லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை.
போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய் சேதுபதி கலக்கியுள்ளார்.
சுதந்திரம் அடைந்த இந்தியா, இத்தனை வருடங்களில் என்ன சாதித்துள்ளது என்று ஊரில் இலந்தைப் பழம் பொறுக்கித் தின்று கொண்டிருந்த காந்திக்கு சென்னை காட்டுகிறது. ‘பிரம்மச்சாரிக்கு கல்யாணம் ஆனது போல் ஆவணம் கிடைக்கும்; நடந்திராத கல்யாணத்துக்கு விவாகரத்து கிடைக்கும்; தொலையாத ஆவணங்கள் தொலைந்ததாக முன் தேதியிட்ட எஃப்.ஐ.ஆர். கிடைக்கும்; பெண்களும் ஜீன்ஸைத் துவைக்காமல் மூன்று நாட்களுக்கு மேல் அணிவார்கள்; ஆயிரம் ரூபாய் சன்மானம் கிடைத்தால் நாற்பதாயிரம் ரூபாய் கணக்கில் டேலி ஆகாது; நவீன நாடகக் குழு நடிகர்களை விட அங்கு அக்கவுன்ட்ஸ் பார்ப்பவர்களுக்கு உள்ளிருந்து நன்றாக நடிக்க வரும்; சென்னையில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் அவர்கள் வீட்டு மின்சார பில்லைக் குடியிருப்போரிடம் வாங்கிக் கொள்வார்கள்’ போன்ற பல படிப்பிணைகளை சென்னை வாழ்க்கை காந்திக்குக் கற்றுக் கொடுக்கிறது.
காந்தியோ படித்தவர்; படிக்காத முத்துப் பாண்டிக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கிறது? ‘சென்னையில் ஒரு வீடு இருந்தால், சுமாரான தோற்றத்தில் இருக்கும் ஆணுக்கும் அழகான மனைவி கிடைக்கும்; லண்டன் சிட்டிசன்களுக்கு வேலை இல்லைன்னா அந்த நாட்டின் அரசாங்கம் பணம் தரும்; தும்மினால் லண்டன் விசா கிடைக்கும்’ என அவரின் புரிதல்கள் அட்டகாசம். முதல் பாதியின் கலகலப்புக்குப் பாண்டியாக நடித்திருக்கும் யோகி பாபு பொறுப்பேற்கிறார்.
‘லண்டன்ல மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாங்க?’
‘டிபோர்ட் (deport) பண்ணிடுவாங்க!’
‘என்னது டீ போட்டுத் தருவாங்களா?’ என முதல் பாதி முழுவதும் அதகளம் செய்கிறார் யோகி பாபு. ‘அவன் ஊரையே முழுங்கிடுவான்’ என லண்டன் சென்று விடும் பாண்டியைப் பற்றி காந்தி சொல்வார். உண்மையிலேயே, முதல் பாதியில் விஜய் சேதுபதியை விழுங்கி விடுகிறார் யோகி பாபு.
படத்தின் இரண்டாம் பாதியைக் கலகலக்க வைக்கின்றனர் வக்கீலாக வரும் ஜார்ஜும், அவரது அசிஸ்டென்ட்டான வினோதினியும். மணிகண்டனின் முந்தைய படத்தில் எப்படி குற்றமே தண்டனை ஆனதோ, இப்படத்தில் எது சீரியஸோ அதுவே காமெடி, எது காமெடியோ அதுவே சீரியஸாக உள்ளன. காமெடியான நீதிமன்றக் காட்சிகள் மிகச் சீரியசாகவும், படத்தின் முடிவில் பாஸ்போர்ட் ஆஃபிசில் கடுமையாகப் பேசும் ஆர்.பி.ஓ. (Regional Passport Officer) வரும் காட்சிகள் காமெடியாகவும் உள்ளன. ஆர்.பி.ஓ.வை வழியிலேயே காந்தி பார்த்தார் என்றால் கூட நம்ப வாய்ப்பு உள்ளது, அவரது அறைக்கே திடுதிப்பெனச் செல்வதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால், திரைக்கதையின் ஓட்டம் உங்களை மகிழ்ச்சியாக உணரச் செய்வதால் பார்வையாளர்களுக்கு எங்குமே கடி ஏற்படாது என்பது திண்ணம். ஆனால், இது விழிப்பு உணர்வுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை எங்கு மறந்து விடுமோ எனப் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மெனக்கெட்டு ஞாபகப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.
இசையமைப்பாளர் கே-வின் பின்னணி இசையும் படத்தில் கதை சொல்கிறது. கச்சிதமாய்த் தன் பங்கை ஆற்றியுள்ள படத்தொகுப்பாளரான அனுசரன், கதாசிரியரான அருள்செழியனோடும், இயக்குநர் மணிகண்டனோடும் இணைந்து திரைக்கதையிலும் உதவியுள்ளார். கலகலப்பாகச் செல்லும் படத்தின் போக்கைச் சிறிது நேரத்திற்குப் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறார் குடியேற்ற அலுவலக அதிகாரியாக வரும் ஹரீஷ் (Hareesh Peradi). சிரித்திடாத அவரது முகமும், அழுத்தமான அவரது மலையாளத் தமிழும், நாமே ஏதோ நெருக்கடியில் சிக்கிக் கொண்ட உணர்வைத் தருகிறது. கதாபாத்திரங்களுக்குப் பொருந்துவது போல், நடிகர்களைக் கச்சிதமாய்த் தேர்வு செய்திருப்பது படத்தின் பெரும் பலம். இதற்கு, ஈழத் தமிழர் நேசனாக நடிக்க வைக்கப்பட்டிருக்கும் சிவஞானம் அரவிந்தன் மற்றுமொரு உதாரணம்.
அமைச்சரின் முகத்திற்கு நேராக கேள்வி கேட்கும் தைரியமான நிருபர் கார்மேகக் குழலியாக இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடித்துள்ளார். ஆனாலும், கல்யாணம் ஆனதுமே கையை ஆட்டி ஆட்டி தூரத்தில் எதையோ காட்டிப் பேசுவதோடு மட்டுமல்லாமல், புடவையும் கட்டி விடுகிறார் கார்மேகக் குழலி. முன்னது தமிழ் சினிமா நாயகிகளின் வழமை என்று புரிந்தாலும், பின்னது நாயகியின் பெயருக்குத் தகுந்தாற்போல் ஒரு காட்சியிலாவது உடை கொடுக்கலாம் என்ற இயக்குநரின் நல்லெண்ணமாக இருக்குமென நம்பலாம். ஏனெனில், கல்யாணத்தன்று இருப்பது போல் எந்தப் பெண் அதன் பின் அப்படியே இருக்கிறாள் என்ற நாயகனின் கிண்டலான கேள்விக்கு, பிரசவத்திற்குப் பின் பெண்களின் உடலில் நடக்கும் மாற்றங்கள் குறித்துக் கோபமாகப் பேச வினோதினிக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளார் இயக்குநர். தமிழ் சினிமா ஆரோக்கியமாக மாறுகிறது என்ற நம்பிக்கையைத் தனது ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்து அளித்து வருகிறார் இயக்குநர் மணிகண்டன்.