Shadow

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

Krishnan Nambi

கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை.

வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) வசித்து வந்த அழகியபாண்டிபுரம் எனும் கிராமத்திலிருந்து ஒரு நபர் வந்து எங்கள் பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பாவை உடனேயே அழைத்து வரவேண்டும் என்கிற என் சித்தப்பாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார்.

அப்பா பதறியடித்துக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அதோடு இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. தவறவிட்டால் மறுநாள்தான். ஆனால் அப்பா 9:30 மணி பேருந்தைப் பிடித்துவிட்டார்.

எங்கள் வீட்டில் அன்றிரவு அனைவரும் மிகவும் கவலையுடன் இருந்தார்கள். மறுநாள் காலை எழுந்த பின்பும் எங்கள் வீட்டில் பதற்றம் குறையவில்லை. வீட்டிற்குப் பலரும் வந்து போனார்கள்.

மறுநாள் எங்கள் தகப்பனார் சிரித்த முகத்துடன் வீட்டிற்கு வந்து, பாட்டிக்கு எல்லாம் சரியாகிவிட்டது; பயப்பட ஒன்றுமில்லை எனச் சொன்ன பிறகு தான் எல்லோரும் ஆசுவாசமடைந்தனர்.

ஒரு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குப்பிறகு, 1950இல் மீண்டும் இதே போல் செய்தி வந்தது. இப்போது எங்கள் அப்பா முன்பு போல் பதற்றமடையவில்லை. மாறாக இளமுறுவலுடனேயே அச்செய்தியை எதிர்கொண்டார். இதுவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்கிற நம்பிக்கை அவரது பேச்சிலும் தோரணையிலும் காணப்பட்டது. எனவே புறப்படுவதில் அவசரம் எதுவும் காண்பிக்கவில்லை.

சற்று நேரத்தில், வேறொரு நபர் வந்து எங்கள் பாட்டி காலமாகிவிட்ட செய்தியைச் சொன்ன போது தான் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அப்பா மிகவும் ஆடிப் போய்விட்டது போல் தோன்றியது. அழ ஆரம்பித்து விடுவார் போல் உதடு ஒரு பக்கமாகக் கோணியது. என் அண்ணன் நம்பி தான் அவரை சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

இப்போது போல் வாடகைக் கார் வசதியெல்லாம் அப்போது கிடையாது. முழுக்க முழுக்க பேருந்தையோ, மாட்டு வண்டியையோதான் நம்ப வேண்டியிருந்தது. அப்பாவின் நண்பர் எஸ்.பி.நாராயண அய்யர் தனது மாட்டு வண்டியையும், வண்டிக்காரர் அருணாச்சலம் பிள்ளையையும் கொடுத்து உதவினார். எல்லோரும் 8 மைல் தொலைவிலிருந்த அழகியபாண்டிபுரம் கிராமத்திற்குப் புறப்பட்டோம்.

பாட்டியின் மரணம் அவரது வயதான காலத்தில் ஏற்பட்டதால் ஊரில் இருந்த உறவினர்கள் துக்கத்தை அதிகம் வெளிக் காண்பிக்காமல், சாவைக் கொண்டாடினார்கள் என்பது போல் காணப்பட்டார்கள். ஆனால் அப்பா, பாட்டியின் சடலத்தைப் பார்த்தவுடன் வெளிப்படையாக அழுதார். அப்பா அழுது அப்போதுதான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 53.

அப்பா சிறு வயதில் ஏழையாக இருந்து, இப்போது தனது வியாபார முயற்சிகளால் சற்று வசதியுடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார். பாட்டி வழியில் ஊரில் ஏராளமான உறவினர்கள் இருந்தனர். எனவே மிகுந்த பொருட்செலவில் பாட்டியின் 13 நாட்கள் அடியந்திரங்களை நடத்துவதெனத் தீர்மானமாயிற்று. வீட்டில் ஏராளமான சிறுவர்கள் வந்து சேர்ந்ததில் இந்த நாட்கள் எனக்கு வெகு உற்சாகமாகவே கழிந்தன. நான்கு குழந்தைகள் பிறந்து அவை அனைத்தும் ஒன்று இரண்டு வயதிலேயே இறந்து போய்விட்ட நிலையில், ஐந்தாவதாகப் பிறந்த நம்பியின் மீது பாட்டிக்கு அலாதியான பாசம் இருந்தது. நம்பியும் பாட்டியிடம் மிகவும் நெருக்கமாகத்தானிருந்தார். ஆனால் நம்பி வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதிகப் பிரியம் வைத்திருந்த பாட்டியின் மரணம் அவரைப் பாதித்ததாகவே தோன்றியது.

