Shadow

என்னுள் ஆயிரம் விமர்சனம்

Ennul Aayiram Vimarsanam

அனைவரின் மனதிலும் ஆயிரமுண்டு. சந்தர்ப்பங்களைத் தவறவிடக் கூடாதென, எதையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் அஷோக்கிற்குள்ளும் ஆயிரமுள்ளது. அதிலொன்று கை நழுவிப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இசைக்கேடான செயலொன்றைப் புரிந்து விடுகிறான். அதனால் அவனுள்ளிருந்த ஆயிரமும் எப்படி ஒன்றில்லாமல் போகிறது என்பதே படத்தின் கதை.

அஷோக் எனும் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கார் டெல்லி கணேஷின் மகன் மஹா. தன் மகனுக்காக, இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்படியொரு கதையை, முதற்படமாக நடிக்கத் தேர்ந்தெடுக்கவே ஒரு துணிவு வேண்டும். குறிப்பாக படத்தின் முதல் பாதி கதை.

5 ஸ்டார் ஹோட்டலின் பாரில் வேலை செய்பவராக மஹா. நாயகனாக மனதில் பதிய மறுத்தாலும், நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு நபராக அவரைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. குடித்து விட்டு அஷோக் மழைக்கு ஒதுங்குமிடத்தில் ஆர்த்தியும் ஒதுங்குகிறார்; ஆர்த்தியோ கணவனால் கைவிடப்பட்டவர். கோபி சுந்தரின் இசையும், அதிசய ராஜின் ஒளிப்பதிவும் படம் முழுவதுமே கலையழகோடு பயணிக்கிறது என்ற போதிலும், அஷோக்கும் ஆர்த்தியும் சேருமிடத்தில் அற்புதம் செய்துள்ளனர். அவ்விருவர் செயல்களுக்கும் எந்த நோக்கத்தையும் களங்கத்தையும் கற்பிக்காமல், மழை பெய்வது போல் இயற்கையானதொரு நிகழ்வாகக் காட்சிபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. சாமானியன் அஷோக்கிற்கு அது ஓர் உறுத்தலாக மனதில் பதிகிறது.

இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஆர்த்தியை ஓரங்கட்டிவிட்டு, பன்னிரெண்டாவது வரையே படித்த அஷோக்கிற்கு 5 ஸ்டார் ஹோட்டலில் எப்படி வேலை கிடைத்ததென இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கிறது படம். முதல் பாதியில் கட்டமைக்கப்பட்ட கதையும், அதனால் எழுந்த உணர்வுகளையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் கணக்கில் கொள்ளாதது ஒரு குறை.

படத்தின் இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துபவர் காவல்துறை அதிகாரியாக வரும் வின்செண்ட் அசோகன். மீசை இல்லாமல், சட்டெனப் பார்க்க ஒரு ஹாலிவுட் நடிகரெனத் தோன்ற வைக்கிறார். முதல் பாதியிலேயே என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகத் தலையைக் காட்டினாலும், இரண்டாம் பாதியில் மிரட்டியுள்ளார். மரணம் தான் அதர்மத்துக்குத் தீர்வென தமிழ்ப்படங்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் வரை, சில விசாரணைகள் விரைவில் மறக்கப்பட்டுவிடும். வின்செண்ட் அசோகனைப் போலவே, பாவமன்னிப்புக் கேட்க அமரும் பாதிரியாரும் எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை.

மனதுள் ஆயிரம் எழுந்து அடங்கினாலும், சிலது மட்டும் நிரந்திரமாகத் தங்கிவிடும். அதில் காதலும் குற்றவுணர்வும் அடக்கம். அஷோக்கிற்குள் இரண்டு குற்றவுணர்வு உறுத்துகிறது. ஒன்று விபத்தில் மறைந்து விடுகிறது; மற்றொன்று விபத்தில்தான் தொடங்குகிறது. காதலியை மணம் புரிய நினைக்கும் முந்தைய நாள், அக்குற்றவுணர்வினின்று எப்படியாவது மீளத் துடிக்கிறான் அஷோக். அவனது காதலி சுஹாசினியாக மெரீனா மைக்கேல் நடித்துள்ளார்.

முதற்பாதியை வண்ணமயமாக்குவது மெரீனாதான். அஷோக் தனக்காகக் காத்திருப்பதை ரசிப்பதும், அவனுக்கு விபத்தேற்படும் போது துடிப்பதும், காதலை வெளிபடுத்தும் போதும் என எல்லாக் காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார். இவரைப் போல், ஆர்த்தியாக நடித்த ஸ்ருதி யுகலுக்குப் போதிய காட்சிகள் வாய்க்காவிட்டாலும், தனிமை, தாபம், கிறக்கம், அதிர்ச்சி, கலக்கமென வசனமின்றி அனைத்தையும் பாவனைகளிலேயே வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிருஷ்ணகுமாரின் முதற்படமிது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக நெய்திருந்தால், படம் மறக்கவியலாதொரு அனுபவத்தைத் தந்திருக்கும். முதற்பாதியில் பார்வையாளர்களை ஒன்றுக்காகத் தயார்படுத்திவிட்டு, இரண்டாம் பாதியில் அத்தொடர்பைத் துண்டிக்காமல் இருந்திருக்கலாம். அஷோக்குள் இருந்த ஆயிரத்தில், ஒன்றைக் கூடப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறிவிட்டது படம்.