Search
Ennamo Nadakuthu Mahima

என்னமோ நடக்குது விமர்சனம்

Ennamo nadakuthu review

ஐந்து லட்ச ரூபாய் அவசரத் தேவைக்கு, பர்மாவிடம் வேலைக்குச் சேருகிறான் விஜய். வேலைக்குச் சேர்ந்த நாலாம் நாளில், விஜய்யிடமிருந்து யாரோ சுமார் 15 கோடிக்கு மேல் திருடி விடுகின்றனர். பணத்தை தவறவிட்ட விஜய்யின் கதியென்ன? அவனுக்கு ஏன் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது? அந்தப் பணம் விஜய்யுக்குக் கிடைத்ததா? பர்மாவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை விறுவிறுப்பான கதையில் அமைத்துள்ளார் இயக்குநர் ராஜபாண்டி.

நாயகனாக விஜய் வசந்த். போஸ்டர் ஒட்டும் வேலை செய்பவர். அவரும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சென்னைத் தமிழ் பேசுபவராக நடித்துள்ளனர். பாச மிகுதியில் சரண்யா பொன்வண்ணனை காலால் எட்டி உதைக்கும் பாசக்காரர் விஜய் வசந்த். இப்படத்திலும், ‘என் மொவனுக்கு லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு!’ என கண்களைப் பெரிதாக்கி மகிழும் பாத்திரமே! ஆனால் அதையும் மீறி, அவரது தயாளச் சிந்தனையால் அவருக்கு வந்து சேரும் கதி பற்றிய கிளைக் கதையொன்றும் வருகிறது. நாம் எவருக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்க வேண்டுமென்பதை நம்மைச் சுற்றியுள்ளவர்தான் தீர்மானிக்கிறார்கள்.

விஜய் வசந்த் நாயகனுக்குரிய புற அடையாளகள் ஏதுமில்லாமலும், அக்மார்க் நல்லவன் என்ற அக அடையாளத்துடனும் உள்ள பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான படமாக இது அமையும். படத்தைத் தயாரித்திருப்பது அவரது தம்பி வினோத்குமார். அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ்’ சார்பாக எடுக்கப்பட்டுள்ள முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பான படம் என்ற பொழுதும், கதையோடு இயைந்த நகைச்சுவைக் காட்சிகளும் படத்தில் உள்ளன. “கும்கி” அஸ்வினுக்கு, கும்கி படத்தை விடவே இப்படத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வழக்கமான நாயகனின் நண்பர் பாத்திரம்தான் எனினும் மனதில் பதிகிறார். அதே போல், சில காட்சிகளிலேயே வந்தாலும் தன் முரட்டுப் பார்வையால் ஈர்க்கிறார் களவாணி படத்து வில்லனான திருமுருகன்.

Mahimaசாட்டையில் பள்ளி மாணவியாக வந்த மஹிமாவை நாயகியாக்கியுள்ளார் இயக்குநர். படத்தின் இரண்டாம் பாதியில், குத்துச் சண்டை வீரர் பார்த்திபனாக வருகிறார் பிரபு. அவர் எம்.ஜி.ஆர். கையால் விருது வாங்குவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். படத்தின் மிகப் பெரிய பலம் அதன் பின்னணி இசைதான். இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் கலக்கியுள்ளார். வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமை. ஒரு நாளில் நடக்கும் சம்பவம்தான் கதை எனினும், இரண்டு ஃப்ளாஷ்-பேக்குகளை அழகாகப் பொருத்தியுள்ளார் இயக்குநர். எடிட்டர்கள் பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளது.

படத்தில் நாயகனுக்கும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாது. அதே போல் வில்லனுக்கும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாது என்பதுதான் படத்தின் ஹை-லைட்.