எங்கள் பாட்டி வீட்டின் வெகு அருகில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. வெங்கடாசலபதி பெருமாள். மாலை வேளைகளில் நம்பி இக்கோவிலிற்குச் சென்று விடுவார். சில நாட்கள் என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஒருநாள் கூட கருவறை அருகில் சென்று, நம்பி சுவாமி தரிசனம் செய்ததை நான் பார்த்ததில்லை.

கோயிலைச் சுற்றி நீண்ட பிரகாரங்கள் உண்டு. கோயில் மதில் சுவர்களும் மிகவும் உயரமாக இருக்கும். கருங்கல் பாவிய பிரகாரத்திற்கும், மதில் சுவருக்குமிடையிலான இடங்களில் பூச்செடிகள் நந்தவனம் போல் பூத்துக் குலுங்கும் காட்சி மிகவும் ரம்மியமாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கும். நந்தியாவட்டை, செவ்வரளி, தங்க அரளி, வெள்ளையரளி, பவழமல்லிப் பூக்கள். கொன்றை மரத்தில் இருந்து உதிர்ந்து கொண்டேயிருக்கும் கொன்றைப்பூக்கள்! பூக்கும் செண்பகம் காலை வேளைகளில் ஊரையே மணக்கச் செய்யும். இந்த ரம்மியமான காட்சிகளைத் தன்னந்தனியே, ஏதாவது செடியின் கீழ் அமர்ந்து ரசித்துக் கொண்டேயிருப்பார் நம்பி.

கோவிலின் வடக்குப் பிராகரத்தில் சிவனுக்கு என சிறியதாக ஒரு சன்னதி உண்டு. சிவனை தரிசனம் பண்ணிவிட்டு, அந்தச் சிறிய பிரகாரத்தைச் சுற்றி வரலாம்.

ஒரு நாள், எங்கள் வீட்டு வேலைக்காரியின் மகன் ஒரு குருவியைக் கையில் வைத்துக் கொண்டு, அவனையொத்த சிறுவர்களிடம் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தான். சின்னக்குருவி சிவன் கோயில் பிராகரத்தின் வடபுறமுள்ள மதிலின் சிதிலமடைந்த பகுதியின் பொந்து ஒன்றிலிருந்து கண்டெடுத்தானாம். என் அருகில் வந்தவுடன் நான் மிரண்டு போய், அங்கிருந்து ஓடிப் போய் என் அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னேன். நம்பி பதறியடித்துக் கொண்டு வேகமாக அந்தப் பையன் இருந்த இடத்திற்குப் போகலானார். நம்பி வேகமாக வருவதைப் பார்த்த அப்பையன் அங்கிருந்து ஓடி விட எத்தனித்தான். எப்படியோ அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, நைசாக அக்குருவியைத் தனது கையிலேந்தி, அதனை மென்மையாகத் தடவிக் கொடுத்தார். ஏற்கெனவே எங்கோ அடிபட்டி அவதிப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அக்குருவி சற்று நேரத்தில் செத்துப் போயிற்று. குருவியும் அவருக்கு நெருக்கமானது தான். இந்த மரணம் வேறு வடிவில் ‘நீலக்கடல்’ கதையில் வரும்.

