Shadow

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

onaaayum

ஏராளமான ஆச்சரியங்கள். அதில் பேராச்சரியமாக, ‘டாஸ்மாக்’ பாடலில்லாமல் வந்திருக்கும் மிஷ்கினின் படமிது. ஏன் மருந்துக்குக் கூட படத்தில் ஒரு பாடல் இல்லை. அதனால் படத்தில் கதாநாயகியும் இல்லை.

படத்தைச் செலுத்துவது இளையராஜாவின் பின்னணி இசை. படக் கதையின் கருவிற்கு நம்மை தயார்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் இசைஞானி. அவரை கெளரவப்படுத்தும் வகையில் ‘முன்னணி இசை கோர்ப்பு’ எனப் படம் தொடங்கும் முன் எழுத்துகள் வருகின்றன. இரவில் நடக்கின்ற கதை. ஒரு படம் முழுவதும் பார்வையாளரை இருட்டினிலேயே தடுமாற்றமின்றி அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி வி.ரங்கா. ஆக படத்தின் ஒளியும் ஒலியும் படத்தின் ‘மூடை’ கன கச்சிதமாக பார்வையாளர்களிடம் கடத்துகிறது.

Oanaayum aattukuttiyum Sreeஆட்டுக்குட்டி சந்துருவாக ஸ்ரீ. ‘வழக்கு எண்:18/9’ படத்தில் அறிமுகமானவரின் இரண்டாவது படம். எத்தனை பேருக்கு இத்தகைய வாய்ப்பு அமையும்? மருண்ட விழிகளுடன் ஓர் ஆட்டுக்குட்டியாய் படம் நெடுக்க வருகிறார். அவரைக் கவ்விக் கொண்டு ஓடும் ஓநாயாக மிஷ்கின். முகமூடி – சூப்பர் ஹீரோ படம் என்றார் மிஷ்கின். ஆனால் உண்மையிலேயே இந்தப் படம் தான் சூப்பர் ஹீரோ படம். மிஷ்கின் தான் அந்த சூப்பர் ஹீரோ. சற்றே குழப்பமான கதாபாத்திரம். தொழில்நுட்ப நேர்த்தியாலும், திரைக்கதையின் ஓட்டத்தாலும் அது ஒரு பெருங்குறையாகத் தெரியவில்லை. அவரால் நடிப்பில் என்னச் செய்ய முடியுமோ, அலட்டிக்காமல் அதையே சாதுரியமாக கதாபாத்திரத்தின் குணமாக்கிக் கொண்டார்.

காவல்துறைக்கும், ஒரு கொலைக் குற்றவாளிக்கும் மத்தியில் சிக்கிக் கொள்ளும் ஒரு சாமானியனின் தவிப்பு தான் படத்தின் ஒருவரிக் கதை. ஆனால் கதையில் லாஜிக்கைப் பற்றிக் கிஞ்சித்தும் மிஷ்கின் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் ஆட்டுக்குட்டியை ஓநாய் கடத்துகிறது என்பதற்கான காரணமே படத்தில் இல்லை. ஆனால் படம் அங்கு தான் தொடங்குகிறது.

மிஷ்கின் பார்வையாளர்களின் நாடியைப் பிடித்தாற்போல மிக நேர்த்தியாகத் திரைக்கதையை அமைத்துள்ளார். இப்படம் சீட்டு நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர் என்றால் அது மிகையில்லை. ஸ்ரீ ஒன்று என சொன்னதும் மிஷ்கின் ரெண்டு என சொல்லித் துப்பாக்கியைப் பெண்ணின் தலையில் வைப்பது; செந்நாயான ஆதித்யா மேனன் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டதும் போலீஸ்காரர் ‘வணக்கம்ங்கய்யா’ என விறைப்பாய் ‘சல்யூட்’ அடித்தவாறு நிற்பது; தூணின் பின்னால் மறைந்திருப்பவரை மிஷ்கின் எதேச்சையாய்  மறுபக்கம் சென்று சுடுவது எனப் படம் நெடுக சிறு சிறு சுவாரசியங்கள்.  படத்தில் வசனங்களும் மிக மிகக் கம்மி. ஆனால் படத்தின் போக்கினை, ஒரு காட்சியில் ‘தேர்ந்த கதைசொல்லி’யாகப் பேசியே புரிய வைத்து விடுகிறார் மிஷ்கின். அது தன்னிலையை விளக்கும் ஒரு சார்பான கதை. கதையைப் புரிய வைத்து விடுகிறார். ஆனால் எந்தத் தாக்கத்தையும் மிஷ்கனின் அந்தக் கதை ஏற்படுத்தவில்லை. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில், இதே போன்று கமல் தனது செய்கைக்கு நியாயம் கற்பிக்கும் காட்சியொன்று வரும். அப்படி மிஷ்கினால் செய்ய முடியாதது துரதிர்ஷ்டவசமானது.

