மஞ்சு வாரியர் என்ற சிறந்த நடிகையை ஒரு பாடலுக்கும் , சில காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ரோகிணி, அபிராமி, கிஷோர் போன்ற திறமைசாலிகளும் வீணடிக்கப்பட்டுள்ளனர். ரித்திகா சிங்கிற்கும் செட் ப்ராப்பர்ட்டி போல் அதியனுடன் வருவதைத் தவிர பெரிதாக வேறு வேலையில்லை. பாகுபலியை நாடு கடத்திய பல்வாள் தேவன் ராணாவும் வில்லனிஸத்தில் மிரட்டும்படியாகத் திரைக்கதை அமைக்கப்படவில்லை.

ஜெயிலரை விட பல மடங்கு ஆசுவாசுமளிக்கும் படம். ரஜினி படமாகவும் இருக்கவேண்டும், தனக்குப் புகழை ஈட்டிக் கொடுத்த ஜெய் பீம் படத்தினால் கிடைத்த பிம்பத்தையும் தக்க வைத்துக் கொள்ள முனைந்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். ரஜினி படமாக வந்த அளவிற்கு, சமூக நீதி பேசும் படமாக வேட்டையன் உருமாறவில்லை. காரணம், எடுத்துக் கொண்ட கருவினையே அதன் முழுப் பரிமாணத்தைப் பற்றிப் பேச முடியாமல் பூசி மெழுகப்பட்டுள்ளது. நீட் தேர்வு சரியா, தவறா எனும் கேள்விக்குள் செல்லாமல், நீட் பயிற்சி மையத்தில் நிகழும் ஊழலை மட்டுமே மையப்படுத்தி சர்வ ஜாக்கிரதையாக நழுவிக் கொள்கிறது படம். என்கவுன்ட்டர் என்பது மனிதாபிமானமற்ற செயல் எனும் கருத்தாக்கத்திற்குள்ளும் முழுமையாகச் செல்லாமல், போலி என்கவுன்ட்டர்கள் கூடாது என்று ஓரத்திலேயே நின்று ‘ஹே, ஹே’ என்று மட்டும் ஒலியெழுப்பி முடித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். இருபது வருடங்களுக்கு முன்பே, மரண தண்டனை கூடாது என எடுத்துக் கொண்ட கருவை அழுத்தமாக, வெளிப்படையாக, கலாப்பூர்வமாக, சுவாரசியமாக விருமாண்டியில் சொல்லியிருப்பார் இயக்குநர் கமலஹாசன். ஆனால் இரண்டு தசாப்தத்திற்குப் பிறகும், ஈயம் பூசினது போலவும் இருக்கவேண்டும், பூசாதது போலவும் இருக்கவேண்டும் என்றுதான் படமெடுக்க முடிகிறது என்றால், கருத்தியல் ரீதியாகவும், கலாரீதியாகவும் தமிழ் சினிமா சந்திக்கும் தேக்கநிலை கவலையளிக்கிறது. ‘என்கவுன்ட்டர் வேணும்; அதுல போலித்தனம் வேணாம்’ எனும் இயக்குநரின் என்னத்த கண்ணையாத்தனத்தால், வேட்டையன் வைத்த குறி தவறி தவறியுள்ளது