Shadow

அரவான் விமர்சனம்

Aravaan

அரவான்குருஷேத்திரப் போர் தொடங்கும் முன் பண்டவர்கள் ‘அரவான்’ என்பவரை பலி கொடுப்பர். ஆக பலி கொடுக்கப்படும் நபரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.  இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளது ‘காவல் கோட்டம்’ நாவலிற்கு சாகித்ய அகாடெமி விருதுப் பெற்ற சு.வெங்கடேசன். அந்த நாவலின் சிறு அத்தியாயத்தை படமாக எடுத்துள்ளனர் சில மாற்றங்களுடன். 18ஆம் நூற்றாண்டில் நடப்பதாக படம் தொடங்குகிறது. அங்காடித் தெரு இயக்கிய வசந்தபாலன் சரித்திரக் கால படம் ஒன்றினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளார்.

தனது ஊர்ப் பெயரைச் சொல்லி துப்பு வாங்கி, தனியாளாக களவாடி வரும் வரிப்புலியைத் தேடிச் செல்கிறார் கள்ளர் தலைவர் ஆன கொம்பூதி. வரிப்புலியின் திறமையால் கவரப்பட்டு அவனையும் ஊர்ப் பெரியவர்களின் பேச்சை மீறி தன்னோடு களவில் இணைத்துக் கொள்கிறார் கள்ளர் தலைவர். தன்னைப் பற்றிய செய்திகளை ரகசியமாகவே வைத்திருக்கும் வரிப்புலி, கொம்பூதியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தான் யார் என்பதை பகிரங்கமாக பகிர்கிறான். அதன் பின் ஏற்படும் விளைவுகளோடு படம் நிறைவுறுகிறது.

முறுக்கேறிய உடம்புடன் நாயகன் ஆதி. மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி என நான்குப் படங்களில் நடித்திருந்தாலும்  ஆதிக்கு அரவான் அவரது கேரியரில் மிக முக்கியமானதொரு படமாக நிலைத்து நிற்கும்.  கொள்ளைக்காரன் வரிப்புலி ஆக அமர்க்களம் பண்ணும் பொழுதும்; காவற்காரன் சின்னாவாக பொறுப்புடன் இருக்கும் பொழுதும், பலி ஆகப் போகும் நாளிற்காக காத்திருக்கும் பொழுதும் என ஆதி சிறப்பாகவே நடித்துள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தி போல் வாயால் ஒலி எழுப்புவதை தவிர்த்திருக்காலம் என படுகிறது. நல்லவேளை ஆக சில காட்சிகளில் தான் அப்படி ஒலி எழுப்புகிறார்.

‘கொம்பூதி’ ஆக பசுபதி வாழ்ந்துள்ளார். படத்தின் முதல் பாதி நாயகன் என்றே சொல்லலாம். இரண்டாம் பாதியிலும் நடிக்க காட்சிகள் அவருக்கு இருந்திருந்தால் படத்தின் நாயகனே அவர் தான் என அறுதியிட்டு கூறலாம். கபீர் பேடி சில காட்சிகளிலேயே ன்றினாலும் கம்பீரமான ராஜாவாக வருகிறார். பாளையகாரர் ஆன அவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இரண்டு ஊர்களுக்கு இடையிலே சம்பவிக்க இருக்கும் சண்டைத் தவிர்க்கப் படுகிறது. ஆனால் அவரின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றியோ, அதன் பின் அவ்விரு கிராமங்களுக்கு இடையே ஆன உறவுப் பற்றியோ படத்தில் பதியப்படவில்லை. ரத்தத்திற்கு ரத்தம் என சூளுரைக்கும் கரிகாலனிற்கு அது கிடைத்து விடுகிறது. எனினும் நாயகனை வெஞ்சினத்துடன் துரத்துவது ஏன் என்று தெரியவில்லை. பத்து வருடங்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் சின்னா (ஆதி), அதே பிராந்தியத்தில் தாடி வளர்த்துக் கொண்டு சுற்றுகிறார். ஒருவேளை தமிழ்ப்பட நாயகன் என்பதால் தாடி வளர்த்தாலே போதும் என்ற நிறைவு ஏற்பட்டு விட்டது போலும். கரிகாலன் ஆதியைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுக் கொள்கிறார். ஆனால் ஆதியோ பசுபதியின் உயிரைக் காப்பாற்ற தான் தனது ரகசியத்தைவெளியிட்டு மாட்டிக் கொள்வதாக கூறி தியாகியாக உயர பார்க்கிறார். தானொரு காவல்காரன் என்ற பெருமை உடைய நாயகன் ஏன் களவில் ஈடுபடுகிறான் என்றும் தெரியவில்லை. அதுவும் பசிக்காக திருடுபவர் அல்ல. அரண்மனைக்குள் புகுந்து ராணியின் வைர அட்டிகையைத் திருடும் அசகாய திருடன்.

