Shadow

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

Azhagarsaamiyin Kuthirai

அழகர்சாமியின் குதிரை – இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான ‘ஒன்பது ரூபாய் நோட்’டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான ‘அழகர்சாமியின் குதிரை’யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார்.

ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் எல்லையில் உள்ள கோயில் மண்டபத்தில் இருக்கும் மரக் குதிரை காணாமல் போகிறது. திருவிழா தடைப்படுமே என ஊர் மக்கள் அஞ்சும் நேரத்தில் உயிருள்ள குதிரை ஒன்று ஊருக்குள் வருகிறது. அழகரின் குதிரை தான் அது என மகிழ்ந்து, அக்குதிரையைப் பிடித்துக் கொள்கின்றனர். தனது பொதிக் குதிரையைத் தேடி வரும் குதிரையின் சொந்தக்காரனுக்கு, குதிரையை தர மறுக்கின்றனர் ஊர் மக்கள். குதிரையின் சொந்தக்காரன் குதிரையை மீட்டானா, அழகருக்கு திருவிழா நடந்ததா என்பதற்கு விடைகளுடன் படம் நிறைவுறுகிறது.

குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியாக அப்புக்குட்டி. வஞ்சனை இல்லாத உடல், வஞ்சம் இல்லாத உள்ளம் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஆளாய் பொருந்திக் கொள்கிறார். அரிதார பூச்சற்ற இயல்பான மனிதர்கள் எவ்வளவு அழகானவர்கள் என்பதற்கு நிரூபனமாய் தெரிகிறார் திரையில். பரந்த வயிறு, பரட்டை தலை என்றிருக்கும் அழகர்சாமி, மற்றவர்களின் கோணத்தில் இருந்து அவர்களின் மகிழ்ச்சியை யோசித்து, அவர்களின் கொண்டாட்டத்தைக் கெடுக்க விரும்பாத தன் உயர்ந்த குணத்தால் அசரடிக்கிறார்.

அழகர்சாமியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும் பெண் ராணியாக சரன்யா மோகன். வெண்ணிலா கபடிகுழு படத்தின் தொடர்ச்சியாக, சாந்தமாய் அறிமுகமாகி பாந்தமாய் சில காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார்.

ஊர் தலைவரின் மகன் ராமகிருஷ்ணனாக பிரபாகரன், கோடாங்கி மகள் தேவியாக அத்வைதா. பாஸ்கர் சக்தியின் படைப்பில் நாயக, நாயகி இடத்தில் இருக்கும் பாத்திரங்கள் இவர்களே. ஆனால் அப்புசாமியின் இயல்பான நடிப்பாலும், திரைக்கதையில் சேர்க்கப்பட்ட அப்புசாமியின் காதல் கதையாலும் பின்னால் தள்ளப்படுகின்றனர் பிரபாகரன், அத்வைதா. எனினும் கண் பார்வைகளாலும், சமிக்ஞைகளாலும் கவருகிறார் அத்வைதா.

இளையராஜா படம் பார்ப்பவர்களை, தொடக்கம் முதலே தனது பிண்ணனி இசையில் மூழ்க வைத்து ரசிக்க வைக்கிறார்.

கதை, வசனம் பாஸ்கர் சக்தி. நகைச்சுவை தூக்கலாக இருக்கும் சிறுகதை அழகர்சாமியின் குதிரை. உதாரணத்திற்கு உள்ளூர் கோடாங்கியின் மனைவியின் சரசம்மாளின் பாத்திரமும், அவர் தன் கணவன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரு சான்று. அந்த உணர்வு திரைப்படத்திலும் பாதிக்காத அளவு வசனங்களால் உயிர் கொடுத்துள்ளார் பாஸ்கர் சக்தி.

திரைக்கதை, இயக்கம் சுசீந்திரன். தனது இரண்டாம படமான ‘நான் மகான் அல்ல‘ என்ற வணிகமய படத்திற்கு மீண்டும் தனது முதல் படமான ‘வெண்ணிலா கபடிகுழு’ போல ஒரு தரமான படத்தை அளித்துள்ளார். மரத்தின் நிழல் நகர்ந்ததும் அப்புசாமிக்கு நிழல் அளிக்கும் குதிரை, எங்கே தன் குதிரையைப் பறித்து விடுவார்களோ என போராடும் அப்புசாமி என இரண்டு உயிர்களுக்கு இடையில் உள்ள பிணைப்பினை கவித்துவமாக திரையில் கொண்டு வருகிறார். காவல்துறை ஆய்வாளர் ராஜாராமனாக வரும் அருள்தாஸின் தேர்வு கச்சிதமாய் பொருந்துகிறது. மைனா படத்தைத் தொடர்ந்து மீண்டும் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பினை நடத்தி உள்ளனர். அப்படத்திலேயே போதுமான அளவு தேனி மலைத் தொடர்களைக் காட்டப்பட்டு விட்டதால், மலையின் அடிவார அழகினைத் திரையில் விருந்தாக்கியுள்ளார் தேனி ஈஷ்வர். அனல் அரசின் சண்டைக் காட்சி உணர்ச்சிப் பூர்வமாய் படமாக்கப்பட்டுள்ளது. கோயில் திரு விழாவிற்கு நன்கொடை வசூல் செய்யப் போகும் பெரியவர்களின் பரிதாப் நிலைமை ரசிக்க வைக்கிறது.

சிறுகதையை திரைப்படமாக எடுத்திருக்கும் உன்னத முயற்சிக்காக பாராட்டப்பட வேண்டியவர். அந்தச் சிறுகதை தரும் வாசிப்பனுவத்தை விட, திரைப்படமாக அக்கதையை நுகரும் பொழுது மேலான அனுபவத்தையே தருகிறது. எனினும் இயல்பாய் அச்சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது ஏற்பட வேண்டிய தாக்கம், படத்தின் முடிவின் பொழுது பொசுக்கென பெய்யும் மழையாலும்; ஊர் தலைவரின் அதீத உணர்ச்சி வசப்படலாலும்; ஏனைய மக்களின் மழைக் கொண்டாடத்தாலும் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது.

அழகர்சாமியின் குதிரை பராக்கிராம நாயகன், அழகான நாயகி, ஊரை அடித்து உலையில் போடும் வில்லன், வெளிநாட்டில் படம் பிடிக்கப்படும் பாட்டு, பறந்து பறந்து போடப்படும் சண்டை என எதுவும் இல்லாத நல்லதொரு உதாரண மாற்று சினிமா.

Leave a Reply