இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த முதல் வசன கர்த்தா இளங்கோவன். இவர் ‘மணிக்கொடி’ இலக்கியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். சிலகாலம் ‘தினமணி’ பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார்.
பி.யூ.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம்.கே.டி.பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு விசேஷத் திறமை படைத்தவர்.
திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச் சொல்ல முடியும். 1937இல் ஆரம்பித்த இவரது பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார் 30 திரைப்படங்களுக்கு மேலாக, கதை, வசனம் என்று இவரது பணி நீண்டது.
இவர் பணியாற்றி வெற்றியடைந்த படங்கள் ஏராளம். குறிப்பாக அசோக்குமார், அம்பிகாபதி (எம்.கே.தியாகராஜ பாகவதர்), கண்ணகி (பி.யூ.சின்னப்பா), சிவகவி (எம்.கே.டி.பாகவதர்) குண்டலகேசி (ஹொன்னப்பா பாகவதர்), பவளக்கொடி (டி.ஆர்.மகாலிங்கம்), ஏழை படும்பாடு (வி. நாகையா), ஆசை (ஜெமினி கணேசன்), சக்கரவர்த்தித் திருமகள் (எம்.ஜி.ஆர்) போன்றவை முக்கியமானவை.
(கண்ணகி திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி)
ஏ.எஸ்.ஏ.சாமி, கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா போன்றவர்கள் திரையுலகில் நுழைந்து புகழ் பெற ஆரம்பித்த பின் இவரது மவுசு மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. 1957க்குப் பிறகு இவரது வசனத்தில் படங்கள் எதுவும் வந்ததாக வரலாறு இல்லை. மிகவும் ஏழ்மை நிலையில் மரணமடைந்த இவரது திரைப்படப் பணி தமிழ்த் திரையுலகில் எவருக்கும் குறைந்ததில்லை. 1961இல் இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இளங்கோவன் பணியாற்றிய திரைப்படங்கள்:
1937 – அம்பிகாபதி வசனம்
1941 – அசோக்குமார் வசனம்
1941 – அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வசனம்
1941 – கதம்பம் வசனம்
1942 – கண்ணகி வசனம்
1942 – தமிழறியும் பெருமாள் திரைக்கதை, வசனம்
1943 – சிவகவி வசனம்
1944 – மகா மாயா கதை, வசனம்
1944 – ஹரிதாஸ் வசனம்
1946 – வால்மீகி வசனம்
1947 – கன்னிகா கதை, வசனம்
1947 – தெய்வநீதி கதை, வசனம்
1948 – கோகுலதாசி கதை, வசனம்
1949 – இன்பவல்லி கதை, வசனம்
1949 – பவளக்கொடி வசனம்
1950 – ஏழை படும்பாடு வசனம்
1950 – பாரிஜாதம் வசனம்
1951 – சுதர்சன் வசனம் (ஏஎஸ்ஏ சாமியுடன் இணைந்து)
1951 – வனசுந்தரி கதை, வசனம்
1953 – பொன்னி வசனம் (ஏஎஸ்ஏ சாமியுடன் கூட்டாக)
1953 – வேலைக்காரி மகள் வசனம்
1953 – ஜெனோவா வசனம் (இருவருடன் கூட்டாக)
1955 – டாக்டர் சாவித்திரி (ஏ.கே.வேலன், ஆசார்யாவுடன் கூட்டாக)
1956 – ஆசை வசனம்
1957 – புதுவாழ்வு கதை, வசனம்
1957 – ராஜராஜன் கதை, வசனம்
1957 -சக்கரவர்த்தி திருமகள் வசனம்
– கிருஷ்ணன் வெங்கடாசலம்