அதிகாரத்திற்கும் அடிப் பணியாமல் கொலைச் செய்யத் தயங்கும் ஸ்ரீ, மிஷ்கின் சொல்லும் உருக்கமான கதையைக் கேட்டதும், இரண்டு கையிலும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடத் துவங்குகிறார். ஆட்டுக்குட்டிக்கு ஓநாயாக மாற ஓர் உருக்கமான கதை தான் தேவைப்படுகிறது. இது மரண தண்டனையை வரவேற்கும் ஒரு தேசத்தினுடைய பொதுப்புத்தியின் நிலைபாடெனக் கொள்ளலாம். அதே போல், 10+ கொலைகளுக்கு மேல் பண்ணிய மிஷ்கின் மனம் திருந்தி விட்டார் என பார்வையாளர்கள் ஐயமற நம்புகின்றனர், அதன் பின் அவர் நான்கு கொலைகள் செய்தும் கூட.  மிஷ்கின் தண்ணீர் கேட்டுக் குடிக்காமலேயே இறக்கும் போலீஸ்காரரை இரக்கத்துடன் பரிதாபமாக நோக்குவார். ஆனால் ரயில்வே ஸ்டேஷன்களில் இருவரை எந்தக் குற்றவுணர்வின்றியும் சுட்டிருப்பார். ஆட்டுக்குட்டிக்காக வருத்தப்படும் இந்த ‘வொல்ஃப்’ நல்லவரா கெட்டவரா?

வில்லன் தம்பாவாக பரத். மிஷ்கின் இவரை கடிச்சுக் குதறியுள்ளாரே தவிர கொல்லவில்லை. அப்படிக் கொன்றிருந்தால் இந்தக் கதையே இல்லை. மிஷ்கின் செய்யும் சாகசங்களில் கொஞ்சத்தில் கொஞ்சம் செய்திருந்தாலே   மருத்துவமனைக்கு சென்று தம்பாவை சுலபமாகக் கொன்றிருக்க முடியும். ‘எட்வார்ட் கார்த்தி’யின் குடும்பத்தில் மேலும் உயிர் பலிகள் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஏன் மிஷ்கின் தம்பாவைக் கொலை செய்யவில்லை என்பதை யூகிக்க முடியவில்லை. ஒருவேளை இயக்குநர் ராம் தனது கோனார் நோட்சில் தெரிவித்திருந்தது போல, இத்தனை நாள் பிழைக்க வழி காட்டியவர் மீதுள்ள மரியாதையின் குறியீடாக இருக்குமோ? அது சரி, ஃபோனில் மிஷ்கினுடன் பேசும் அந்த ஹிந்திக்காரர் யாராக இருக்கும்? பாட்ஷா பாய், டேவிட் பில்லா போல பெரிய டானாக தான் கண்டிப்பாக இருக்கணும். 

காவல்துறையினரின் அனைத்துக் குணாம்சங்களையும் சாடுகிறார் மிஷ்கின். முக்கியமாக அதிகாரம் சாமானியனை எப்படிச் சுற்றி நெருக்குகிறது என அழகாகக் காட்சிப்படுத்தியுளார். ஆனால், எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்தையும் விடவும் காவல்துறை அதிகாரிகளை மிக முட்டாள்களாகச் சித்தரித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் அனைவரும் எங்கேனும் ஒன்று கூடுகிறார்கள்; பின் வேகமாகக் கலைந்து ஓடுகிறார்கள். 

மிஷ்கனின் உலகம் அலாதியானது. இந்தப் படத்திலும் அவர் சிருஷ்டித்திருக்கும் வனத்தில்.. ஓர் ஈ, காக்காவினைக் கூட ஃப்ரேமில் காண முடியாது. அவரது கதைமாந்தர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதியுண்டு. ஆனால் இந்த வனம் சொல்லும் விதி கொஞ்சம் ஆபத்தானது. ஓர் ஆட்டுக்குட்டி மற்றும் இரண்டு ஆடுகளுக்காக எத்தனை செந்நாய்களையும், புலிகளையும் கொல்லலாம் என்ற நீதி கண்டனத்துக்குரியது. 

வழக்கமான படங்கள் பார்த்துப் பார்த்தே சலித்துப் போன நமக்கு இந்த வனம் ஒரு பெரிய விடுதலையை அளிக்கிறது.

Leave a Reply