இதற்கு முன்பு, தனது கடைசித் தம்பி ராமகிருஷ்ணன் அவனது இரண்டாவது வயதிலும், இப்போது பிரியமான பாட்டியும், இந்தச் சின்னக் குருவியுமாக அவருக்குப் பிரியமான மூன்று பேரின் மரணங்களையும் வெகு அருகில் பார்த்துவிட்ட நம்பிக்கு, மரணத்தைப் பற்றிய விசாரணையைத் தனது முதல் கதையின் மையக்கருவாகக் கொண்டது மிகவும் இயல்பானது. இந்த மூன்று மரணங்களுமே, “நீலக்கடல்” கதையில் வேறு வேறு ரூபத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கதை இப்படி ஆரம்பிக்கிறது. “இப்போதெல்லாம் நான் ரொம்பவும் கோழையாகிவிட்டேன். வயசு வளர வளர என் கோழைத்தனமும் வளர்ந்து கொண்டே வருகிரது”…… “நான் ஏன் இப்படிப் பயந்தாங்கொள்ளியாகி விட்டேன்? சின்ன வயதில் நான் எத்தனை தைரியசாலியாக இருந்தேன். சின்ன வயதில் நான் மிகுந்த தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தேன்”.

சிறு வயதில் தைரியசாலியாக இருந்தவன், வயதான பிறகு கோழையாக மாறி, தனது கதையைச் சொல்வதாகக் கதை ஆரம்பிக்கிறது.

இக்கதை எப்படி ஆரம்பமாகிறது என்று சுந்தர ராமசாமி இக்கதை பற்றிய விமர்சனம் ஒன்றில், கதையில் சிறுவனாக இருக்கும் கதை சொல்லி பயந்த சுபாவம் கொண்டவன். அவன் ஒருநாள் தன் பாட்டியிடம், “நீ எப்போ சாவாய் பாட்டி” என்று கேட்டதுதான் கதையின் ஆரம்பம் எனச் சொல்லவேண்டும் என்பது போல் சொல்லியிருக்கிறார்.

மேலும், “ஒரு சிறுவனுக்கு இளம் பருவத்திலேயே மரணத்தைப் பற்றிய விசாரணையும், பயமும் ஏற்படக் காரணம் என்ன?” என்று ஒரு கேள்வியையும் வைத்திருக்கிறார்!

இக்கதை நாயகன் சிறுவனாக இருந்த போது தைரியசாலியாகவும், வயது வந்த பின்பு, பாட்டியின் மறைவுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கோழையாக மாறி சாவைக் கண்டு பயப்படுவதாகும் கிருஷ்ணன் நம்பி தன் ‘நீலக்கடல்’ கதையை நகர்த்திச் செல்கிறார். அப்படியிருக்க, சுந்தர ராமசாமி அதற்கு நேர்மாறாக எப்படிக் கூறுகிறார் என்பது புரியவில்லை.

கதையின் படி சிறுவனாக இருந்த போது மரணத்தைப் பற்றிய பயமே அச்சிறுவனுக்கு இருக்கவில்லை. மரணத்தை எப்படி மகிழ்ச்சியாக எதிர் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தவன், அதற்கு பாட்டி அளித்த விளக்கங்கள் அச்சிறுவனுக்கு போதுமானதாக இருந்திருக்கிறது. தனது அன்பிற்குரிய தம்பி ராமகிருஷ்ணனின் மரணமும், ஒரு அப்பாவி குருவியும் மரணமடைந்ததை அச்சிறுவன் அருகிலிருந்து பார்த்திருக்கிறான். அதுவரை இருந்த ஒன்று, இப்போது இல்லை. எனவே மரணம் என்றால் என்னவென்றே தெரியாத சிறுவன், அந்த இல்லாத ஒன்றைத் தன் பாட்டியிடம் கேட்பது வெகு இயற்கையானது. அதை, மரணத்தைப் பற்றிய சிறுவனின் விசாரணையாக எடுத்துக் கொள்ள முடியாது.

‘நீலக்கடல்’ கதையை நம்பி ஆரம்பத்திருப்பது தான் சரியான ஆரம்பம். ஆனால் சுந்தர ராமசாமி, ‘நீ எப்போ சாவாய் பாட்டி?’ என்று கேட்ட இடத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என நம்பியின் இரண்டு மூன்று பக்க விவரிப்புக்குப் பின் வரும் ஒரு இடத்தைக் குறிப்பிடுகிறார். பென்சிலினால் எழுதப்பட்ட இந்தக் குறிப்பைத் தனது சொந்த உபயோகத்திற்கு என சுந்தர ராமசாமி வைத்திருந்த ‘ஸ்நேகா’ வெளியீடான கிருஷ்ணன் நம்பி கதைகள் புத்தகம் ஒருமுறை என் கைக்கு வந்த போது படித்தேன்.

