
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து இலக்கிய மாநாடு – யாதுமாகி 2015 எனும் இலக்கிய நிகழ்வை ஃபிப்ரவரி 12, 13 தேதிகளில் நடத்தினார்கள்.
பாரதி இலக்கியச் சங்கத்தை சிவகாசியில் நிறுவிய கவிஞர் திலகபாமா அவர்களின் முயற்சியில்தான் எழுத்தாளர்களும் மாணவர்களும் நேரடியாகச் சந்திக்கும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. எது குறித்து மாணவர்களிடம் பகிரப்பட வேண்டுமென எழுத்தாளர்களே தீர்மானித்ததாகச் சொன்ன திலகபாமா, “இன்றைக்கு, இலக்கியம் படைச்சு என்னத்த கிழிச்சீங்க என்ற கேள்வி பரவலாக நம் முன் வைக்கப்படுகிறது. இலக்கியம், வாழ்வியலை நோக்கி நகர்த்துகிறது; அனைத்து மக்களின் அரசியலையும் பேசுகிறது; மனிதர்களுக்கிடையே நிகழும் நுண்ணரசியலை ஆராய்கிறது. அதை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவே இந்நிகழ்வு” என்றார்.
தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்பொழுது, “இது போன்ற நிகழ்வுகளில், வந்தவர் அனைவர்க்கும் மேடையில் சால்வை போடப்பட்டே நேரம் விரயமாகிறதென நான் நினைப்பதுண்டு. இது பற்றி நான் என் அப்பாவிடம் கேட்டேன். ‘இது திராவிட இயக்கம் தொடங்கிய மாண்பு’ என்றார். இது உண்மையில், சால்வை போர்த்துதல் அல்ல. துண்டு போடுதல். அக்காலத்தில் தோளில் துண்டு போடும் உரிமை அனைவருக்குமானது அல்ல. அப்பொழுது அனைவரையும் மேடைக்கு அழைத்து துண்டு போட்டு கெளரவிக்கவே இது கடைப்பிடிக்கப்பட்டது. இது விளிம்பு நிலை மக்களை கெளரவப்படுத்தும் விஷயம்” என்றார்.
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம், காந்திக்கு எழுதிய கடிதம் பற்றிச் சொன்ன தமிழச்சி.. பாரதியாரின் தமிழ்ப் பற்றைச் சிலாகித்தார். அதற்கு உதாரணமாக உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்ப் பாண்டியத்தியத்தையும் சமஸ்கிருதப் பற்றையும் சொன்னார். பின் சக எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “ ‘சில்டரன்ஸ் ஆஃப் மிட்நைட்’க்குப் பிறகான சல்மான் ருஷ்டியின் படைப்புகளில் இலக்கியத் தரமில்லை எனச் சொன்ன ஞானபீட விருதை வென்ற மராத்திய எழுத்தாளரான பாலச்சந்திர நெமாடேவைப் பற்றி, ‘பரிசு வாங்கினோமோ நன்றி சொன்னோமா என மேடையிலிருந்து இறங்கிடணும்’ என ட்வீட் செய்துள்ளார் ருஷ்டி. ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பிராந்திய எழுத்தாளர்களை மட்டம் தட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். சமூக வலைத்தளங்களில் உங்களின் கண்டனம் தெரிவியுங்கள்” என்றவர்,
“நான் ஏன் கரிசல் காட்டு கவிதைகள் மட்டும் எழுதுகிறேன் என்றும், நான் ஏன் காதல் கவிதைகளோ, உலகத் தரமான கவிதைகளோ எழுதுவதில்லை என்றும் என்னைக் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது. Why should I? உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், வாழ்க்கை உங்களுக்கு எதைச் சொல்கிறதோ அதை எழுதுங்கள்” என முடித்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.
ஒரே சமயத்தில் நான்கு அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் இலக்கிய அமர்வுகள் தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பிய அமர்வுகளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளலாம். அனைத்து அரங்குகளிலுமே கலந்து கொள்ளும் பேராசை எழுந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
நிகழ்ச்சி நிரல்: சிறுகதை நாவல் அரங்கு || செயல்முறை இலக்கிய வெளி & ஈழத்தமிழ் இலக்கிய அரங்கு || கவிதை வாசிப்பும் திறனாய்வும்
கோவை பாலா வராததால், தமிழ்ப் பேராசிரியரான கருமுருகானந்தராஜன் ‘அஞ்ஞாடி’ நாவல் பற்றிப் பேசினார். சிவகாசியை களமாகக் கொண்ட நாவலினை சிவகாசி மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டுமென நாவலின் அரசியல் பற்றிப் பேசினார். அவர் பேசி முடித்ததும் தினேஷ் குமார் என்ற மாணவர் எழுந்து, ‘நாவல் சொல்லும் வரலாறு வேறாகவும்.. நாட்டுப்புறப் பாடல் சொல்லும் வரலாறு வேறாகவும் உள்ளதே!’ என்ற கேள்வியை எழுப்பினார். “இந்த நாவலின் பலஹீனம் பற்றிப் பேச வேண்டுமென நினைச்சேன். இந்த நாவல்.. நாட்டுப்புறப் பாடல்களை கணக்கில் எடுக்காதது குறையே!” என்றார் கருமுருகனந்தராஜன்.
