Shadow

கமரகட்டு விமர்சனம்

கமரகட்டு விமர்சனம்

தான் கற்ற மொத்த வித்தையும் இறக்குவது என்றால் என்ன? அதைத் தெரிந்து கொள்ள அவசியம் நீங்க கமரகட்டு பார்க்கவேண்டும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் ராம்கி ராமகிருஷ்ணன் ஆவார்.

திருவண்ணாமலையில் பன்னிரெண்டாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் படிக்கும் இரண்டு மாணவிகளைக் காதலிக்கிறார்கள். கல்லூரி போன முதல் நாளே காசு, பணம், துட்டு, நகை, சொத்து என வேறிருவரை அம்மாணவிகள் காதலிக்கத் தொடங்குகின்றனர். வெகுண்டெழும் 12வது தேறாத அம்மாணவர்கள், காதலியின் (மாணவிகள் இருவரும் சகோதரிகள்) தாயிடம் நியாயம் கேட்கின்றனர். அந்தம்மாவும், ‘எவ்ளோ நல்ல பசங்களா இருக்கீங்க?’ என அடுத்த நாளே ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்து கல்யாணம் செய்ய வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குகிறார்.

பசங்க செம ஹேப்பியாகி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டான கமரகட்டை காதலியின் அம்மாவுக்குத் தருகின்றனர். ஆனால் அந்தம்மா வில்லியாகி மாணவர்களை ஆள் வைத்து மலையில் இருந்து தூக்கி வீசிக் கொன்றுவிடுகிறார். படத்தில் இங்க ஒரு ட்விஸ்ட். மாணவர்கள் மலையில் இருந்து விழும்பொழுது, ஒரு சிவலிங்கத்தின் முன் விழுந்து விடுகிறார்கள். அதனால் சிவனருள் பெற்ற பேய்களாக மாறி, தான் காதலித்த மாணவிகளைப் பிடித்து விடுகின்றனர்.

சிவனருள் பெற்ற பேய்களை ஓட்ட பேயோட்டியான காஞ்சனாவால் முடியவில்லை. ஜவ்வாது மலை சித்தரோ சிவனருள் இருக்கும் பேய்களை ஓட்ட முடியாது என்கிறார். பேயோட்ட வரும் போளூர் பட்டாசு பாய் மண்டையை பேய் உடைத்து விடுகிறது. இண்டர்நேஷ்னல் பேய்களை ஓட்டிய நவீன மலாய் மந்திரவாதிக்கும் மரண பயத்தைக் காட்டி விடுகிறது காதல் வெறி பிடித்த பேய்கள். இந்தப் பேய்களை பின் என்னத்தான் செய்ய முடியும்? ராம்கி ராமகிருஷ்ணனின் இரண்டே முக்கால் மணி நேர நீள திரைக்கதை இதற்குப் பதில் சொல்கிறது.

நாயகர்களாக சாட்டையில் நடித்த யுவனும், சென்னை அமிர்தா புகழ் (ஆடுகளம் நரேனின் மகன்) ஸ்ரீராமும் நடித்துள்ளனர். உயிரைக் கொடுத்து அழுது புரண்டு நடித்துள்ளனர். தொப்பி நாயகி ரக்ஷா ராஜும், மணிஷா ஜித்தும் கதாநாயகிகளாக வருகின்றனர். சித்தராக பாலாசிங் நடித்துள்ளார். அவர் எவ்வளவு நல்ல உள்ளம் படைத்த சித்தரென்றால், கதாநாயகன் பேய்கள் காதலில் வெல்ல (!?) இரண்டு பெண் பேய்களைத் துணைக்கு அனுப்புகிறார். ஆனால் அவர் பாடும் பாட்டு, “பித்து பொய்யடா.. சொத்து பொய்யடா.. நீ பொய்யடா.. நான் பொய்யடா.. இன்று பொய்யடா.. நாளை பொய்யடா.. சிவன் மட்டுமே மெய்யடா” என.! 

படத்தில் சில சுவாரசியமான குறியீடுகள் உண்டு. கதாநாயகிகள், டிஃபன் பாக்ஸில் உள்ள நாயகன்கள் வாங்கிக் கொடுத்த பஜ்ஜியைத் தூக்கிப் போட்டுவிட்டு பணக்காரப் பையன்கள் வாங்கித் தரும் பர்கரைச் சாப்பிடுகின்றனர். பர்கர் சுவையில் மயங்கிய கதாநாயகிகள், கல்லூரி வாசலில் காத்திருக்கும் நாயகன்களுக்கு ஃபோன் செய்து செருப்புக் கடை அருகே காத்திருக்கச் சொல்கின்றனர்.

பேய்கள் ரொம்பவே கதறடித்து விடுகின்றன.