Shadow

கபாலி விமர்சனம்

கபாலி vimarsanam

வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் (ரஜினியின் ‘சிவாஜி’ படம் ஓர் எடுத்துக்காட்டு!) அதுவும் கல்யாணத்துக்கு முன்பான கவர்ச்சியோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால், நரை கண்ட கபாலிக்கு எப்பொழுதும் தன் மனைவியின் ஞாபகம்தான். ‘தன் மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா?’ என்பதே தெரியாமல், கபாலியாக ரஜினி காட்டும் சங்கடமும் வேதனையும் மிக அற்புதம். ரஜினி ஏற்ற கதாபாத்திரங்களிலே ஆகச் சிறந்த கதாபாத்திரமாக இதைக் கொள்ளலாம். அவரது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டுமென்ற ரஞ்சித்தின் தீர்மானமும் உறுதியும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

25 ஆண்டு வருடங்கள் மலேஷியச் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வருகிறார் தாதாவான கபாலி. அவரது மனைவியின் கதியென்னானது என்றும், அவரைச் சிறைக்கு அனுப்பிய எதிரிகளின் பதற்றமும்தான் படத்தின் கதை.

‘பொம்பளைங்க வீட்டு நிலைமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை’ என்ற வசனம் பேசிய ரஜினியை, “யார் முடிவு பண்றது? இவங்க மட்டுந்தான் இப்படி டிரஸ் பண்ணணும்னு?” என மனைவியின் அரசியல் யோசனையை ஏற்கும் சூப்பர் ஸ்டாராக மிளிர விட்டுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். பல வருடங்கள் கழித்து குமுதவள்ளியை கபாலீஸ்வரன் பார்க்கும் பொழுது வரும் ‘மாயநதி’ பாடலில், ‘யானை பலம் இங்குச் சேரும் உறவிலே// தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்’ என்ற உமாதேவியின் வரிகளும் கதை சொல்கின்றன. படத்தின் பலம் அதன் எமோஷனல் காட்சிகளே! தன் மகளைக் கண்டதும்தான் தன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாக நினைக்கிறார் கபாலி. ரஜினி படத்தில் இரண்டு கதாநாயகிகள் சும்மா காதலிக்கப்பட  என்றில்லாமல், கதாபாத்திரங்களாக ஈர்க்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார் இயக்குநர். தன்ஷிகாவும், ராதிகா ஆப்தேவும் கச்சிதமாக வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஒரு கொலையைச் செய்துவிட்டால் மக்களின் ஏக ஆதரவோடு அவன் தலைவனாகி விடுகிறான் என்ற பொய்யான கற்பிதத்தை அச்சுறுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா பதிகிறது. படத்தில் எத்தனை கொலைகள்!! அதுவும் விதம்விதமாய்க் கொல்கிறார். ஆண்டையரின் பூரண ஆசிகளோடு, ‘U’ செர்ட்டிஃபிகேட் பெற்று குழந்தைகளின் பார்வைக்கும் வன்முறையைக் கொண்டாட்டமாகக் கொண்டு வந்துவிட்டார்கள். தமிழ் நண்டு கதையை ஃபீல் செய்து சொல்லும் கபாலி, லோகநாதன், வீரசேகரன் போன்றவர்களையும், அவர்களின் அடியாட்களாகப் பஞ்சம் பிழைக்கும் தமிழர்களையும் கொன்று குவிக்கிறார் கபாலி. நல்ல தாதா என்றால் கெட்ட தமிழ் நண்டுகளைக் கொன்று எஞ்சியவர்களுக்கு ‘ஃப்ரீ லைஃப்’-இல் இடம் தருவது போலும்.

கேங்ஸ்டர் படம் என்றதும், சிக்கினவர் காதில் ரத்தம் வர வைக்கக் கிடைச்சதுடா வாய்ப்பு என்று இசையைப் பார்வையாளர்களின் காதில் போட்டுத் தீட்டாமல், படம் பார்க்கும் அனுபவத்தை ரம்மியமாக்கியுள்ளார் சந்தோஷ் நாராயணன். ‘மாயநதி’ பாடல் அலாதியான உணர்வைத் தருகிறது. படத்தின் கதையோடு இழையும் பின்னணி இசை படத்தின் மிகப் பெரிய பலம். ரஜினியை மிகவும் ரசித்து படம் பிடித்திருப்பார் போல முரளி. அவரது ஒளிப்பதிவில், படம் முழுக்க ரஜினி அவ்ளோ ஸ்டைலாக ஈர்க்கிறார். என்ன தாடி எடுத்ததும்தான் ரஜினியின் முகத்தில் கம்பீரம் குறைந்து தளர்ச்சி தெரியத் தொடங்கி விடுகிறது.

‘கபாலியைக் கொல்லணும்’ என்ற ஒற்றைப் பரிமாண நோக்கு கொண்ட வில்லன் படத்தின் மிகப் பெரிய குறை. ‘உனக்குப் பிடிக்கலைன்னா அப்படித்தான் கோட் சூட் போடுவேன்டா. கால் மேல் கால் போட்டு உட்காருவேன்டா. ஸ்டைலா.. கெத்தா..’ என்ற வசனம் தந்திருக்க வேண்டிய உணர்வெழுச்சி ரஜினியின் வசீகரமான குரலையும் மீறி அடங்கிப் போகிறது. டோனி லீக்கு தன் பிசினஸ் பாழானதில்தான் உண்மையான வருத்தமும் கோபமும். டோனி லீக்கு வீரசேகரனும் ஒன்றுதான், கபாலியும் ஒன்றுதான். வீரசேகரனுக்கும் தமிழ் மாறனுக்கும் வேண்டுமானால் கபாலி பிறப்பால் குறைவாகத் தெரியலாம். ஆனால் டோனி லீயோ க்ளைமேக்ஸில் யோசித்து யோசித்துப் பேசும் வசனமெல்லாம் அபத்தத்தின் உச்சம். வீடியோ கேம்தனமான க்ளைமேக்ஸ், மொத்தமாக படம் தரும் அனுபவத்தைக் குறைக்க முயல்கிறது. வசனங்களில் திணிக்கப்பட்ட அபாரமான அரசியல் திரைக்கதையில் பிரதிபலிக்காததும் துரதிர்ஷ்டவசமானது.

இவ்வளவு வலிமையான க்ளைமேக்ஸைப் போகிற போக்கில் வைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். நல்ல தாதா கெட்ட தாதாக்கு மட்டும் தலைவலி இல்லை, மக்களைச் சமமாகப் பாவிக்காத அரசாங்கத்துக்கும் தலைவலியே!

கபாலி – நெருப்புடா!

1 Comment

Comments are closed.