இக்கதை நம்பி எழுத ஆரம்பித்த முதல் கதை. பதினெட்டே வயதான காலத்தில் நம்பி எழுத முற்பட்ட போது, சிறுகதை உருவம் பற்றிய விசேஷ அறிவு ஏற்பட்டிராத காலம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால், இக்கதையை சில பக்கங்கள் எழுதிய பிறகு அதைத் தொடர்ந்து எழுதி முடிக்காமல் சில வருடங்கள் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் கிருஷ்ணன் நம்பி. அதற்குள் அவரது வேறு பல கதைகள் பிரசுரம் கொள்ள ஆரம்பித்து விட்டன. ‘சுதந்திர தினம் (1951)’ முதல் ‘காலை வரை’ சிறுகதை வரை சுமார் 9 சிறுகதைகள் பிரசுரமான பின்பே, ‘நீலக்கடல்’ முழுமை பெற்று 1961 இல் ‘சரஸ்வதி’ பத்திரிகையில் வெளிவந்தது.

இக்கதையை எழுதி முடிக்கும் தருவாயில் நம்பிக்கு சிறுகதை உருவம் பற்றிய அறிவு மிகவும் கூர்மையாக உருவெடுத்தாகிவிட்டது. ஆரம்பம் தவறு என்று நினைத்திருந்தால் எளிதாக மாற்றியிருக்க முடியும். ஆனாலும் கூட, இதுகதையின் துவக்கத்தை எப்படி முதலில் ஆரம்பித்தாரோ அப்படியே தக்க வைத்துக் கொண்டார். இக்கதையை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவரது முடிவில் அவர் தீர்மானமாகவே இருந்தார்.

கதையில் வரும் பாட்டி தாய் வழிப்பாட்டியா அல்லது தந்தை வழிப்பாட்டியா என்பது சுட்டப்படவில்லை என ஒரு குற்றச்சாட்டை சுந்தர ராமசாமி, அவரது விமர்சனத்தில் வைக்கிறார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. “வெளிப்படையாகக் கொட்டி முழுக்குவதல்ல படைப்பு. படைப்பு என்பது சூட்சமமானது. குறிப்புணர்த்துவது. தொனி கொண்டது. வரிகளுக்கிடையே அமைதி கொள்வது” எனக் கூறும் சுந்தர ராமசாமிக்கு, சூட்சமமாக, தாய் வழிப்பாட்டியா அல்லது தந்தை வழிப்பாட்டியா என்று கதையில் நம்பி உணர்த்தியுள்ளது எப்படி கண்ணில் படாமல் போயிற்று!

பேரன் கேட்கிறான் பாட்டியிடம், “நீ எப்போ சாவாய் பாட்டி?”

பாட்டிக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது. “இப்போதே சாகிறேன்டா! நீயே என்னை வெட்டிக் கொன்று விடு. அந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வா. என் தலையில் பொட்டு விடு. செத்தொழிந்து போய் விடுவேன். உன் அப்பனுக்குப் பதில் நீயே கொண்டு போய் வச்சுடு.”

இந்த வரிகளில் இருந்து, தாய் வழிப் பாட்டியா தந்தை வழிப் பாட்டியா எனப் படிக்கும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இப்படிச் சில விமர்சனங்களை சுந்தர ராமசாமி வைத்திருந்தாலும், மொத்தத்தில் ஓரளவு பாராட்டவே செய்திருக்கிறார்.

ஆனால், எழுத்தாளர் ம.மணிமாறனின் மதிப்பீடு, அணுகுமுற எப்படியென்று பார்க்கலாம்.

‘புதிய புத்தகம் பேசுகிறது’ பத்திரிகையில் (ஜூலை 2013), “விடுபட்ட சொற்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மாபெரும் எழுத்துக் கலைஞர்கள் என்று இவரது வர்ணனையில் கு.அழகிரிசாமியையும், கிருஷ்ணன் நம்பியையும் கூறும் இவர், கிருஷ்ணன் நம்பியின் ‘நீலக்கடல்’ பற்றி இக்கட்டுரையில் எழுதியிருக்கும் சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டுவது பயனுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்.