கெளரவ வேடத்தில் பரத். பரத்திற்கும் பாளையத்துக்காரரின் மனைவி மற்றும் அஞ்சலி இருவருடன் இருக்கும் உறவைப் பற்றி போகிற போக்கில் அழுத்தமாக பதிந்துள்ளனர். களவாணியில் மிரட்டிய திருமுருகன் நாயகனின் நண்பர் ஆக அற்புதமாக நடித்துள்ளார். வனபேச்சி ஆக தன்ஷிகா, சிமிட்டி ஆக அர்ச்சனா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவ்விருவரைப் போல் பாளையாக்கார மனைவி ஆக வரும் ஸ்ருதி பிரகாஷ், தாசியாக வரும் ஸ்வேதா மேனன், கூத்து ஆடுபவராக வரும் அஞ்சலி என மேலும் மூவர் வெள்ளைத் தோலுடன் உள்ளார்கள். மரு ஒட்டினால் மாறு வேடம் என்பது போல் திட்டு திட்டாய் மை பூசிக் கொண்டால் போதும் போலும்.

மகாபாரதப் போரில் அரவான் விருப்பத்துடன் தன்னை பலி கொடுத்துக் கொள்ள முன் வருவார். ஆனால் இப்படத்தின் நாயகனோ விரும்பி பலி கொடுத்துக் கொள்ள முன் வரவில்லை. தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் பலி என்பதாக சடங்காக பாவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் முடிவில் ‘மரணத் தண்டனையை ஒழிப்போம்’ என சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்கிறார்கள். அதை நியாயப்படுத்தும் படியாக திரைக்கதையாவது அமைத்திருக்கலாம். ‘ஒரு வீர வரலாறு’ என தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒலிக்கிறது. வகையாக மாட்டிக் கொள்வதில் வீரமும், தியாகமும் எங்கு வந்தது என தெரியவில்லை. ஒருவேளை காளையை நாயகன் அடக்கும் ஒரே ஒரு காட்சியை மனதில் கொண்டு அப்படிச் சொல்கிறார்கள் போலும். ‘கூடுதல்’ கதை, திரைக்கதை, இயக்கம் வசந்தபாலன். நாயகன் சம்பந்தப்பட்ட கதையை கூடுதலாக இயக்குனர் இணைத்துள்ளதாக தெரிகிறது. வசனங்கள் 18 ஆம் நூற்றாண்டுத் தமிழா என்பதில் ஐயம் ஏற்படுகிறது. ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப் பட்ட  இன்றைய தமிழ்ப் போலவே உள்ளது. அதுவே சில இடங்களில் உச்சரிப்பு புரியவில்லை. நல்லவேளை அவர்கள் 18ஆம் நூற்றாண்டு தமிழ் பேசவில்லை என்று ரகசியமாக மகிழ்ந்துக் கொள்ளலாம்.

நிலா.. நிலா..’ பாடல் அளவு கார்த்திக்கின் பின்னணி இசை சோபிக்கவில்லை. படத்தின் முதுகெலும்புகள் என ஒளிப்பதிவாளர் சித்தார்த்தையும், கலை இயக்குனர் விஜய் முருகனையும் சொல்லலாம். அந்தக் காலக் கட்டத்திற்கு நம்மை அவர்கள் இருவரும் அழைத்து சென்றாலும், வலுவற்ற திரைக்கதை எத்தகைய பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

Leave a Reply