Shadow

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

Crimson Peak tamil Review

க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம்.

எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை.

‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என அழைக்கின்றனர். செம்மமண் நிறைந்த தரை மீது பனி பொழியும் கலவையான இடத்தில் அமைந்த மாளிகையை அவர்கள் அப்படி அழைக்கின்றனர். இந்த உண்மை எடித்துக்குத் தெரிய வரும் முன்பே, எல்லாம் கை மீறிப் போய்விடுகிறது.

போதிய பணமின்றி செப்பனிடாத காரணத்தால், தாமஸ் ஷார்ப்பின் மாளிகையான க்ரிம்ஸன் பீக்கின் தோற்றமே அச்சுறுத்தும் விதமாய் விசித்திரமாய் உள்ளது. கதவைத் திறந்தால், மாளிகைக்குள்ளேயே நேரடியாக பனி பொழிகிறது. வெளியில் வீசும் காற்றுக்கு, மொத்த மாளிகையுமே குலுங்கி தாளம் எழுப்புகிறது. அம்மாளிகை தன்னுள் பல ரகசியங்களைப் புதைத்து வைத்துள்ளது. அந்த ரகசியங்கள், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத் துடித்த வண்ணமுள்ளன. மாளிகைக்கு வந்த நாள் முதல் எடித்தை பேய்கள் அச்சுறுத்துகின்றன. எனினும், இதை பேய்ப்படம் என்ற வழக்கத்திற்குள்ளும் சுருக்கி விட இயலாது.

ஆனாலும், வழக்கமான பேய்களை மீண்டும் திரையில் உலவ விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் இயக்குநர் கியர்மோ டெல் டோரோ (Guillermo del Toro). நியூ யார்க்கின் பஃபலோவைச் சேர்ந்த எடித்தின் தாய் அச்சுறுத்தும் பச்சை நிறப் பேயாகவும், வட இங்கிலாந்தான கம்பர்லேண்டின் க்ரிம்ஸன் பீக்கைச் சேர்ந்த பேய்கள் அருவருப்பூட்டும் செந்நிறத்திலும் உள்ளார்கள். ஏனெனில் க்ரிம்ஸன் பீக்கில் இறந்தவர்கள் செம்மண்ணில் புதைக்கப்பட்டவர்களாம். மாளிகைகள், மாளிகையின் உட்புற அலங்காரங்கள், கதாபாத்திரங்களின் உடைகள் என படத்தின் கலை இலாகாவினர், திரையை விட்டு பார்வையை விலக்க முடியாதளவுக்கு மெனக்கெட்டு செறிவூட்டியுள்ளனர். ஆதலால், வழக்கமான கதைதானே என்ற குறை பெரிதும் நம்மைப் பாதிக்கவில்லை.

Lady Lucille Sharp“என் கதைகளில், பேய்களை விட மனிதர்களே ஆபத்தானவர்களாக இருப்பர்” என்பார் இயக்குநர் கியர்மோ டெல் டோரோ. ‘க்ரிம்ஸன் பீக்’ எனும் படத்தை ரசிக்க இது ஒரு முக்கியமான அளவுகோலாகக் கொள்ளலாம். இல்லையெனில், சுலபமாக ‘மொக்கைப் பேய்ப்படம்’ என புறந்தள்ளி விடக் கூடிய வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்படத்தில் வரும் பேய்கள், தீதெவும் செய்திடாத மாய உருவங்கள் மட்டுமே! ஆனால், மனிதர்கள் அதற்கு நேர்மாறானவர்கள். க்ரிம்ஸன் (சிவப்பு) என பெயர் வைத்ததாலோ என்னவோ இரத்தம் அதிகமாகச் சிந்துகிறார்கள் படத்தின் கதாபாத்திரங்கள்.

எடித்துக்கும், தாமஸ் ஷார்ப்புக்கும் இடையே ஒரு மெல்லிய காதலுண்டு. அந்தக் காதல் கிளறிவிடும், தனக்கு மட்டுமே உரியதென உரிமைக் கொண்டாடுதல் (possessiveness) என்ற குணம், வன்மமாக மாறுவதுதான் படத்தின் திகில் காரணி. தாமஸீன் சகோதரி லூசில் ஷார்ப்பாக நடித்திருக்கும் ஜெஸிகா சஸ்டைன் தன் பார்வைகளாலேயே மிரட்டியுள்ளார். சக மனிதர்கள் ஆபத்தானவர்களாக மாறுவது பணத்தாசையாலும், மேற்கூறிய பொசசிவ்னெஸாலுமே.!