“ஒரு படைப்பாளியின் வலிமையை, ஒரு கதையிலேயே கண்டடைய முடியும். பி.எஸ்.ராமைய்யாவின் ‘நட்சத்திரக் குழந்தை’களுக்குச் சமமான குழந்தைகளின் மன உலகை, நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை விரல் விட்டு எண்ணி விட முடியும். நடசத்திரக் குழந்தைகளுக்கு அடுத்து நம்பியின் ‘நீலக்கடல்’ அப்படியான அழகான கதை. சிறுகதைகளின் இலக்கணத்தை உடைத்த கதையிது.”

“கதைகளுக்குக் கதைகளின் அழுக்கை மட்டுமல்ல, இப்பேருலகின் சகல அசிங்கங்களையும் துடைக்கத் தெரியும் பேராற்றல் உண்டு என்பதை பாட்டியின் கடவாய் வெள்ளையைக் கண்டுணரும் பேரக் குழந்தைகளின் மனங்களுக்குள் ஊடுருவக் கண்டவர் நம்பி.”

“கிட்டிப்புள்ளால் அடிபட்டுச் செத்த குருவிக்கு சொர்க்கமா? நரகமா? எனத் துவங்கிய கதை, மரணத்தின் சகல புதிர் பாதைகளிலும் நுழைந்து திரும்புகிறது.”

இவ்வாறு ‘நீலக்கடல்’ கதை பற்றிக் கூறும் ம.மதிமாறன், நம்பியைப் பற்றி மேலும் கூறுகையில், “இருப்பின் மீது அசாத்தியமான கேள்விகளை எழுப்புகிறவன் தானே கலைஞன்? கிருஷ்ணன் நம்பி மகா எழுத்துக் கலைஞன்” என மதிப்பீடு செய்கிறார்.

அந்தக் காலத்தில் தமிழில் ‘கலைமகள்’ ஒரு முக்கியமான பத்திரிகை. ஒரு சமயம் அவர்கள் பச்சை, சிகப்பு, நீலம் எனப் பல நிறங்களைக் கூறி, அந்த நிறங்களுக்குப் பொருந்தும்படியான கதைகளை வரவேற்று, அதில் தேர்வு பெற்ற கதைகளைப் பிரசுரம் செய்தனர். ‘நீலக்கடல்’ கதையை ‘நீலம்’ நிறத்தைக் குறிக்கும் வகையிலான கதையாக கலைமகளுக்கு அனுப்பி இருந்தார் நம்பி. ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன், இக்கதையைத் தேர்வு செய்யவில்லை. அவருக்குத் திருமணம், உபநயனம், காது குத்தல் போன்ற மங்கலகரமான நிகழ்வுகளைக் கொண்ட கதையாக இருந்தால் பிடித்திருந்திருக்கும். மரணத்தைப் பற்றிய கதையைப் பிரசுரிக்கலாமா? அது அமங்கலமல்லவா? எனவே கிடப்பில் போட்டு விட்டார். திரும்பவும் அனுப்பவில்லை. கலைமகளில் தாமோதரன் என்பவர் அப்போது உதவி ஆசிரியராக இருந்தார். அவருக்கு இக்கதை மிகவும் பிடித்திருந்தது. கி.வா.ஜ.வின் மனதை மாற்றிப் பிரசுரம் செய்து விடலாம் எண்ணி, பல மாதங்கள் அக்கதையை அவரே வைத்திருந்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. நம்பி எழுதிய கடிதத்திற்கேற்ப சில மாதங்கள் கழிந்து, அக்கதை திரும்ப வந்து சேர்ந்தது.

தனது பதினெட்டாவது வயதில் எழுத ஆரம்பித்து, இடையில் கிடப்பில் போட்டு, கதையை முழுமையாகப் பூர்த்தி செய்த பொழுது, நம்பியின் வயது 28. பின் இக்கதை 1961 இல், ‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்தது. நம்பியின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை இக்கதை என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மை தான். ஏனெனில் அது கிருஷ்ணன் நம்பியின் கதை!

– கிருஷ்ணன் வெங்கடாசலம்