லாப நோக்கத்தோடு சட்ட விரோதமாக ஆடுவதும்; உண்மையில்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் ஆகும். வில்லனான ஏழுமலை முன்னதையும், அதைத் தோற்கடிக்கும் முயற்சியில் நாயகன் தமிழரசன் பின்னதையும் ஆடுகின்றனர். வெற்றி யாருக்கு என்பதே படத்தின் கதை.
ஒரு சிறுமியின் அழகான முகத்தில் இருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தாக்கம் மறையும் முன், ஒரு விபத்தின் மூலமாக படம் வேகம் எடுக்கிறது. சிறுமியின் தந்தையான மகேந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. திக்கற்று கதி கலங்கிப் போயிருக்கும் மகேந்திரனுக்கு அக்கறையோடு உதவுகிறார் இன்ஸ்பெக்டர் தமிழரசன். உதவ வந்த இன்ஸ்பெக்டருக்கு அதனால் இக்கட்டு நேருகிறது. மகேந்திரனாக ரிச்சர்ட்டும், தமிழரசனாக நந்தாவும் நடித்துள்ளனர். கள்ளாட்டம் ஆடும் நந்தா தான் படத்தின் நாயகன். நந்தா காட்டும் விறைப்பும் தீவிரமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையையும் மனநிலையையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.
பணத்தை ஆட்டோவில் இருந்து எடுத்தது யாரென தமிழரசன் துப்பறியும் முதல் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. இடைவேளைக்குப் பின், அனைத்தின் பின்னுள்ள சூத்ரதாரி ஏழுமலை தானென இயக்குநர் சொல்லி விடுவதால் விறுவிறுப்பு அதன் பின் குறைந்து விடுகிறது.
இரண்டாம் பாதி திரைக்கதையிலும், வில்லன் கதாபாத்திர வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குநர் G.ரமேஷ். ஏழுமலையின் அறிமுகத்தில் சிறந்த குணசித்திரப் பாத்திரமாகக் காட்டி விட்டு, அவரை வில்லனாக இரண்டாம் பாதியில் காணும் போது மனம் சட்டென ஒட்டவில்லை. வலிந்து திணிக்கப்பட்ட வில்லனாகத் தெரிகிறார். அவர் ஏன் வில்லன்? எப்படி வில்லன்? என கதையோடு சொல்லாமல் அவருக்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயமும் துருத்திக் கொண்டே தெரிகிறது. நாயகனின் கள்ளாட்டத்தைக் கூட யூகிக்க முடிவதால் சுவாரசியம் சுத்தமாக வடிந்து விடுகிறது.
இயக்குநரே ஒளிப்பதிவும் செய்துள்ளார். ஒரு ஃப்ரேமில், மதுரைக் கோயிலின் 14 கோபுரங்களில் 9 கோபுரங்களைக் காட்டியிருப்பார். இந்தப் படம், மருத்துவர் மீதும் காவல்துறையினர் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் எடுத்துள்ளனர். ‘நம்மை நம்பி வந்துட்டாங்க. பயமுறுத்தாமல் நல்லதே நினைக்குமென நம்பி முழு முயற்சி மேற்கொள்ளலாம்’ என மருத்துவராக நடிக்கும் குமார் நடராஜன் சொல்லும்போது, கொள்ளையடிக்கத்தானே தனியார் மருத்துவமனை என்ற பொதுப்புத்தி கொஞ்சம் தளருகிறது. ரித்விகா, வயலா, அதினா என படத்தில் நடித்த மூன்று சிறுமிகளுமே அட்டகாசமாய் நடித்துள்ளனர்.