Shadow

கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்

Kedi billa
தனது முதல் மற்றும் மூன்றாவது கதாநாயகனுடன் இணைந்து தனது நான்காவது படத்தைப் படைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
கேசவனும், பட்டை முருகனும் இணைப்பிரியா நண்பர்கள். வேலையும் பொறுப்பும் அற்றவர்கள். எங்கே காதலித்தால் நட்பு பிரிந்து விடுமோ என காதலிக்காத உத்தமர்கள். ஆனால் விதியாகப்பட்டது வலியது என்பதால்.. பட்டை முருகன் பாப்பாவைப் பார்க்கிறான்; கேசவன் மித்ர மீனலோஷனியைப் பார்க்கிறான். காதல் வந்தாலும் பொறுப்பு வந்தபாடில்லை. வியர்வை சிந்தாமல் அரசியலில் குதித்து பொறம்போக்கு நிலங்களை தங்கள் போக்கு நிலங்களாக மாற்றிக் கொள்ளும் உயரிய லட்சியத்துடன் வலம் வருகிறார்கள்.தங்கள் காதலிகளையும் லட்சியத்தையும் அடைந்தார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
கேடித்தனம் இல்லா பில்லா கேசவனாக விமல். பசங்க, களவாணி, தூங்கா நகரம், கலகலப்பு என தொடர்ந்து பிரதி மாறாத கதாபாத்திரங்கள் கொண்ட படத்தின் வரிசையில் மேலும் ஒன்றாக இந்தப் படமும். கில்லாடித்தனம் இல்லா ரங்கா முருகனாக சிவ கார்த்திகேயன். மெரினாவில் நடித்த சிவ கார்த்திகேயனின் மீசையைப் பெரிதாக்கி அப்படியே பட்டை முருகனாக இந்தப் படத்தில் கொண்டு வந்து விட்டார் பாண்டிராஜ். நகலகம் வைத்திருக்கும் பாப்பாவாக ரெஜினா கெசண்ட்ரா. மருத்துவமனையில் டோக்கன் அளிக்கும் மித்ர மீனலோஷனியாக பிந்து மாதவி.
தனித் தனி காட்சிகளாக சில இடங்களில் சுவாரசியம் இருப்பினும்.. ஒட்டுமொத்த படமாக சோர்வினையே தருகிறது. நாடகத்தனம் அதிகம் விரவி கிடக்கிறது. எல்லாமே கிளிஷே காட்சிகளாக உள்ளன. புதிய முகமாக திரையில் தெரிவதால்.. ரெஜினா வரும் காட்சிகள் மட்டும் சற்றே ஆறுதல் (ஆனால் ரெஜினா ஏற்கெனவே இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்). டெல்லி கணேஷ் போன்ற மூத்த கலைஞர்களை கூட ஏனோ தானோ என உபயோகித்து கடைசியில் கருத்து சொல்ல வைத்து விட்டார் இயக்குநர்.
“பழக்கப்பட்ட பழைய கதை தான், பக்கத்து வீட்டுக் கதை தான். ஆனால் சொல்லும் விதத்தில் நெஞ்சை அள்ளும் விதமாக நிச்சயம் இருக்கும். எவ்வளவு சீரியசான விஷயத்தையும் இவ்வளவு நகைச்சுவையாகச் சொல்ல முடியுமா? என்று பேச வியக்கும்” என தனது படத்தினைப் பற்றிச் சொல்லியுள்ளார் பாண்டிராஜ். நகைச்சுவை(!?) என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்கள் இன்னும் எத்தனை அபத்தங்களை தான் பார்க்க வேண்டியிருக்குமோ? இந்தப் படத்தில் வரும் ஓர் அழகான உதாரணம்: விமல், “சாப்பிடுங்க அப்பா” என நாயை சாப்பிட சொல்வது. பரோட்டா சூரி, நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் வரும் ‘சின்ன மணி’) போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக உள்ளனர் திரையில். யுவன் ஷங்கர் ராஜா ஒலிப்பதிவும், விஜய் ஒளிப்பதிவும் பாண்டிராஜின் திரைக்கதை போலவே படத்திற்கு உதவவில்லை.

Leave a Reply