Shadow

இறைவி விமர்சனம்

iraivi vimarsanam

பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம்.

பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்டும் மழையில் நனைய வாழ்க்கை அனுமதிக்கிறது. அந்த அதிர்ஷ்டசாலிப் பெண் யாரென்பதோடு, அது அவருக்கு எப்படிச் சாத்தியமானது என்பதே கதைக்கரு.

‘நான் நடிகன் ஆகணும்தான் சினிமாக்கு வந்தேன். இதுதான், நடிகனாக எனக்கு முதல் படம்’ என்றார் மிகத் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் எஸ்.ஜே.சூர்யா. ஆம், அவரின் அந்த மன நிறைவை ஒவ்வொரு காட்சியிலும் நமக்கும் காணக் கிடைக்கிறது. அவருள் கொப்பளிக்கும் அதீதத்தன்மையை மட்டுப்படுத்தி, மிக அழகாகத் திரையில் உலாவ விட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குநர் அருளாக எஸ்.ஜே.சூர்யா காட்டியிருக்கும் வலியும் தவிப்பும் மிகப் பிரமாதம் (ஞான ராஜசேகரன் – இதில் முதல் பத்தி படிக்கவும்). கலை என்றால் என்னவென்று கேட்கும் ஆளிடம் ஒரு கலைப் படைப்பு முடங்கிக் கிடந்தால், அதை உருவாக்கிய கலைஞனின் மனநிலை எவ்வளவு பாடுபடும்? ‘குட்டி வயித்துல இருக்கும்போது, அதைக் கலைச்சுட்டு இன்னொன்னு பெத்துக்கலாம்னு சொன்னா தாங்குவியா? அப்படித்தான் இந்தப் படம் வெளி வராம என்னால் அடுத்த படம் பத்தி யோசிக்க முடியாது’ என யாழினியிடம் அருள் கதறும் வசனம் தான் எஸ்.ஜே.சூர்யாவின் மொத்த பாத்திரமுமே! அவரைத் தவிர்த்து வேறொருவரை இந்தப் பாத்திரத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

பொன்னியாக நடித்திருக்கும் அஞ்சலி, பார்வையாளர்கள் மனதை ஊடுருவி சில கேள்விகளை எழுப்புகிறார். அத்தகைய வாய்ப்பு, யாழினியாக நடித்திருக்கும் கமாலினி முகர்ஜிக்குக் கிடைக்கவில்லை. தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தியுள்ளார் அஞ்சலி. பல வருட கால தாம்பத்தியம் ஏற்படுத்திய அவமரியாதையும், அதனால் ஏற்பட்ட வடுவையும் வடிவுக்கரசி மிக அழகாகப் பிரதிபலித்துள்ளார். மீனாக்ஷி எனும் பாத்திரத்தில் அவரது அனுபவம் தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது.

படத்தில் ஏகத்துக்கும் நடிகர்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ படம் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் (160 நிமிடங்கள்) நீள்கிறது. மைக்கேலாக விஜய் சேதுபதி, ஜெகனாக பாபி சிம்ஹா, ரமேஷாக கருணாகரன் என கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்கள் வழக்கம் போல் தங்கள் பங்கினை நிறைவாகச்செய்துள்ளனர். ஒட்டுமொத்த படத்திலும் மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவனாக வருகிறார் ராதாரவி. மிகச் சுவாரசியமான மருத்துவமனைக் காட்சியில், நர்ஸிடம் அவர் கடிந்து கொள்ளும்போது காட்சியின் இறுக்கம் மறைந்து திரையரங்கில் நகைக்கின்றனர்.

வீட்டிலுள்ள பெண்கள்தான் இறைவிகள் என்றும், அல்லது எல்லாப் பெண்களுமே இறைவிகள் என்றும், அவர்களை தங்கள் ஆளுமைக்குள், ஆதிக்கத்தில் வைத்து ஆண்கள் துன்புறுத்துகின்றனர் என படம் சொல்ல முயற்சி செய்கிறது. அதைக் காட்சி ரூபமாக உணர்த்த தவற விட்டதோடு, வசனங்கள் மூலம் மூன்று காட்சிகளில் சொல்லுகிறார். தண்ணியடித்து விட்டு, ஜெகன் தன் அண்ணன்களிடம் உளறுவதுதான் ஒட்டுமொத்த படம் உணர்த்த விரும்புவது. நியாயமாக, அந்த உண்மை பார்வையாளர்களைச் சலனத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், படத்தின் எதிர்பாராத் திருப்பங்களினால் அந்த உண்மை தனது இலக்கினைத் தவறவிட்டதாகவே தோன்றுகிறது. பெண்களின் சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் வியந்தோதிக் கொண்டாடாமல், பெண்ணாகப்பட்ட இறைவியைக் கொடுமைப்படுத்தாமல் அன்போடும் அனுசரணையோடும் நடத்துங்கள் என்ற குறுகிய பார்வைக்குள் படம் சுருங்கி விடுவது துரதிர்ஷ்டமே!

படத்தின் முதற்பாதி மிகப் புதுமையான காண் அனுபவத்தை வழங்குகிறது. தளைகளை அறுத்தெறிந்த இறைவி மலர்விழியாக வரும் பூஜா தேவார்யா, விஜய் சேதுபதியை மட்டுமல்ல பார்வையாளர்களையும் பதட்டத்திற்கு உள்ளாக்குகிறார். உண்மையைப் புனிதப்படுத்தாமல் உள்ளவாறே ஏற்கும் மனத் திண்மை இல்லாதவர்களை அசைத்துப் பார்க்கும் பாத்திரமது. சீனு மோகனுடனான பூஜாவின் உரையாடல் அதற்குச் சான்று. எனினும் தளையை அறுத்தெறிந்த மலர்விழியை அழ வைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை நீர்த்துப் போகச் செய்து சொதப்பி விடுகிறார் இயக்குநர்.  

கார்த்திக் சுப்புராஜின் இறைவி தன் இலக்கை அடையாவிட்டாலும், பார்வையாளர்களை ஆட்கொண்டு முற்றிலும் புதிதான சினிமா அனுபவத்தை நல்குவார் என்பது மட்டும் திண்ணம்.