மலாலா ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றி, கவிஞர் பத்மஜா நாராயணன் பேசினார். அவரது, ‘நான் மலாலா’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் சமீபத்தில்தான் வந்துள்ளது. அவ்வரங்கின் விசேஷம் என்னவெனில், அங்கே மாணவிகள் அதிகளவிலும் மாணவர்கள் ஐந்தல்லது ஆறு பேர்தான் இருந்தனர். “என் பெண்ணைப் பற்றி எனக்கு எந்தளவு தெரியுமோ அந்தளவு எனக்கு மலாலா பற்றித் தெரியும். புத்தகத்தை மொழிபெயர்க்கும் போது, சுமார் ஐந்து மாதங்கள் மலாலாவுடனே இருந்தேன். சிவகாசி பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஆனா தீப்பெட்டி தொழிற்சாலையில் சிறுவர் சிறுமிகள் வேலைக்குப் போகின்றனர் எனப் படிக்கும் பொழுது, இந்தக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கணுமே என மனம் துடிக்கும். உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், படிக்கணும்னு ஆசைப்பட்ட மலாலாவை தாலிபான்கள் சுட்டுட்டாங்க. அப்படி மலாலா சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த பொழுது கூட படிக்க புத்தகங்களை அவங்கப்பாவிடம் கேட்கிறாங்க. இங்க நம் அனைவருக்குமே பள்ளிக்குப் போக வாய்ப்பு இருக்கு. ஆனா பெண்கள் யாருமே பள்ளிக்குப் போகக் கூடாதென்ற தடையை மீறி படிக்கப் போயிருக்கா மலாலா. மலாலாவைப் பற்றி நீங்க அனைவருமே கண்டிப்பாகத் தெரிஞ்சுக்கணும். முடிஞ்சா யூ-ட்யூப்பில் மலாலா பேசுவதைப் பாருங்க. எவ்ளோ நம்பிக்கையா தைரியமா இருக்கு மலாலாவின் பேச்சு! மலாலாவை நாம் அனைவருமே முன் மாதிரியாகக் கொள்ளலாம்” என்பதே கவிஞர் பத்மஜா பேசியதின் சுருக்கம்.
கவிதை வாசிப்பும் திறனாய்வும் அரங்கில், ‘ஆண் கவிஞர்களின் கவிதைகளை விட பெண் கவிஞர்களின் கவிதைகளில் இருண்மைகள் அதிகமாக உள்ளதே! அது ஏன்?’ என ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கவிஞர் பா.வெங்கடேசன், “பெண் கவிஞர்கள் கவிதைகளில்தான் இருண்மை வரும் என்பதில்லை. நான் இப்போ உங்கள் முன் உற்சாகமாகப் பேசிக் கொண்டுள்ளேன். எனக்கு இப்போ ஒரு அழைப்பு வருகிறது. அதில் ஒருவர் இறந்துட்டதாக செய்தி வருகிறது. என் மனம் இப்போ இறப்பைச் சுற்றியிருக்கும், ஆனால் இங்கே நிகழ்வில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு எழுகிறது. நான் இப்போ இந்த அரங்கைப் பற்றி கவிதை எழுதுகிறேன்.
என் முன்னால் இருக்கும் தோரணங்களைத் தொங்கும் பாம்பென எழுதுவேன்; என்னைப் பற்றி பிணம் பேசிக் கொண்டிருக்கிறது என்பேன்; ஈஃபிள் டவரில் இருந்து விழுந்து இறந்தவனைப் பற்றி நான் யோசிப்பதும் கவிதையில் வரும்; மரணம் பற்றி ஓடும் என் சிந்தனைகள் எல்லாம் கவிதையில் வரும்.
நான் எதைப் பற்றி எழுதுகிறேனோ, நான் அது பற்றி உண்மையிலேயே எழுதவில்லை. நான் இந்த அரங்கைப் பற்றி எழுதவில்லை. என் மனநிலைதான் கவிதை ஆகிறது. தொங்கும் பாம்பு இந்த அறையில் எங்கு வந்தது; பிணம் பேசுமா? என வாசிக்கும் உங்களுக்கு இருண்மை உருவாகிறது. ஒரு வருடத்துக்கு பின் படிச்சால் எனக்கே புரியாது. அதுதான் கவிதை.
அப்படி நான் நினைச்ச அர்த்தத்தை வாசகன் தொட்டுவிட்டால், அந்தக் கவிதை இறந்துவிட்டது” என்றார்.
“கவிதையின் மேல் அர்த்தத்தைக் கழற்றி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனநிலைக்குச் சென்றால் கவிதையை ரசிக்கலாம். ஆனால் ஒன்று, கவிஞர்கள் சொல்வதை மட்டும் என்றைக்கும் நம்பிடக் கூடாது. விக்கிரமாதித்யன் கவிதை ஒன்றுள்ளது. குற்றால அருவிகளை வரிசையாகச் சொல்லி, ‘தேனருவி பார்த்துவிட்டால் திரும்பி வர இயலுமா?’ என முடிச்சிருப்பார். அந்தளவுக்கு அவரைப் பாதிச்சிருக்குன்னா, திரும்பி வர முடியாதளவுக்கு சொர்க்கமாக இருக்கும் போலன்னு நான் தேனருவிக்குப் போனேன். அங்கே ஒரே குப்பை, நரகல் என என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியலை. அந்தக் கவிதை தேனருவி பற்றியதில்லை. அது அவரது மனநிலை. இனி கவிதையை நம்பி ஏமாறக் கூடாதுன்னு அன்றைக்கு முடிவு பண்ணேன்” என்றார் கவிஞர் பா.வெங்கடேசன்.
பி.கு.: மொத்த நிகழ்வுகளின் இருமா (1/20) அளவு மட்டுமே இக்கட்டுரை!