இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் குறைவான நீளம் கொண்ட படம். குத்துப் பாட்டுகளோ, சண்டைக் காட்சிகளோ இல்லாத படம்.
தனிமையில் வாடும் முதியவரான கைலாசம், தனக்கு நெஞ்சு வலியென 108 சேவைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கிறார். கைலாசத்திடம் மாட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரும் இ.எம்.டி. (Emergemcy Medical Technician) சத்யாவும் படும்பாடுதான் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை.
விஜய் சேதுபதியின் அறிமுகத்துக்குப் பின் படம் கலகலக்கத் தொடங்குகிறது. ஆனால் படம் தொடங்கிய நாற்பதே நிமிடங்களுக்குள், படத்துள் ரசிகர்கள் ஆழத் தொடங்கும் முன்பாகவே இடைவெளி வந்துவிடுகிறது. ஏன்? எதற்கு? என்ன கதை? என்ற நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின் அசலான படம் தொடங்குகிறது. அதன் பின்னும் படத்தில் கதை எனப் பெரிதாகக் கிடையாது. உயிருடன் இருக்கும்போது தன் தந்தையின் அருமையை உணராமல் போய்விட்டோமே என மனக் கிலேசத்தில் உழலும் சத்யாவுக்கு, தனது சுபாவத்தால் அனைவருக்கும் எரிச்சலூட்டும் கைலாசம் மீது ஒரு மெல்லிய அன்பு உருவாகிறது. படம் அந்த அற்புதமான தருணத்தைத் தொட முயல்கிறதே தவிர கடைசி வரை தொட்டுவிடவில்லை. அதனால் படம் முடியும் பொழுது இருந்திருக்க வேண்டிய தாக்கம் குறைந்து விடுகிறது.
நரை முடியுடனும், துருத்திக் கொண்டிருக்கும் தொப்பையுடனும் விஜய் சேதுபதி கைலாசமாகக் கலக்கியுள்ளார். ஆனால் அவரது விநோதமான சுபாவத்திற்குப் பின்னுள்ள உளவியலைக் கோடிட்டுக் காட்டத் தவறிவிட்டார் இயக்குநர் பிஜு விஸ்வநாத். உதாரணத்திற்கு, தலையில் கொம்பு முளைத்த அரசு மருத்துவராக வரும் விசாலினியின் அலட்சியத்துக்கு, சத்யாவின் பொருட்டு ஏன் கைலாசம் கோபம் கொள்கிறார் எனப் புரியவில்லை. அந்த வகையில், சத்யாவாக வரும் ரமேஷ் திலக்கின் கதாப்பாத்திர வார்ப்பு புரிந்து கொள்ளத்தக்க வகையில் வடிவமைத்துள்ளனர்.
ஆறுமுகம் எனும் ஆம்புலன்ஸ் ட்ரைவராக ஆறுபாலா நடித்துள்ளார். அவரது முகமும் நடிப்பும், ஆடுகளத்தில் தனுஷின் நண்பராக வரும் முருகதாஸை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதைத் தவிர்த்திருந்தால், மேலும் கவனத்தை அவர் பெற்றிருக்கக்கூடும். இரண்டே இரண்டு காட்சியில் வரும் கருணாகரனும் வீணடிக்கப்பட்டுள்ளார்.
கல்லாவில் அமர்ந்தவாறு அதிக பணமீட்டுவதைத் விட, உயிரைக் காப்பாற்றும் இ.எம்.டி.யாகவே இருக்க விரும்புகிறார் சத்யா. 27 முறை ஹார்ட் அட்டாக் வந்த கைலாசம், தனக்குக் குறிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தன் வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார். ஆனால் அவர் வாழ விரும்பும் வாழ்க்கை என்னவென்பது படத்திற்கு வசனங்கள் எழுதியிருக்கும் விஜய் சேதுபதிதான் தெளிவுபடுத்த வேண்டும். கைலாசத்தின் கதாப்பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், மிக அற்புதமானதொரு படமாக இது அமைந்திருக்கும்.
அழகான லோக்கேஷன்களாகத் தேர்ந்தெடுத்து, அதைப் படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் பிஜு விஸ்வநாத் அமர்க்களப்படுத்தியுள்ளார். சற்றே நீண்டே இக்குறும்படத்தை எழுதி, ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து, இயக்கியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் ருசிக்கும்போது சுவையாக இருந்தாலும், அச்சுவையை மீட்டெடுத்து அசை போட இயலவில்லை. எனினும், தயாரிப்பாளராக விஜய் சேதுபதியின் இந்த சோதனை முயற்சிக்குப் பாராட்டுகள்.