Shadow

இது உலக சினிமா செல்லம்

Sila samayangalil World Cinema

இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது.

பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர்.

“நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நான் பிரியதர்ஷனிடம், ‘உங்களால் தான் இதுக்கு ஏதாவது செய்ய முடியும்’ எனக் கேட்டேன். எனக்காகத் தொடங்கப்பட்ட படம்தான் சில சமயங்களில்.

இயக்குநர் விஜய், என் மறுப்பையும் மீறி என்னைக் கட்டாயப்படுத்தித் தமிழில் ‘டப்’ செய்ய வைத்துள்ளார். நான் தமிழ் பேசியுள்ள முதற்படம் இது” என்றார் ஷ்ரேயா ரெட்டி.

“என்னிடம் இயக்குநர் விஜய் கதை சொன்னார். நான் பிரபு தேவாவிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. நாங்களே தயாரிக்க முடிவு பண்ணோம். பணம் சம்பாதிக்க இந்த முடிவெடுக்கலை. நல்ல பெயர் சம்பாதிப்பதற்காக. பிரபுதேவா ஸ்டுடியோஸில் வரும் முதல் படம் ஒரு நேஷ்னல் அவார்ட் படமாக இருக்கணும்னு ஆசைப்பட்டுத் தயாரித்திருக்கிறோம். இந்தப் படத்தை முதலில் ஷ்ரேயா ரெட்டி தான் தயாரிப்பதாக இருந்தார். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்களுக்கு அவ்வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. இப்படத்தை வெறும் 23 நாளில் எடுத்துக் கொடுத்துள்ளார் பிரியதர்ஷன்” என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ்.

“நடிகர்கள் யார்? நடிகர்கள் ஓவியத்தில் இருக்கும் ஒரு வண்ணம் மட்டுமே! ஆனா, ஓவியமே பிரியதர்ஷன்!! நான் பல மொழியில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா சில நேரங்களில்தான், காஞ்சிவரம் போலவோ, இருவர் போலவோ, நம்மை வளர்த்த துறைக்கு ஒரு பெருமையைச் சேர்க்கிற வாய்ப்புக் கிடைக்கும். உலகத்தையே ஒரு தமிழ்ப் படத்தின் மீது திரும்பிப் பார்க்க வைக்கிற பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ அந்த வாய்ப்பை எனக்கு மீண்டும் கொடுத்திருக்கு. நான் காஞ்சிவரம் படத்திற்கே சர்வதேச வெளிச்சம் கிடைக்கும்; பிரியன் கொண்டாடப்படணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான பசி, பேஷன், நம்பிக்கை, லட்சியம் உடைய நபர் அவர். இத்தனை வருட தவம் எங்களுக்குத் தேவைப்பட்டிருக்கு. பிரியன் இந்தப் புகழுக்கும், இதையும் தாண்டிய கெளரவத்துக்குத் தகுதியானவர்” என்றார் பிரகாஷ்ராஜ்.

“கோல்டன் க்ளோப் பேனலில் இருந்தவர்கள் இது டாக்குமென்ட்ரியா? இவங்கலாம் உண்மையான பேஷன்ட்ஸா? எனக் கேட்டார்கள். ஏன்னா பிரகாஷ்ராஜ் சார்லாம் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படம் முடிஞ்சதும், தமிழில் உள்ள பொட்டன்ஷியல் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவரென பிரியதர்ஷன் சொன்னார். ஒரு நடிகருக்குக் கிடைக்கக் கூடிய தேசிய விருது மாதிரி இந்தப் பாராட்டு” என்றார் இயக்குநர் ஏ.எல்.விஜய். வசனகர்த்தா என அடையாளப்படுத்தப்பட்டாலும், பிரியதர்ஷனின் அழுத்தமான வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்தது மட்டுமே தன் வேலை என்றார் விஜய்.

“இது வழக்கமானதொரு படம் இல்லை. பாடல்களோ, கமர்ஷியல் விஷயங்களோ படத்தில் இல்லை. வலுவான கருவும், மிகச் சிறந்த நடிப்பையும் உடைய படம். காஞ்சிவரத்திற்குப் பிறகு ஆத்மார்த்தமாக நான் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது” என்றார் இயக்குநர் பிரியதர்ஷன்.

அக்டோபர் 6 வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் 10 படங்களில், 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாதம் முடிவு வெளியிடப்படும். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகள் அறிவிக்கப்படும்.

படக்குழுவினர் எதிர்பார்க்கும் வெளிச்சத்தை அடைய இதுதமிழ் குழுமம் சார்பாக வாழ்த்துகள்.

பி.கு.: ‘சமயம்’ என்ற சொல் ‘மதம்’ என்பதைக் குறிக்கிறது (மேலும் மலையாளத்தில் தான் சமயம் என்றால் நேரம்), ‘சில நேரங்களில்’ என தமிழில் தலைப்பு வைத்திருக்கலாமே எனக் நிருபர் ஒருவர் கேட்டதற்கு.. ‘சில சமயங்களில்னு நாம பேசுறப்ப சொல்றதில்லையா? செல்லம், இது உலக சினிமா. தமிழ், மலையாளம்னுலாம் துருவித் துருவி கேள்வி கேட்காதீங்க’ என பதிலுரைத்தார் பிரகாஷ்ராஜ்.